
தும்பிகள்; ஈசல்கள் அல்ல...
பேரா. த. பழமலய்
தும்பிக்காரன் - கவிமதி
சுறவம் 2005
தமிழ்அலை வெளியீடு
உளுந்தூர்பேட்டை
கவிக்கோ அப்துல் ரகுமான் சப்பானிய அய்க்கூ கவிதையைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு அதனை வளர்த் தெடுத்தவர். அவர் வளர்த்தெடுத்தது அய்க்கூக்களை மட்டுமா? அவரால் இலட்சிக்கவி 'அண்ணன் அறிவுமதி' போன்ற எத்தனையோ கவிஞர்கள் அலை எழுப்பி நிற்கிறார்கள்.
அறிவுமதியின் தனிச்சிறப்பு, அவர் அடிவாழையாய் அநேகம் பேரைக் குலை தள்ள வைத்திருப்பது. அய்க்கூ குலைகள்! அவற்றுக்குப் புகை மூட்டம் போட்டு அவற்றைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் கவிஞர் இ.இசாக்கின் உழைப்புக் குறிப்பிடத்தக்கது.
அறிவுமதியின் சுடரில் தங்கள் திரிகளை ஏற்றிக்கொண்டவருள் ஒருவர் அசன்பசர். இவரின் புனை பெயர் கவிமதி. இவரின் இந்தப் பெயரிலேயே இவரை பிறியாதவராக அறிவுமதியும், அறிவுமதியை பிறியாதவராக இவரும் இருக்கிறார்கள். கருத்தொருமித்தவர்கள். இது நல்லது, தமிழுக்கு நல்லது.
அசன்பசர், "கடல் கடந்தும் தாய் மொழியே பேசும் சங்கு"! அரபுநாட்டிற்கு அம்மாவின் கடிதம் கொண்டுவரும் அருமைத் தமிழுக்காக ஏங்குபவர். தமிழ் பாட்டை பாடுவதற்கு ஒரு தமிழன் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பவர். மொழியும், மொழி உணர்வும் மதம் கடந்தது.
கவிஞர் கவிமதியே சொல்வது போலச் சொட்டு சொட்டான இந்த ஒட்டாத கவிதைகள் (அய்க்கூக்கள்) தாமரை இலைத் தண்ணீர்தான். என்றாலும் இவற்றை ஒன்று சேர்த்தும் பார்க்க முடியும். இதில் இவர் கவி ஆளுமை தெரிகிறது. அனைத்து அக்கறைகளும் தெரிகின்றன.
சிலுவை பிறை ஓம்
எதுவும் காப்பாற்ற வில்லை
சுனாமி.
பேருந்து விபத்து
முகப்பில்
கடவுள் துணை? பிறகு எதுதான் காப்பாற்றும்? துணை?,
ஈரோட்டிலும்
பூசணிப்பூ
சாணி உருண்டையில்
பிறகு... பாலைவனத்தை நனைப்பது வியர்வையாகத்தான் இருக்க முடியும். உழைப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுதான் எல்லாம்.
இப்படி உழைப்பதில் பெருமை கொள்ளும் கவிஞரின் நம்பிக்கைகள் கும்மிருட்டில் மின்மினிகளாய் அழகு சேர்க்கின்றன.
முருங்கை மரத்தில் வந்து ஏறி உலுக்கும் வேதாளத்திடமிருந்து பூக்களைக் காப்பாற்ற செருப்பு, விளக்குமாறு கட்டி வைப்பவர் அந்த நாள் ஆசாமி, அணில்களிடமிருந்து பழங்களைக் காப்பாற்றக் கொய்யா மரத்தில் மணிகளைக் கட்டி வைப்பவர் இந்த நாள் ஆசாமி. இந்த ஆசாமிகளுக்காக முருங்கையிடமும் அணிலிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்பவர்கள்தாம் கவிஞர்கள். "யுத்த களத்தில் தனியாய்ச் சமாதனக் கொடி" பிடிப்பவர்கள்.
கவிமதியின் வெகுமதி பெரும் கவிதைகள்;
ரகசிய மடல்
படித்துவிட்டது
பிரதித்தாள்.
சாய்வுத் தூறல்
சடக்கென விரியுது
வானவில் குடை"
அய்க்கூ எழுதுவது, சிறுவர்கள் மழைக்காலத்தில் தும்பி பிடிக்கும் அனுபவந்தான். அய்க்கூக்காரர்கள், தும்பிக்காரர்கள்! அவர்கள் பிடித்து நமக்காக விடும் தும்பிகள்தாம் இந்த அய்க்கூ கவிதைகள். அவை அழகு,கோத்தும்பி ஓர் அழகு, ஊசித்தும்பி ஓர் அழகு, இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.
புற்றீசல்கள் ஆகிவிடும் போதுதான் அலுப்புச் சலிப்புத் தருவன.
கவிமதி தும்பிக்காரர்... ஈசல்காரர் அல்லர்.
த.பழமலய்
விழுப்புரம்
19.5.06
No comments:
Post a Comment