Wednesday, June 14, 2006

தும்பிக்காரன் விமர்சனம் 01

தும்பிக்காரன் - ஹைக்கூ நூல் விமர்சனம்
கன்னிக்கோயில் இராஜா

'வேற்று நாட்டு சரித்திரங்களை நம்
மொழியில் மொழிபெயர்திடல் வேண்டும்'

என்றான் மாக்கவி பாரதி. அவ்வாறு தற்போது நமது தமிழ் இலக்கியப் பட்டியலில் ஐக்கூ, ஹொக்கூ,கெய்கூ,ஹைக்கூ என்று சொல்லப்படுகின்ற ஜப்பானிய கவிதைகள் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பிடித்துப்போக, படைக்க துவங்கிவிட்டனர்.

இவை தமிழிற்கு வந்தபிறகு, தமிழ் மண்ணிற்கே உரியத்தான பால அங்கத சுவைகளை பொருத்தி எழுதப்பட்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. அவ்வகையில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டிருக்கிறார் கவிமதி. தனது 'தும்பிக்காரன்' தொகுப்பின்மூலம்.

இனி தும்பிக்காரனை வாசிக்க துவக்குவோம்...

தமிழில் தான் அதிக ஹைக்கூ நூல்கள் வந்திருக்கின்றன என்ற செய்தி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இதோ அவ்வரிசையில் தும்பிக்காரனும் சிறந்தமுறையில் அட்டைப்படம் மற்றும் உள் புகைப்படங்கள் மற்றும் 135 ஹைக்கூக்களுடன் வந்திருக்கிறார்.

இத்தொகுப்பில் முதல் ஹைக்கூவே மனதில் காட்சிப் படிமத்தை கொண்டு வரக்கூடியதாக அமைந்தது தொகுபிற்கான வெற்றியே...

சாவுவீடு
கொதிக்கிறது
கோழி
-என்றும்

ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான் வயிறு
-என இவை இரண்டுமே பொருள் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு செய்திகளை கூறுவதோடு கவிஞரின் யுக்தியை பறைச்சாற்றுகிறது.

செய்திதாள்களிலும், பட்டிமன்றங்களிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றியும், அது கிடைக்காத குடுபங்களின் அவலத்தையும் பட்டி தொட்டி வரை பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறன. இத்தருணத்தில்

கூட்டுவாழ்க்கை
படிப்பறிவற்ற
புறாக்கள்
-என்ற ஹைக்கூ மூலம் படித்தவர்களுக்கு நல்ல 'சூடு' போட்டிருக்கிறார்.

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிக அளவில் கவனிப்புக்குள்ளாகிறது. கவிஞரும் அதற்கு ஆதாரமாக...

சாலைவிரிவாக்கம்
மரங்கள் சாகும்
நாளை நீயும்
- என சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எண்ணற்ற மரங்களை கொன்று குவிக்கின்ற செயல்களை சாட்டையடியாக விளாசுகிறார்.

இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக...

கதவுகள் இல்லை
தொடர்வண்டிவரும்
கவனம் ஆடுகளே
- இவை ஆடுகளுக்கு கூறுவதாக கூறி மடமை மாந்தனுக்கும் அறிவுரையாகவே கூறியிருக்கிறார்.

'காணி நிலம் வேண்டும் பராசக்தியே'என்று பாடிய பாரதி இன்றிருந்தால் 'காண நிலம் வேண்டும் பராசக்தியே' என் பாடும் குரலாக...

கம்பிச்செடிகள்
கலவைமரங்கள்
விதைமறந்த வயல்
- என பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது.

இது தொகுப்பில் செறிவு மிகுந்த கவிதையாகவும், ஆங்காங்கே இதுபோன்று பரவிக்கிடப்பதும் படிக்கின்ற வாசகனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அவசர உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நாம் எங்கு நோக்கிலும் கூட்ட நெரிசல்களை காண்கிறோம். மக்கள் நெரிசல் நிறைந்த அங்கே மாந்த நேயம் இருக்கிறதா? என்ற வினாவிற்கு விடையாக...

கூட்டநெரிசல்
காலியாக
சிறுமிகையில் தட்டு
- நம்மில் மாந்த நேயத்தின் வெளிப்பாடு வெறுமைதானா? என சிந்திக்க வைத்திருக்கிறார்.

குளம் ஒரு சிறு கல்லில், நிறைய வட்டங்களை தன்னுள்ளே எழுப்பிக்கொள்வதைப் போல ஹைக்கூ கவிதைகளும் படிக்கின்ற வாசகனை பல்வேறு நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பதிவாக...

மண்டப வாசல்
மனிதன்,நாய்,காக்கை
வெற்று இலை

பட்டாசு விற்பனை
சூடுபித்தது
பிஞ்சுகாயங்கள்

இலைகள் உதிரவில்லை
கிளையில் தூளி
குழந்தை உறக்கம்
- போன்றவற்றின் மூலம் வாசக விழிகளுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

இந்த தும்பிக்காரன் மழை பிரியராய் இருந்திருப்பார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு...

கும்மிருட்டு
ஒற்றை இசை
மழை

மழைநீர் சேகரிப்பு
சன்னலுக்கு வெளியே
பிஞ்சு கைகள்
- போன்று பல மழைக் கவிதைகள் படைத்துள்ளார்.

தொகுப்பில் ஒரே கருப்பொருட்களைக் கொண்டு ஹைக்கூ படைக்கின்ற ஆற்றல் கவிஞருக்கு இருந்தாலும், அது படிக்கின்ற வாசகனை சலிப்படையவே வைத்திடும்.

அதேபோன்று கவிதைகள் எழுதி, அதனை நூலாக்கும் பட்சத்தில் அதிக கவனமும் தேவைபடுகிறது. ஏனெனில் இத்தொகுப்பில் பக்கம் 42லும், பக்கம்52லும்,

மரம் வெட்டினவன்
கோடாரியை திட்டினான்
காலில் காயம்
- என ஒரே கவிதையே இரு இடங்களில் பதிவாகியுள்ளது.

மேற்கூறிய சில குறைகளல்லாத குறைகள் இருப்பினும், தொகுப்பில் பல புதிய சிந்தனைகளுடன் கூடிய ஹைக்கூ கவிதைகளோடு; முன்னழகு/பின்னழகு/ஒளியழகு/வடிவழகு/அச்சழகு என அழகான நூலாக அழகாக்கிய தும்பிக்காரன்; கவிதைவானில் சிறப்புடன் வலம் வருவா(ன்)ர்.

அன்புடன்
கன்னிக்கோயில் இராஜா

நூல்பெற
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வட்டம்
கடலூர் மாவட்டம்.

பக்கம்: 74, விலை:ரூ30

No comments:

Post a Comment