Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Sunday, March 04, 2018

மீண்டும் வலைப்பூ உலகத்திற்கு...

ஆயிற்று ஆண்டுகள் சில

கடைசியாக எப்போது என் வலைப்பூவை திறந்தேன் என எனக்கே நினைவில்லாத போது சக தோழழைகளில் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து வாசித்து சென்றுக்கொண்டிருப்பதை நினைக்கையில் இன்னும் இந்த வலைப்பூ உலகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சியே.

மின்னனு எழுத்துலகம் தொடங்கிய போது நாங்கள் இந்த வலைப்பூ வழியே தான் எங்கள் எழுத்துக்களை பதிவேற்றினோம். சுமார் ஒரு அய்ந்து ஆண்டுகள் இதில் பயணித்ததில் நிறைய கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட அரபுநாடுகளில் வலைதளங்கள் மூலம் நிறைய வாசிப்புகளை தொடர்ந்து கொள்ள இலகுவானது இந்த வலைப்பூக்கள் தான்.

பிரபலங்களின் எழுத்துக்கள் மட்டுமே எழுத்துகள் என ஒரு சார்புடைய மனநிலை இருந்த காலங்களில் புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் உலகறிய செய்ததில் இந்த வலைப்பூக்களுக்கு நிகர் இல்லை.

இப்படி தனிபெரும் படைப்புகலகில் வலைப்பூக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த வேலையில் இதை தொடர்ந்து வந்த முகநூல் அனைவரது வாசிப்பையும் முடக்கி, வலைப்பூ எழுதும் பழக்கத்தினையும் முடக்கியது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். என்னதான் முகநூலில் உடனடி “விருப்புகள்” நிரைய கிடைத்தாலும் நாம் எண்ணுகிற வகையிலான நீள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை முகநூலில் எழுதுவதில்லை. பல முன்னனி எழுத்தாளர்கள்கூட தங்களது வலைதளங்களிலிலோ, வலைப்பூக்களிலோ தங்களது ஆக்கங்களை எழுதி அவற்றின் தொடுப்புகளை முகநூலில் பதிவதையே பார்த்திருக்கிறோம்.

இது ஒருவகையில் முற்றுலும் உண்மை. முகநூல் பக்கத்தில் மிக குறைந்த பத்திகளுக்கு மேல் எழுத இயலாது அப்படியே எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். ஏனெனில் வலைப்பூ பிரியர்களுக்கு இருக்கும் வாசித்தல் பொருமை முகநூல் வாசிப்பாளர்களுக்கு இருப்பதில்லை. எப்படிபட்ட ஆக்கமாக இருந்தாலும் முகநூலில் ஒரு சில வரிகளில் மிக சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும் என்பது ஒரு கட்டாயமான எழுத்து சுருக்கமே.

தொடர்ந்து முகநூலில் பயணித்து கொஞ்டம் சோர்வு அடைந்தாலும் முகநூலை விட்டு அகளாமல் அதே வேலையில் தேங்கிப்போன எண்ணபதிவுகளை மீண்டும் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி பதிவேற்றலாம் என்கிற சிந்தனையில் தான் இந்த மீண்டும்  வலைப்பூ உலகத்திற்கு.... என்கிற தொடக்கம்.

இதை ஒரு கடுமையான பத்தியமாகவே கடைப்பிடிக்க என்னுகிறேன். வழக்கப்படி பணி சுமைகளுக்கு நடுவே காலம் தான் என்னை தொடர்ந்து வலைப்பூ எழுத அனுமதி தரவேண்டும்.

எழுதுவேன் என்கிற நம்பிக்கையில் எப்போதும் போல உங்களோடு பயணிக்கிறேன்.

நன்றி.


Sunday, December 09, 2012

ஜாதி மறுப்பு திருமணங்கள்-மன்றல் 2012 - திருச்சி

வணக்கம் தமிழக நண்பர்களே !

நீங்கள் ஜாதி மறுப்பில் வாழ்க்கைத் துணைவர் தேடுபவரா ?
உங்கள் உறவினர்கள், நண்பர்களில் யாரேனும் அப்படி இருக்கிறார்களா ?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்யத் தயக்கம், தடை ஏதும் இருக்கிறதா ?
எதிர்காலத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் எண்ணம் இருக்கிறதா ?
அதேபோன்று, ஜாதகம் உங்களை அவமதிக்கிறதா ?
துணைவரை இழந்தோ, பிரிந்தோ மறுமணத்திற்குத் தயாராக இருக்கிறீர்களா ?
மாற்றுத் திறனாளிகளுக்குத் துணைத் தேடுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கும்,
இதுபோன்ற கேள்விகளுக்கும்
விடை பெறத் தயாராகுங்கள் !

ஆம் தோழர்களே !

எதிர்வரும் திசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை,
திருச்சியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கான
சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சென்ற மாதம் சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
திருமணப் பதிவு செய்தவர்கள் 300 பேர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்!
வாழ்வைச் செழுமைப்படுத்துங்கள் !!

நன்றி !

வி.சி.வில்வம்


Friday, August 26, 2011

”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.

பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீடாக தோழர் விடுதலை இராசேந்திரனால்
தொகுக்கப்பெற்ற ”மரணதண்டனை ஒழிப்போம்” என்ற நூல் வெளியிடப்பெற்றிருக்கிறது.

1) கேட்பது உயிர்ப்பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி! என்ற தோழர் பேரறிவாளனின் கடிதம்....

2) தமிழக முதல்வருக்கு வி.ஆர். கிருட்டிணய்யரின் கடிதம்...

3)அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு

4)தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ. பாலன்

5)தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள் என்ற தோழர் தமிழச்சி யின் கட்டுரை...

ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது ....

விலை: உரூவா 5 மட்டுமே!

வாங்கிப் படித்துப் பரப்புக!

வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29, இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர், சென்னை - 600 041

நூல்கள் கிடைக்குமிடம்:

பெரியார் படிப்பகம், பேருந்துநிலையம் அருகில்,
மேட்டூர் அணை - 636 401 அலைப்பேசி: 97863 16155

பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம்,
காந்திபுரம், கோவை - 44 அலைப்பேசி: 98433 23153

பெரியார் படிப்பகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம்,
73/1, இலாயிட்சு சாலை, சென்னை - 600 014.
தொலைபேசி: 044 3022 8213

இராவணன் படிப்பகம், இராதாகிருட்டிணன் நகர்,
அரியாங்குப்பம், புதுச்சேரி - 605 007. அலைப்பேசி: 94430 45614

பெரியார் புத்தக நிலையம், மெக்டனால்டு சாலை,
கண்டோன்மெண்ட், ஸ்டேட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்,
திருச்சி - 620 001 அலைப்பேசி: 98655 96940

Friday, August 19, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

அன்புத் தோழர்களே!

ராஜீவ் கொலை வழக்கில் நீதிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாமும் மரண தண்டனையினை இந்திய அரசியலைமைப்பு சட்டத்திலிருந்து நீக்ககோரியும், நமது தோழர்கள் அனைவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து தண்டனை குறைப்பு செய்யக்கோரியும் வேண்டுகோள்வைத்து சனநாயக முறையில் உள்ளரங்கு நிகழ்வாக நிகழ்த்தி மரணதண்டனைக்கு எதிராக பதிவுகளை
அமீரகத்திலிருந்தும் பதிக்கவேண்டி நாம் ஒர் இடத்தில் கூடுவோம்.

ஆர்வலர்களும், தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்தினால் இவ்விடயத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுடன் வருங்காலத்தில் ஏனைய உயிர்கள் காக்கப்படலாம் என்பது உண்மை.

அமீரகம் தொடர்ந்து அனைத்து வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளரங்கு நிகழ்வுகள் நிகழ்த்தி மரண தண்டனைக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டுகிறோம் நன்றி.

Friday, August 12, 2011

தூக்கு தண்டனைக்கு எதிரானது


தூக்கு தண்டனைக்கு எதிரான தோழர்.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவின் இயக்கத்தோடு இணைந்து போராடுவோம் தோழர்களே வாருங்கள்.

Saturday, December 04, 2010

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில்


டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு!

வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்கு வெளியில் அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த தேசத்திலேயே ஒருவர் வாழ்ந்து, வழிகாட்டி, இன்றும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்… அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

தலித் இன மக்களுக்கு மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க உதித்த சூரியன்.

பெரும்பாலும் தலைவர்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பார்கள். கூச்சலிட வைப்பார்கள்… ஆட்டுமந்தைக் கூட்டமாகவே எப்போதும் அவர்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் சுயசிந்தனை பெற வேண்டும் என்று மட்டும் விரும்பவே மாட்டார்கள்.

ஆனால் அம்பேத்கர் என்ற சூரியன் மட்டும் பகுத்தறிவு ஒளியை தன் இனத்தின் அடிமை மக்களுக்கு தாராளமாய்த் தந்தது. கல்வியும், அரசியல் – அதிகார கைக்கொள்ளலுமே, தலித் இன மக்களின் சமூக அடிமத்தளையைக் கட்டறுக்கும் என்பதை ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த மாபெரும் சிந்தனாவாதி டாக்டர் அம்பேத்கர்.

மிகச் சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதை, சமூக சீர்த்திருத்தவாதி, பகுத்தறிவு சிந்தனையாளன், கேட்கும் எவரையும் அடித்து வீழ்த்தும் அபாரமான பேச்சாளர், வரலாற்று ஆசான், மிகச்சிறந்த எழுத்தாளர், ஆங்கிலேயர்களும் வியக்கும் ஆங்கில அறிவுக்குச் சொந்தக்காரர்… இத்தனை அறிவையும் பெருமைகளையும் தன் இன மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தன் குடும்பம், உடல் நலன் அனைத்தையும் மறந்து கடைசி மூச்சு வரை உழைத்தார்.

தன் இறுதிமூச்சு வரை சமூக அடிமைத்தன விலங்கை உடைக்க அவர் களமாடிய போராட்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமல்ல. நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்… ஆனால் இந்த கீழ்மைத் தனம் நிரம்பிய ஒரு மத அடையாளத்தோடு நிச்சயம் இறக்க மாட்டேன் என்று சபதமிட்டு, புத்த மதத்துக்கு மாறி இந்து சனாதனத்துக்கு சாட்டையடி கொடுத்தவர் அம்பேத்கர்.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டின்போது, ஹரிஜனர்களின் காவலன் நான் என்று காந்தி போன்றவர்கள் போலி கோஷமிட்டபோது, அவர்களின் முகத் திரையை அங்கேயே கிழித்துப் போட்டவர் அம்பேத்கர் ஒருவர்தான். அந்த மனிதரின் துணிச்சல் அன்றைக்கு காந்தியை மட்டுமல்ல, அகிலத்தையே ஆட வைத்தது என்றால் மிகையல்ல!

இப்படியொரு அசாதாரண தலைவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது தமிழில்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் பெயரில் 2002-ல் வெளியான இந்தப் படம், அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகே தமிழுக்கு வருகிறது.

மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.

காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக ‘சலாம் பாம்பே’ புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.

ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.

தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.

தலித் மக்கள் என்றல்லாமல், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்துக்காக சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் மட்டுமே. எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும். இனவேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் பார்க்க வேண்டிய படம் அம்பேத்கர்.

-பிரபா

INOX, SATHYAM, ESCAPE, ABIRAMI : சனி & ஞாயிறு காலைக் காட்சி

AGS 10 a.m,
RAKKI 11.30 a.m & 10 p.m
MAAYAJAL 11.30 a.m
ALBERT 11.15 a.m
UDAYAM 11.30 a.m
PVR 9.00 p.m

ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. ஆடுகளாய் இருந்த நம்மை சிறுத்தைகளாய் மாற்றிய புரட்சியாளரின் வரலாற்றுப் படத்தை பாருங்கள்.
-
‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி: http://www.thiruma.in/2010/12/blog-post.html

Thursday, October 07, 2010

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்

அன்புள்ள நண்பர்களுக்கு...

வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியை வாசிக்கவும். இலங்கையில் நடைபெற உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு பற்றிய இந்த கூட்டறிக்கை தமிழ் எழுத்தாளர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை மறுத்து இதனை அங்கீகரிக்கும் நண்பர்கள் தங்கள் ஒப்புதலை அளிக்க.. நண்பர் யமுனா ராசேந்திரன் அவர்களது மின் அஞ்சலுக்கோ அல்லது நண்பர் அருள் எழிலன் அஞ்சலுக்கோ “இந்த அறிக்கைக்கு எனது ஒப்புதல் உண்டு“ என்கிற செய்தியை அனுப்பிவிடவும். ஒப்பதல் அளிப்பவர்களின் பெயர்களுடன் இந்த அறிக்கை இலக்கிய இதழ்கள் மற்றும்..இணையத்தில் வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்கள்:

யமுனா ராசேந்திரன் -"Kasthurisamy Rajendran"
அருள் எழிலன் - "t.arulezhilan ezhilan"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.

வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.

படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.

யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.

தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.

சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

நன்றி:ஜமாலன்

Monday, September 20, 2010

கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தியாகி திலீபனின் 23 ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு

தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வது வருட நினைவுநாளான எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி கனடா ரொறொன்ரோ மாநரத்தில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் மாலை 6 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ரொறொன்ரோ கலைபண்பாட்டுக் கழகம் இணைந்து நடாத்தவுள்ளனர்.
அன்று இந்திய வல்லரசு கொடிய இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழரை அடக்கியாழ தீட்டிய வஞ்சகத் திட்டத்திற்கு எதிராக. தியாகி திலீபன் அண்ணா அவர்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் போராடி வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவர் தனது சாவின்மூலம் இந்தியத்தின் காந்தீய முகமூடியைக் கிழிதெறிந்தது மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிலைத்த ஆகுதியாகியாகினார். அவர் அன்று நல்லூர் வீதியில் வைத்த விடுதலை நெருப்பானது இன்று உலகெங்கும் உள்ள வீதிகளிலும் தமிழர் வீடுகளிலும் காட்டுத்தீ போன்று பரவி எரிகின்றது.

திலீபன் அண்ணாவின் 23ம் ஆண்டு நாளை நினைவுகூரும் இவ்வாண்டில் புலம் பெயர் தமிழர்களாகிய நாம். அவரின் இலட்சிய விடுதலைதீயை கலங்கரை விளக்காகக் கொண்டு எமது தமிழீழத்தாயின் அண்மித்த விடுதலையை நோக்கி விழிப்பாக ஒற்றுமையாக ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதிகொள்வோம்!
காலம்: செப்டம்பர் 26
ஞாற்றுக்கிழமை மாலை 6.00 மணி
இடம்: கனடா கந்தசுவாமி கோவில்
733 Birchmount Road
Scarborough, ONTARIO

Saturday, September 04, 2010

பெரியாருடன் ஒரு பயணம்

கீற்று ஆசிரியர் குழு செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 15:03 சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357

Saturday, August 14, 2010

தமிழம்.வலை ( www.thamizham.net )

தமிழம்.வலை ( www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல்.

தமிழ்ப் பேழையில் இருப்பவை...

குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 இசைப் பாடல்கள்) (Real Player ல் கேட்கவும்), எமக்கு வந்த நூல்களின் அறிமுகம் (80 க்கு மேற்பட்ட நூல்கள்), சிறப்பான புகைப்படங்கள் (100 க்கு மேற்பட்டவை) , ஓவியங்கள் (10 ஓவியங்கள்), தமிழுக்கான கணினி வரலாற்றுப் பதிவுகள் (30க்கு மேற்பட்டவை), வியப்பிற்குரிய அரிய பதிவுகள் (35 க்கு மேற்பட்டவை).

சிற்றிதழ்கள் பகுதியில் இருப்பவை...

பழைய புதிய சிற்றிதழ்களின் பட்டியல் (1903 ஆம் ஆண்டு முதல்), சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), சுவைத்த பக்கங்கள் (2003 லிருந்து தமிழம் வலையில் வலையேற்றியவை), தற்பொழுது வருகிற சிற்றிதழ்களின் முகவரிகள் (100க்கு மேற்பட்டவை), சிற்றிதழாளர்கள் பட்டியல் (60 இதழாளர்கள் படங்கள், குறிப்பு), தமிழம் வலை நூலகத்தில் (அ முதல் வி வரையுள்ள இதழ்களின் பெயர்பட்டியல்), விரும்பியபோது வருகிற வெளியீடுகள் (சமகாலப் பதிவான 8 வெளியீடுகள், பாடல்கள்).

கல்வியில் இருப்பவை...

தமிழ் கற்பிக்கிற இறுவட்டு (வலையிறக்கி unzip செய்து தமிழ் கற்கலாம்), பள்ளிகளில் தொங்கவிடுகிற எழுத்து அட்டை (ஆங்கில விளக்கத்துடன்), படித்தல் திறன் வளர்த்துதற்கான 32 அட்டைகள் (தமிழை 3 மாதங்களில் கற்கலாம்), அரிய கல்வி ஆராய்ச்சிகள் (90 தலைப்புகளில் கல்வி பற்றிய ஆராய்ச்சிகள்), தமிழ்க் கல்விக்கான படவடிவக் கோப்புகள் (30 கல்வி காட்டும் கோப்புகள்), கல்வி வினாக்கள் / விடைகள் (2003 லிருந்து பார்வையாளர்கள் கேட்ட வினாக்கள்), தமிழை முதன்மைப் படுத்தி நடத்துகிற தமிழ்ப் பள்ளிகள் ( 3 பள்ளிகள்), ஆங்கிலவழியில் தமிழ் - இணையப் பாடங்கள் (35 பாடங்களில் தமிழ் கற்கலாம்).

நாள் ஒரு நூல் பகுதியில் இருப்பவை...

நாளும் வலையேற்றுகிற நூல்கள் /இதழ்கள் பட்டியல் (நூலின் வரிசை எண் காண), படவடிவக் கோப்புகளாக்கிய நூல்/ இதழ்கள், (ஒரு பக்கத்திற்கு 50 நூல்கள்) (13 -8- 2010 அன்று வரை 1640 கோப்புகள் வலையேற்றப்பட்டுள்ளன) படவடிவக் கோப்புகளை இணைத்துள்ள பிற தளங்கள் (10 தளங்கள்), தானாகவே அகரவரிசைப்படுத்துகிற நூல்கள் பட்டியல் (565 நூல்கள்).

--------------------------------------------------------------------------------

தமிழம் வலையின் நான்கு பிரிவுகளையும் முழுமையாகப் பார்க்கவும், தமிழம் வலையை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தமிழில் வெளிவந்த அரிய நூல்களைத் திரட்டவும், திரட்டிய நூல்களை அடுத்த தலைமுறையினருக்காகப் பாதுகாக்கவும், உங்களை அன்போடு அழைப்பது, தமிழ்க்கனல் - 9788552061

Friday, August 13, 2010

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா

தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா

நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை
நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை
இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை

அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஊடகங்களினால் பறையர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் பாட்டுச் சீரழிவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

பறையர் வரலாறு மற்றும் அறிவு சார்ந்த செய்திகளை மாநாடு மற்றும் பொதுகூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பதை காட்டிலும் கலை வடிவில் தெரிவித்தால் வெகுஜன மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு பறையர் பேரவை "கலைகளையும் போர் கருவிகளாக்குவோம்" என்ற கருத்தியலோடு தமிழகமெங்கும் கலைப் பிரச்சாரம் செய்து வருகின்றது .

இதன் தொடர்ச்சியாக.......

உலகப் பறையர்களின் விடிவெள்ளி மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் பறையர் அவர்களின் 150 வது பிறந்தநாளை 07 /07 /2010 ) கொண்டாடும் வகையில் சென்னையில் மாபெரும்பறையர் கலைத் திருவிழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகள்
பறையர்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தல் மற்றும் அதுத் தொடர்பாக விவாதங்கள்
பறையாட்டம்......
ஒயிலாட்டம்....
மற்றும இதர கலைகளும்…….

குறிப்பு: ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் மற்றும் கலைக்குழுக்கள் தங்களது படைப்புகளை ஒருங்கினைப்பளர்களுக்கு முன்கூட்டியே கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்கவும்

தொடர்புக்கு
அய்யா சி.சாமுவேல்பறையர்
தலைவர் மற்றும் நிறுவனர்
தமிழ்நாடு பறையர் பேரவை
பேச :9283182969/9488380143/9944589548
samparayar@gmail.com/ Samyparai007@gmail.com
www.paraiyar.webs.com

Friday, July 16, 2010

தொல்.திருமாவளவன் தந்தைக்கு வீரவணக்கம்

எங்கள் அன்புக்குறிய அண்ணனும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை ச.இராமசாமி என்கிற தொல்காப்பியன் அவர்கள் நேற்று(15.07.2010) இரவு சுமார் 8.00 மணியளவில் சென்னை, மருத்துவமனையில் கடந்த 6மாத காலமாக நரம்புச் தளர்ச்சி நோயால் (பார்க்கின்சன்) பாதிக்க்கப்பாடு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 5 ஆம் தேதியிலிருந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் திடீரென உருவான நிமோனியா தொற்றினால் நுரையீரல் செயலிழந்து செயற்கை சுவாச சிகிச்சையும் பலனின்றி நேற்று இரவு இயற்கை ஏய்தினார்.

அவரது திருவுடல் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக எண்.ஆர்.62, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, இரண்டாம் நிழற்சாலை, வேளச்சேரியில் உள்ள ”தாய்மண் அறக்கட்டளை” அலுவலகத்தில் இன்று (16.07.2010) நண்பகல் வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

உலகத்தமிழர்கள் சார்பில் தலைவரின் தந்தைக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.

இவண்:
அமீரக தமிழ்மண் வாசகர் வட்டம்
துபாய்.

Sunday, February 07, 2010

எழுச்சித்தமிழர் "தொல்.திருமாவளவனின்கவிதைகள்" நூல் வெளியீட்டுவிழா

நீரும் நெருப்பும் - உன்
நடை ஏற்காத் தெருவும்
ஊரும் யாரும்
உரிமை சுரண்டும் திமிரும்
தேரும் தேரிழு வடமும்
கீறும் புலிநகம் கோர்த்தே -எம்மினம்
சீறும் சிறுத்தையாய்
சேரிக்குள் சேர்ந்தால்
மீரும் மிரளும் நாறும் சட்டம்
தூரம் தூரம் எதிர்கள் தொலையும்
மாறும் ஒரு நாள் மக்கள் மனதும்
நேரும் ஒரு விடியல்
நாம் நிமிர்ந்தால்.

துபாய் தாய்மண் வாசகர் வட்டம் நிகழ்த்திய எழுச்சித் தமிழர் "தொல்.திருமாவளவனின் கவிதைகள்" நூல் வெளியீட்டுவிழாவும், "வதக்குறாங்களையா" குரும்பட அறிமுகவிழாவும் 22.01.2010 அன்று கராமா சிவ்ஸ்டார் பவனில் தாய்மண் வாசகர் வட்ட தலைவர் சே.ரெ.பட்டணம் மணி தலைமையேற்க, செயலாளர் திரு.கா.முத்தமிழ்வளவன் முன்னிலையில், பொருளாலர் திரு.கருணாநிதி, கொள்கை பரப்பு செயலர் பொறிஞர்.அசோகன், நிதிக்குழு அலோசகர் திரு.கோபாலகிருட்டிணன் மற்றும் அமீரகத்தின் அனைத்து தமிழமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள நடந்தேறியது.

விழாவில் திரு.செயப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்த தாய்மண் சார்பில் துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் அஜ்மான் ஒருங்கிணைப்பாளர்களால் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் கவிதைகள் நூலை வெளியிட அமீரகத்தின் அமைப்பு சார்ந்த அனைத்து அன்பர்களுக்கும் நூலின் படிகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இதை தொடர்ந்த கவியரங்கம் நிகழ்வினை தோழர்.கவிமதி ஒருங்கிணைக்க கவிஞர்கள் முத்தழகு, இளையசாகுல் மற்றும் கவிமதி ஆகியோர் கவிதைகளை வழங்கினார்கள். தொடர்ந்து நாடாளுமன்ற குழுவில் இலங்கை சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முகாம் மக்களிடையே சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட மக்கள் கருத்துக்களையும், தான் தொகுத்த படங்களையும் இணைத்து இயக்கி தமிழகத்தில் மிகச்சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட "வதக்குறாங்களையா" குறும்பட வட்டும் வெளியிடப்பட்டது.

கருத்துதுரை நிகழ்த்திய அமீரகத்தின் பல்வேறு அமைப்பினை சார்ந்த அன்பர்கள் பேசுகையில் எழுச்சித் தமிழரின் இலங்கை பயணமும், அரசியல் குறித்தும் எழுந்த பொய் பரப்புரைகளுக்கு இந்த குறும்படம் மூலம் விடையளித்திருப்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மக்கள் அரசியலும், ஈழத்தமிழர் போன்ற உலக அரசியலும் தங்களைப்போன்ற பிற அரசியல் கட்சிகளுடான தொடர் உறவும் தங்களை மேலும் கருத்துசார்ந்து இணைந்து செயலாற்றவைக்கிறது என்று நெகிழ்ந்தார்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைபுகளை திரு.சங்கத்தமிழன், திரு.செல்வமுதல்வன், திரு.அன்பழகன், திரு.சிவாநந்தன் உள்ளிட்டோர் நெறிபடுத்தினார்கள். இறுதியில் நன்றியுரையினை திரு.முருகேசன் நிகழ்த்த இவ்வெளியீட்டு விழா நிகழ்வுகளை திரு.முத்தழகு தொகுத்து வழங்க விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

படங்கள்: துபாய் இபுராஹிம்

Wednesday, December 30, 2009

என் புதிய நூல் வெளியீட்டுவிழா

புதுச்சேரி "நட்புக்குயில்கள்" அமைப்பினர் நிகழ்த்திய கவிமதியின் "நிறங்களற்ற தனிமை"கவிதை நூல் வெளியீட்டுவிழா மற்றும் சே.ரெ.பட்டணம் மணியின் "இனி நாம்" ,நண்பனின் "விரியக்காத்திருக்கும் உள்வெளி" ,முத்துக்குமரனின் உயிர்த்துளி ஆகிய பாநூல்களின் திறனாய்வரங்கம் 28.12.2009 திங்கள்அன்று மாலை 6மணியளவில் புதுச்சேரி சுசிலாபாய் அரசுப்பெண்கள் மேனிநிலைப்பள்ளியில் நடந்தேறியது.

நிகழ்விற்கு நட்புக்குயில் அமைப்பின் தலைவர் புதுவை சீனு.தமிழ்மணி அவர்கள் தலைமைத்தாங்கினார்.
நிகழ்வில் "நிறங்களற்ற தனிமை" கவிதை நூலை அக்கலிமா கவிமதி வெளியிட புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முனைவர்.மு.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

நிறங்களற்ற தனிமை கவிதை நூலின் விரிவான திறனாய்வை புதுவை காமராசர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்முனைவர்.தி.அன்புச்செல்வன் வழங்கையில் ஒரு கவிஞனுக்கு இருக்கவேண்டிய மொழி ஆளுமையும், சமூகப்பொருப்பும், சமகால நிகழ்வுகளின் பதிவாக்கமும் இந்நூலில் முறையாக கையாளப்பட்டிருப்பது நிறைவைத்தருகிறது என்றார்.

தொடர்ந்து கவிஞர்.சே.ரே.பட்டணம் மணியின் "இனிநாம்" நூலின் திறனாய்வை புதுவைப்பல்கலைக்கழகமுனைவர்பட்ட ஆய்வாளர் கரசூர்கந்தசாமி அவர்களும், கவிஞர் நண்பனின் "விரியக்காத்திருக்கும் உள்வெளி" தொகுப்பின் திறனாய்வை புதுவைப்பல்கலைக்கழ முனைவர்பட்ட ஆய்வாளர் மனோ மோகன் அவர்களும், கவிஞர்.முத்துக்குமரனின் "உயிர்த்துளியினை புதுவைப்பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் செயபாரதிஅவர்களும் வழங்கினார்கள். நிகழ்வில் திரு.மு.சி.இராதாகிருட்டிணன். எழுத்தாளர் பிரேம் ரமேஷ், திரு.அறிமாவளவன், கவிஞர்.புதுவைத்தமிழ் நெஞ்சன், கவிஞர்.இராஜேஸ்வரி, கவிஞர்.பரிதியன்பன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு சிறப்புச்செய்தனர்.

நிகழ்வின் இறுதியாக கவிமதி ஏற்புரைவழங்க, அரசுமேனிநிலைப்பள்ளி ஆசிரியை க.இரா.அறிவழகி நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை சிறப்பாக நிறைவு செய்தார்.

செய்தி மற்றும் படங்கள்: கவிஞர்.பரிதியன்பன்.

Saturday, October 17, 2009

சார்ஜாவில் பெரியார் நினைவேந்தல்

புலம்பெயர்ந்த மக்களில் விடுமுறை நாட்களை அவரவர் தன்நல போக்கிற்காவே கழித்துக்கொண்டிருக்கும் சூழலில் தங்களுக்காக எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன நம் ச்மூகத்திற்காக ஒரு வெள்ளிக்கிழமையை ஒதுக்கலாம் என அபுதாபி வாழ் வடநாட்டு தலித் மக்களை ஒருங்கிணைத்து நிகழ்வுகளை நடத்திவருவது அபுதாபி அம்பேத்கர் சர்வதேச அமைப்பு.

நேற்று (16 அக்டோபர்) அன்று சார்ஜாவில் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் "சம்மசக்ர பிரவார்தன தீன்" என்கிற அம்பேத்கர் நினைவுநாளை கொண்டாடினார்கள். இப்படி அம்பேத்கர் பற்றி மட்டுமே நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தவர்களுக்கு தங்களின் முதல்வர் மாயாவதி ஏன் தீடீரென்று பெரியார் என்ற ஒருவரை ஆதரிக்கிறார் அவருக்கு சிலைவைக்கிறார் என்கிற கேள்வி எழவே, பெரியார் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் கடந்த முறை அம்பேத்கர் நிகழ்வில்போது பெரியார் சம்மந்தப்பட்டவர்களை தேடியிருக்கிறார்கள் அய்க்கிய அரபு நாட்டில் பெரியாரா? என சிலர் கிண்டலுடன் தவிர்க்க (எங்கெல்லாம் பார்ப்பனியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரியார் இருப்பார் என மறந்துவிட்டனர்போலும்) இனம் இனத்தை சேரும் என்கிற தத்துவத்தின்படி இறுதியாக நம்மிடம் வந்துசேர்ந்தனர். கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு அமீரகத் தாய்மண் வாசகர் வட்டம் சார்பாக நாம் களமிறங்கினோம்.

கடந்த ஆண்டு பெரியார் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்தபின் இந்த ஆண்டும் நம்மை அழைத்திருந்தார்கள் நாமும் கலந்துக்கொண்டு பெரியார் குறித்தும் அவர்தம் தலித் அரசியல் குறித்தும் பேசினோம். நிகழ்விற்கு அபுதாபியை சேர்ந்த திரு.சங்கர்ராஜ் தலைமையேற்க சிறப்புவிருந்தினராக திரு.கடையநல்லூர் சத்திஷ்மாதவன் அவர்கள் கலந்துக்கொண்டு பெரியார் குறித்து விரிவான தெளிவான உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார்.அதை தொடர்ந்து அமைப்பின் தலைவர் திரு.சே.ரெ.பட்டணம் மணி தனக்கே உரிய முறையில் பெரியார் குறித்தும் அம்பேத்கர் குறித்தும் குறிப்பாக இரட்டைவாக்கு முறைக்கு எதிரான காந்தியின் துரோகம் குறித்தும் விரிவாக இந்தியில் உரையாற்றினார். நிகழ்வில் திரு.கவிமதி ஊத்தாபுரம் சுவர் பற்றின நிகழ்வுகளை விளக்கி தொடர்ந்து குஜராத் காந்திநகர் தலித் மக்களின் வாழ்வியல் ஆதாரங்களை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படத்தினையும் திரையிட்டார்.

அதை தொடர்ந்து அம்பேத்கர்,பெரியார் உறவு அவர்கள் நம் சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த நிகழ்வுகள் என தமிழர்களாகி நாம் பெரியாரின் தொடர்ச்சியாக தலித் அரசியலை எவ்வாறு நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதனையும் விளக்கினோம். நம் அமைப்பின் சார்பாக இறுதியாக் செயலர்.திரு.முத்தமிழ்வளவன் உரைநிகழ்த்தியதன்பின் பெரியார் குறித்த தங்களது பார்வையினையும், தாங்கள் இதுவரை புரிந்துக்கொண்டவற்றையும் இனி பெரியார், அம்பேத்கர் வழியிம் நாம் நம் சமூகத்திற்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுபற்றியும் அம்பேத்கர் அமைப்பினர் விரிவாக பேசியும், விளக்கப்படங்களை காட்டியும் நிகழ்வினை தொடர்ந்து சிறப்பாக நடத்திச்சென்றனர்.

நிகழ்வில் நிரைவாக அம்பேத்கர்,பெரியார் வாழ்த்துப்பாடலும் அதை தொடர்ந்த நிரைவுரையில் வடமாநில மக்களுக்கும் பெரியார் குறித்தும் தலித் அரசியலில் நம் பங்குகுறித்தும் நாம் விளக்கியது விரிவானதாகவும், நிறைவுடனும் இருந்ததாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நமக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள விழா இனிதே நிறைவுப்பெற்றது.

விழாவில் கலந்துக்கொண்ட நம்மவர்கள்:
திரு.சே.ரெ.பட்டணம் மணி (தலைவர் தாய்மண் வாசகர் வட்டம்)
திரு.முத்தமிழ்வளவன் (செயலர் தாய்மண் வாசகர் வட்டம்)
திரு.கவிமதி (செயலர் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை)
திரு.சங்கர் ராஜ் (அபுதாபி ஒருங்கிணைப்பாளர் தாய்மண் வாசகர் வட்டம்)
திரு.சத்தீஷ் மாதவன் (நிகழ்வின் சிறப்பு விருந்தினர்)
திரு.ஓவியர் அசோக்,
திரு.விவேகானந்தன்,
திரு.கருணாநிதி,
திரு.குருசாமி சார்ஜா
திரு.குமார் (நாம் தமிழர் அமைப்பு)
திரு.முத்துக்குமரன்,

மற்றும் சிந்தனையாளர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Friday, September 25, 2009

அறிவுமதி தொகுப்பு

இனிய நண்பர்களே

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின்
படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து விவரங்களுக்கும்
தமிழ் அலை ஊடக உலகம்
tamilalai@gmail.com
பேச// +91 9786218777