Sunday, February 07, 2010

எழுச்சித்தமிழர் "தொல்.திருமாவளவனின்கவிதைகள்" நூல் வெளியீட்டுவிழா

நீரும் நெருப்பும் - உன்
நடை ஏற்காத் தெருவும்
ஊரும் யாரும்
உரிமை சுரண்டும் திமிரும்
தேரும் தேரிழு வடமும்
கீறும் புலிநகம் கோர்த்தே -எம்மினம்
சீறும் சிறுத்தையாய்
சேரிக்குள் சேர்ந்தால்
மீரும் மிரளும் நாறும் சட்டம்
தூரம் தூரம் எதிர்கள் தொலையும்
மாறும் ஒரு நாள் மக்கள் மனதும்
நேரும் ஒரு விடியல்
நாம் நிமிர்ந்தால்.

துபாய் தாய்மண் வாசகர் வட்டம் நிகழ்த்திய எழுச்சித் தமிழர் "தொல்.திருமாவளவனின் கவிதைகள்" நூல் வெளியீட்டுவிழாவும், "வதக்குறாங்களையா" குரும்பட அறிமுகவிழாவும் 22.01.2010 அன்று கராமா சிவ்ஸ்டார் பவனில் தாய்மண் வாசகர் வட்ட தலைவர் சே.ரெ.பட்டணம் மணி தலைமையேற்க, செயலாளர் திரு.கா.முத்தமிழ்வளவன் முன்னிலையில், பொருளாலர் திரு.கருணாநிதி, கொள்கை பரப்பு செயலர் பொறிஞர்.அசோகன், நிதிக்குழு அலோசகர் திரு.கோபாலகிருட்டிணன் மற்றும் அமீரகத்தின் அனைத்து தமிழமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள நடந்தேறியது.

விழாவில் திரு.செயப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்த தாய்மண் சார்பில் துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் அஜ்மான் ஒருங்கிணைப்பாளர்களால் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் கவிதைகள் நூலை வெளியிட அமீரகத்தின் அமைப்பு சார்ந்த அனைத்து அன்பர்களுக்கும் நூலின் படிகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இதை தொடர்ந்த கவியரங்கம் நிகழ்வினை தோழர்.கவிமதி ஒருங்கிணைக்க கவிஞர்கள் முத்தழகு, இளையசாகுல் மற்றும் கவிமதி ஆகியோர் கவிதைகளை வழங்கினார்கள். தொடர்ந்து நாடாளுமன்ற குழுவில் இலங்கை சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் முகாம் மக்களிடையே சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட மக்கள் கருத்துக்களையும், தான் தொகுத்த படங்களையும் இணைத்து இயக்கி தமிழகத்தில் மிகச்சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட "வதக்குறாங்களையா" குறும்பட வட்டும் வெளியிடப்பட்டது.

கருத்துதுரை நிகழ்த்திய அமீரகத்தின் பல்வேறு அமைப்பினை சார்ந்த அன்பர்கள் பேசுகையில் எழுச்சித் தமிழரின் இலங்கை பயணமும், அரசியல் குறித்தும் எழுந்த பொய் பரப்புரைகளுக்கு இந்த குறும்படம் மூலம் விடையளித்திருப்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மக்கள் அரசியலும், ஈழத்தமிழர் போன்ற உலக அரசியலும் தங்களைப்போன்ற பிற அரசியல் கட்சிகளுடான தொடர் உறவும் தங்களை மேலும் கருத்துசார்ந்து இணைந்து செயலாற்றவைக்கிறது என்று நெகிழ்ந்தார்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைபுகளை திரு.சங்கத்தமிழன், திரு.செல்வமுதல்வன், திரு.அன்பழகன், திரு.சிவாநந்தன் உள்ளிட்டோர் நெறிபடுத்தினார்கள். இறுதியில் நன்றியுரையினை திரு.முருகேசன் நிகழ்த்த இவ்வெளியீட்டு விழா நிகழ்வுகளை திரு.முத்தழகு தொகுத்து வழங்க விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

படங்கள்: துபாய் இபுராஹிம்

No comments:

Post a Comment