Friday, May 23, 2008

இது எரிமலை பசி.

தன் மண்ணை விட்டு சென்றாலும் மண்ணின் மணம் மாறாத இலக்கியம் படைக்கவும்.தான் சார்ந்த இயக்கத்தின் கோட்பாடுகளைவைத்து இளைய சமூகத்திற்கு தன்னால் இயன்ற தொண்டு செய்திடவேண்டுமென்கிற கடமையுணர்வும் எல்லோருக்கும் வருவதில்லை. தான் தன் குடும்பம் என்று தன்நல சிந்தனைகளிலேயே சுருங்கிவிடாது, தன் உழைப்பு, பொருளாதாரம் என்று சமூக நலனுக்காக செலவிடுகிற ஆண்மையும் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

சிறு வயது முதலே தன் கண்முன் நடக்கும் வன்கொடுமைகள், சாதி திணிப்புகள், அரசியல் அட்டூழியங்கள் என்று கண்டு கண்டு செரிக்கமாட்டாமல் அவற்றிக்கு எழுத்துக்களால் பதிலடி கொடுப்பதுதென்பது ஆயிரத்தில் ஒருவருக்கு உண்டாகும் உணர்வின் கொதிநிலை. வெந்த சோறும் விதிவந்தால் சாவும் என்பது இனியவன் போன்றவர்களுக்கு பொருந்தாது. இது சமூக எழுச்சிக்கான எரிமலை பசி என்றும் அடங்காது எதற்கும், எவனுக்கும் அடிபணியாது.

எழுத்தார்வமும், தன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தொண்டார்வமும் இனியவன் கட்டுரைகளிலும், கவிதைகளிலும வெளிபட்டுகிடக்கிறது. ஏறக்குறைய தான் நேசித்த தலைவர்கள் தொடங்கி தன் துணைவியார் வரை எல்லோருக்கும் கவிதை எழுதியிருக்கிறார். சிலரின் படைப்புகளில் பெரும்பாலும் முடிவில்லாத ஊசலாட்ட தன்மையே வெளிப்படுவதுப் போன்ற தவற்றை இனியவனும் செய்திருக்கிறார். இதனால் இனியவன் எந்த கொள்கையின் தளத்தில் நின்று பேசுகிறார் என்பது முழுமைபெறவில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லீக்கிற்கு வக்காலத்து வாங்குவதென்பனை முஸ்லீம் இளைஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன் சொந்த வருமானத்திற்காக லீக்கை அடமானம் வைத்ததால்தான் இன்று பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின என்பதனை அறிவோம். முஸ்லீம் லீக் என்ற மரியாதை தலைவர் காயிதே மில்லத் அவர்களோடு முடிடைந்துவிட்டது என்பதே உண்மை.

மேலும் தான் சார்ந்த மதத்திற்கும், மத நல்லிணக்கம் என்கிறதான ஏமாற்றுவேலைக்கும் துணைப் போவதுப்போல் இராமன், சிவன், பிள்ளையார், முருகன் எல்லோரும் இறைத்தூர்களே அவர்களின் புதல்வர்களே என்று எழுதிருப்பது பகுத்தறிவிற்கு அப்பற்பட்ட செய்தியாகவே படுகிறது. இராமன் என்பது ஏதோ குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒன்று என்கிற சப்பைகட்டுகள் தேவையில்லை. இணையற்ற வீரர் திரு. திப்பு சுல்தான் அவர்களையே கற்பனை பாத்திரம் என்கிறான். நன்கு புராணங்களை கற்றறிந்த பரமஹம்சர் போன்றவர்களே இராமன் ஒரு கற்பனை பாத்திரம், இந்து மதம் என்கிற கட்டமைப்பே தவறானது என்று வாக்குமூலம் தருகின்ற தருவாயில், இனியவன் போன்ற இஸ்லாமிய சிந்தனையுள்ளவர்கள் தங்கள் நூல்களில் மேற்கண்டவர்களை இறைத்தூதர்கள் என்று பதிவுக்குள்ளாக்குவது தவறு.

இது வருங்கால சூழலில் உண்மையென்றாக்க யாராவது முயன்றால் அதற்கு இனியவன் போன்றோரின் நூலும் ஆதாரமாகிவிடும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மவ்லவி மு.ஹதீஸ் மஸ்லஹி, ஆனாரூனா ஆகியவர்களும் இதை திருத்தாததுதான் வியப்பு.

எதிர்வரும் காலங்களில் தன் படைப்புகளில் இப்படிபட்ட வரலாற்று குறைபாடுகளை நீக்கியும், முற்றிலுமாக தவிர்த்தும் வெற்றி நடைபோட என்றும் வாழ்த்துகள்.

தோழமையோடு
கவிமதி (துபாய்)

நூல்: விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு
ஆசிரியர்: இனியவன் ஹாஐ¢முஹம்மது.
மின்னஞ்சல்:iniyavan_haji@hotmail.com

No comments:

Post a Comment