சல்மான் ரஷ்டி இது ஒரு மந்திரப்பெயர் என்று கூட சொல்லலாம், ஏனெனில் ஒரு நேரத்தில் எவர் உச்சரிக்கிறாரோ அவருக்கு தலைவலி முதல் தலையெடுப்பது வரை தொல்லைகள் வந்து சேரலாம் என்ற காலம் இருந்தது. ஈரான் தலைவர் திரு. ஆயத்துல்லா கொமேனி அறிவிப்பின்படி வழங்கப்பட்டிருந்த “பத்வா” விலக்கப்பட்டு தற்போது திரு. சல்மான் ரஷ்டியும் உலகமும் அமைதியடைந்திருக்கிறது என்றுகூட சொல்லலாம். ஆனால் இன்னும் உலகத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என மூலைக்கு மூலை குரல்கள் கிளம்புகிறதே ஒழிய இதுவரை எவருக்கும் எந்த உரிமையும் முழுதாக கிடைத்ததாக தெரியவில்லை.
சமீபத்தில் கிழக்கு வெளியிடாக திரு. சொக்கன் எழுதிய “பத்வா முதல் பத்மா வரை” என்கிற சல்மான் ரஷ்டி பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. சல்மான் ரஷ்டியின் புத்தகங்கள், வாழ்க்கை, வழக்கு என்று மிகவும் சுவையாகவும் சிக்கனமாகவும் நிறைய செய்திகளை தொகுத்திருந்தார். அதில் ஒரு சில தகவல்கள் மட்டும் திரும்ப திரும்ப வருவதாகபடுகிறது எனினும் சோர்வு தட்டாமல் செல்வதாலும், அவற்றை காலகட்டங்களுக்கேற்ப நினைவுகூறுவதாலும் அவசியமென்றே படுகிறது.
படித்து முடித்த நமக்கு மட்டுமல்ல சல்மானுக்கே அவர் எந்த நாட்டின் குடியுரிமை சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர் என்று விளங்காத ஒன்று, இந்தியாவில் பிறந்தவர்தான் என்றாலும் பாக்கிஸ்தான், இங்கிலாந்து.. என அவரும் அவர் குடும்பமும் புலம் பெயர்ந்துகொண்டே இருந்ததாக தெரிகிறது. பத்வா காலத்தின் போதுகூட அவர் பிறந்த மண்ணான இந்தியாவே அவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டதாம். புத்தகத்தின் தகவல்கள் படி அவர் இங்லாந்தை சேர்ந்தவராகவே இருந்துவிட்டு போகட்டும் ஆனால் தற்போது நியுயார்க் நகரத்தில் குடியேறியிருப்பதாக தகவல்.சமீபத்தில் கூட இந்திய தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி ஒலிபரப்பபட்டது என் நினைக்கிறேன்.
சல்மான் ரஷ்டி என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது “சாத்தானின் கவிதைகள்” நாவலும் அதை தொடர்ந்த “பத்வா”வும் தான்.இதனால் ரஷ்டியைப் போலவே அவரது எழுத்துக்களும், அவரது வாழ்க்கையும் நிறைய மாற்றங்களை கண்டிருக்கிறது. வழக்கமான அவரது எழுத்துகள் நம்மூர் அம்புலிமாமா வகைதானே ஒழிய சிலவற்றை தவிர பெரும்பாலன கதைகள் புனைக்கதைகள் வகையை சேர்ந்தவைகளே. எனவே சல்மானின் எழுத்துகள் பெரும்பாலும் மக்களுக்கானதாகவோ
சமூக புரட்சிக்கான இலக்கியமாகவோ அறியப்படவில்லை என்பதுபோல் தெரிகிறது.
ரஷ்டியின் சாத்தானின் வேதங்கள் தான் சர்ச்சைக்குள்ளானது என்றில்லை அவரது “நள்ளிரவு குழந்தைகள்” என்கிற நாவலில் அப்போதைய இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தியை (அவசரநிலை பிரகடனத்தின் போது நடந்துகொண்டவற்றிற்காக)
சர்வாதிகாரியாகவும், அவர் மகன் சஞ்சய் காந்தியையும் மறைமுகமாக அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டு அதற்காக சல்மான் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இதேபோல் தனது “ஷேம்” என்ற நாவலில் பாக்கிஸ்தான் பிரதமர் திரு. ஜுல்பிகர் அலி பூட்டோவை
அவமதித்தாககூறி பாக்கிஸ்தானில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனவே இதற்கெல்லாம் சேர்த்து இந்தியாவும், பாக்கிஸ்தானும் “நள்ளிரவு குழந்தைகள்” நாவலின் படபிடிப்பிற்கு அனுமதிவழங்காமல் பழிதீர்த்துக்கொண்டன எனலாம். எனவே இதிலிருந்து ஏற்கனவே பல முறை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார் என்பது தெரியவருகிறது.
மயக்கவைக்கும் எழுத்துக்கள் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு சிறந்த படைப்பாளிதான்,
இருப்பினும் அவரது சில நூல்கள் ரொம்ப பொருமையாக செல்கின்றன எனவும், சரியில்லை எனவும் சக படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களால் முணுமுணுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைப்போலவே சாத்தானின் கவிதைகளும் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டிருந்தால் அவரின் மற்ற நாவல்கள் போல சுமாரான வரிசையில் சேர்ந்திருக்கக்கூடும். பத்வாவினால் ரஷ்டிக்கு தேவையில்லாமல் ஈரானே இலவச விளம்பரம் தந்து உலகம் முழுவதும் பேசபடும் எழுத்தாளராக்கிவிட்டது அல்லாமல் இந்நூற்றாண்டிலேயே தனது ஒரு நாவலுக்காக "மரணதண்டனை விதிக்கப்பட்ட எழுத்தாளர்" என்கிற வரலாறும் எழுதப்பட்டுவிட்டது.
ஏனெனில் ரஷ்டியின் மற்ற புத்தகங்கள் போலவே சாத்தானின் கவிதைகளிலும் புனைவுதான் நிரம்பிவழிவதாக தெரிகிறது. இதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு கடுமைதான் எனவும், அப்படி தடைசெய்யப்படும் அளவிற்கோ, நாவல் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கபடும் அளவிற்கோ நாவல் முழுவதும் இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக இல்லையென்றெ இன்றலவும் சொல்லப்பட்டுவருகிறது. வழக்கம்போல் இந்த நாவலும் சிறந்த புனைவுக்கதையென்ற பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் உட்படுத்தபட்டிருப்பதால் இக்காரணம் கொண்டே பத்வா விலக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதத்தோன்றுகிறது.
அது சரி இத்தனை நல்ல நாவலாக இருப்பின் பின் ஏன் மரணதண்டனை அளவிற்கு சர்ச்சைக்குள்ளானது என்பது ஒரு பெரிய விடையளிக்க யாரும் முன்வராத கேள்வி என்றுதான் கூறவேண்டும். சாத்தானின் கவிதைகளை பொருத்தவரையில் நாம் பத்வா மற்றும் ரஷ்டி என்கிற இருதரப்பிலும் நின்று பார்க்கவேண்டுமென்றே தோன்றுகிறது.
வழக்கம்போல் சல்மானின் நாவல் மூலப்பிரதி பெங்குவின் பதிப்பகத்திற்கு வழங்கப்பட்டதும்,
பதிபகத்தின் ஆலோசகரான எழுத்தாளர் திரு. குஷ்வந்த் சிங் அவர்களின் பார்வைக்கு
சென்றிருக்கிறது. அதைபடித்த அவர் “தயவுசெய்து இந்த நாவலை பிரசுரிக்க வேண்டாம்” எனவும், இது முஸ்லீம்களின் அதிருப்தியை பெற வாய்ப்புள்ளது என்று சொல்லியும் கூட அவரின் ஆலோசனை (பின் எதற்கு ஆலோசகர்)நிராகரிக்கப்பட்டு பெங்குவினின் ஒரு பிரிவான வைகிங் பதிப்பகத்தால் (எதிர்பார்த்துதானோ என்னவோ பெங்குவினில் பதிபிக்கவில்லை போலும்) பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இச்செய்தி ரஷ்டிக்கும் தெரியப்படுத்தியிருக்கக்கூடும் அவரும் வேண்டுமென்றே
நிராகரித்திருக்கலாம், இதை வைத்து சர்ச்சை உண்டாக்கிய பகுதியானது தான் அறியாமலேயே கற்பனையில் வந்தது என்றும், அதை எவ்விதத்திலும் நீக்கப்பட தேவையில்லையெனவும்
(இதுநாள் வரை நீக்கப்படவில்லை) சர்ச்சைக்குபிறகு அவர் கூறியிருப்பது நம்பத்தகுந்தவையல்ல. மேலும் நாவலின் ஒட்டத்தில் அந்த புனித நூலில் சாத்தான் கற்பனையாக சிலவற்றை புகுத்துவதும், அது அந்த தூதருக்கு தெரிந்தே நடப்பதும், பின்னாலில் சாத்தானை கண்டித்து அந்த கவிதைகளை அவர் நீக்கிவிட்டாதாகவும் வரும் பகுதிகள், பின்னால் இந்த நாவல் குறித்து ஏதாவது சர்ச்சைக்குள்ளானால் அதுதான் சாத்தானின் கவிதைகள் நீக்கப்பட்டதாக நானே எழுதியிருக்கிறேனே என்றுகூறி தப்பித்துக்கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் பதிப்பிக்கப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.
அடுத்ததாக நாவல் வெளியிட்ட சிலதினங்கள் எந்த பிரச்னையோ பரபரப்போ இல்லாமல் சிறந்த புனைவு நாவல் என்று மட்டுமே பேசப்பட்டதாலும், திடீரென்று சீறிக்கிளம்பிய சர்ச்சைகளைப் பார்க்கும்போது. தாங்கள் எதிர்பார்த்த பரபரப்பு கிடைக்கவில்லையென்று பதிபகத்தாரே சில சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கக்கூடுமோவென சந்தேகிக்க வைத்திருக்கிறது.இன்னும் சற்று மேலே ஆய்வோமானால் ரஷ்டியின் மற்ற புத்தகங்களுக்கு பதிப்பகத்தார்கள் கொடுத்த விலையைவிட சாத்தானின் கவிதைகளுக்கு அதிகமான தொகையினை முன்பணமாகவே கொடுத்திருப்பதால், எப்படியும் சர்ச்சைக்குள்ளாகும் உண்டானால் நிறைய புத்தகங்கள் விற்று இலாபம் கொழிக்கலாம் என்கிற நோக்கமே முன்னிலை படுத்தப்பட்டு பதிபிக்கப்பட்டது என்றும் நம்பலாம்.
இனி பத்வா தரப்பிலிருந்து பார்த்தோமானால். சல்மான் ரஷ்டி மட்டுமல்ல உலகின் 100 விழுக்காடு எழுத்தாளர்கள் உண்மை நிகழ்வுகளை தங்கள் கற்பனையுடன் புனைந்துதான் எதுவும் எழுதுவர். இதில் சமூகசிந்தனைகள், அறிவியல் மற்றும் அரசியல் சமந்தமான விமர்சனங்கள் எழுதுபவர்கள் வேண்டுமானால் கற்பனை தவிர்த்து எழுதலாம். கற்பனை என்கிற போதே அதில் மாயாஜாலங்கள், துப்பறியும் மர்மங்கள் நிறைந்த கதைகள்தான் வாசகர்களிடம் எடுபடும் என்று எழுதுகிறவர்களும் உண்டு.
கற்பனைக்கு எல்லையில்லை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நுழைந்து காட்சிகளையும் திருப்பங்களையும் அள்ளிக்கொண்டுவரும். எழுத்தாளர்களின் கற்பனை மட்டுமல்ல எவரின் கற்பனைக்கும் எல்லைவகுக்க இயலாது. எப்போதும் கதைகளிலிருந்து நடைமுறைக்கு வரும்முன், நடைமுறையிலிருந்துதான் கதைகள் பிறக்கின்றன என்பதனை உணரவேண்டும்.விமர்சனம் என்கிறபோது இதுதான் இவ்வளவுதான் என்கிற கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டோ, முகம் பார்த்தோ, தகுதி பார்த்தோ செய்யப்பட்டால் அது விமர்சனமாகாது. மாறாக உண்மைக்கு விலக்காக துதிபாடுவதாவே அமையும். தவிர உலகில் அறியபடுகிற எதுவும், எவரும், எந்த மதமும் ஏன் அறிவியல் சம்மந்தப்பட்டவைக்கூட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல.
மனிதர்களைவிட மதங்கள் பெருத்துவிட்ட உலகில்; பிறக்கும் போது எவரும் மதங்கள் தவிர்த்து பிறக்க இயலாது, பிறந்த பின் தன் பகுத்தறிவினால் தான் பிறந்த மதத்தை ஏற்றுக்கொள்வதும் வேறு மதத்திற்கு செல்வதும் அல்லது மதங்களே வேண்டாமென நாத்திகம் பேசுவதும் தனிமனித உரிமைகள். மேலும் எந்த மதமும் யாராலாவது விமர்சிக்கப்பட்டால் உடனே அதிலிருப்பவர்கள் வெளியேறிவிடுவதோ அல்லது யாராலாவது அங்கீகரிக்கப்பட்டால் உடனே கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்துவிடும் அளவிற்குகோ, மதங்கள்; நினைத்த மாத்திரத்தில் மாற்றிக்கொள்ளும் ஆடைகள் அல்ல. அப்படியிருப்பின் அதற்கு பெயர் ஒரு மதமே அல்ல. அதே நேரத்தில் அடுத்தவர் மதங்கள் பற்றி விமர்சனம் கூறவருபவர் தான் சார்ந்திருக்கும் மதம் தனது விமர்சனத்தின் எல்லைக்குள் சரியாக செல்கிறதாவென சுய விமர்சனம் செய்தபின்னறே அடுத்தவர் மதம் பற்றி கருத்துக் கூறபடவேண்டும்.
சாத்தானின் கவிதை நாவலை பொருத்தமட்டில் அதன் மீது வழங்கப்பட்ட பத்வாவினை ஏற்றுக்கொண்ட யாரும் முழுமையாக படிக்கவில்லையென்றே தெரிகிறது. திரு.கொமேனியிடம் கூட நாவல் முழுவதும் பிழையிருப்பதாகவே சொல்லப்பட்டுருக்கலாம். எனவே அந்நாவல் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மரணதண்டனை என்பது சற்று அதிகப்படியானதுதானே ஒழிய அதற்கு கிடைத்த பரிசுகளும் பத்வா விலக்கி கொள்ளப்பட்டபின் நூலை வாசித்தவர்களிடமும் ஒரே மாதிரியான கருத்துக்களை வைத்து பார்க்கும் போது ஒரு சில அத்தியாயங்கள் தவிர அத்தனை பக்கங்களிலும் சர்ச்சை இல்லையென்பதே தெரிகிறது.
மேலும் அரபுநாடுகள் என்கிற கட்டமைப்பின் படி பார்த்தோமானால் ஒவ்வொரு அரபுநாட்டிற்கும் ஒரு சட்டம் (பல இஸ்லாமிய சட்டமல்ல) ஒவ்வொரு நாட்டின் உள் மாநிலங்களுக்கும் சில தனிசட்டங்கள் என பிரித்து ஆளப்படுவது உண்மை. எல்லாம் அரபுநாடுகள் தானே ஒழிய அனைத்திற்கும் பொதுவான, இறுதிதூதர் வழங்கிய சட்டம் நடைமுறையில் இல்லையென்பது அரபநாடுகளில் வாழும் என்போன்றவர்களுக்கு தெரியும். எல்லா மதங்களைப்போலவே முஸ்லீம்களும் தங்கள் சட்டங்களை சடங்குகளாகவே வைத்திருக்கின்றனர் என்று ஒரு நிகழ்வில் ஒப்புக்கொண்ட இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கருத்து இப்போது நினைவிற்கு வருகிறது. எனவேதான் அரபுநாடுகள் தொடங்கி இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், இராக், பாலஸ்த்தீன், சூடான் போன்ற நாடுகளில் ஷியா, சன்னி, குர்த், போரி, என சிறு சிறு குழுக்களாக பிரிந்து, அவரவர் தங்கள் மதகுருமார்கள், முன்னோர்கள் சொல்வதன்படி தொழுகை, நோன்பு மற்றும் பலவித நேர்ச்சைகள் என ஒருவரிலிருந்து மற்றவர் மாறுபட்டு தங்களது வழிபாட்டு முறைகளை வைத்திருக்கின்றனர் என்பது தெரியும். இதில் ஷியாக்கள் சன்னி முஸ்லீம்களை தங்கள் பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. மற்றவர்கள் எப்படியோ?
திரு.கொமேனி அவர்கள் இஸ்லாமிய மத சட்டங்கள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யும் ஒரு குழுவின் தலைவராக இருந்தவர். எனவே அந்த குழு உறுதியாக தான் சார்ந்த ஷியா அமைப்பினை மட்டுமே வழிநடத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அப்படியெனில் அங்கேயே பத்வா குறித்தான முதல் விமர்சனம் தொடங்கிவிட்டது எனலாம். ஏனெனில் ஷியாக்களின் வழிபாடுகள் மற்ற பிரிவினருக்கு முற்றிலும் மாறுபட்டவையென்பது தெரியவருகிறது. அப்படியாயின் எந்த சட்டத்தின் அடிப்படையில் பத்வா வழங்கினார் அதை மற்ற முஸ்லீம்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டனர் என்கிற வினாக்கள் எழுகின்றன.
அப்படி அவர்சொன்னால் சரியெனில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையிலிருந்து அவரின் எல்லா தீர்ப்புகளும் உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களாலும் ஏற்றுக்கொள்ளபடவேண்டும். வெரும் உணர்ச்சிவயபாட்டினால் எடுக்கப்படும் முடிவுகள் ஏற்றுக்கொள்ள படுமெனில் மதங்களுக்கென்ற சட்டங்கள் நடைமுறைபடுத்த இயலாது என்கிற நிலைதான் எழுகிறது.
உதாரணமாக சமீபத்தில் நிகழ்ந்தவையான பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் என்பதை சொல்லலாம். பாக்கிஸ்தான் முஸ்லீம் நாடுதான் என்றாலும் அங்கு இருக்கும் சிறு சிறு இன குழுக்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சையானது பள்ளிவாசல்களில் குண்டுவைப்பது அல்லது ஒருவரை ஒருவர் பள்ளிவாசல்களில் சுட்டுக்கொல்வது என நீண்டுக்கொண்டே செல்கிறது.இதுவே இந்தியாவில் நடக்குமெனில் அதற்கு மத சாயம் பூசப்பட்டு எதிர்தரப்பில் சில அப்பாவிகள் கொள்ளப்படலாம்.ஆனால் அதுவே பாக்கிஸ்தான் போன்ற முஸ்லீம்களின் நாட்டில் நடப்பதுதான் நமக்கு வியப்பினை அளிப்பது மட்டுமல்லாமல் முஸ்லீம்களின் இஸ்லாம் குறித்தான உள்வாங்கள் எந்த அளவிற்கு பலவீனப்பட்டிருக்கிறது என்பதும் தெரிகிறது.
எனவே தான் சாத்தானின் வேதங்களுக்காக சல்மான் ரஷ்டிக்கு கொடுக்கப்பட்ட பத்வாவை உலக முஸ்லீம்கள் எந்த கோட்பாட்டின் அடிப்படையில் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தார்கள் என்பது கேள்விக்குள்ளாகிறது.ஏனெனில் ஈரானேக்கூட ஷியா என்கிற கோட்பாட்டையே பெரிதும் ஆதரிக்கிறது எனவே அதையே உலக முஸ்லீம்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நாளை ஏதாவது ஒரு பத்வா ஈரானால் வழங்கப்பட்டால் அதை உலக முஸ்லீகளில் மற்ற பிரிவினர் எதிர்ப்பார்களே ஒழிய ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதையெல்லாம் வைத்துப்பார்க்கையில் சல்மான்ரஷ்டிக்கு தேவையில்லாமல் பத்வா வழங்கி அவருக்கும் அவரின் புத்தகங்களுக்கும் இலவச விளம்பரம் வழங்கியிருக்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. மேலும் எதையும் கேள்விக்கேள் என்கிற தத்துவப்படி நாம் இரண்டையும் கேள்விக்கேட்கிறோம் என்பது மட்டுமல்லாமல் ஒன்றின்மேல் விமர்சனம் வைக்கப்படால் அதற்கு தகுந்த பதில் தரவேண்டுமே தவிர விமர்சனமே கூடாது என்கிற பாசிசமானது அதைகுறித்து மேலும் மேலும் தவறான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.
No comments:
Post a Comment