இசைச்செம்மல் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் இலக்கியப்பணிக்கு அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவருக்குப் பாபிரெட்டிப்பட்டிப் பெரியார் பகுத்தறிவுப் பாசறையும், மோசிகீரனார் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பாராட்டுவிழாவின் போது அய்யா திரு.இலக்குவனார் மறைமலை அவர்கள் அவருக்கு வழங்கிய வாழ்த்துப்பாவைக் இழே காணலாம்.
சிலம்பொலியார்க்கு உலகெங்கும் இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்துள்ளதால் அவர்கள் பார்வைக்காக இதனைத் மீள்பதிவிடுகிறேன்.
-நன்றி:இலக்குவனார் மறைமலை
============================================
சிலம்பொலிச் சான்றோர் வாழியவே!
சிலம்பும் குறளும் சங்க நூல்களும்
சீறாப் புராணமும் மணிமேகலையும்
நலமிகு பொழிவால் நயமிகு எழுத்தால்
உலகெலாம் பரப்பிடும் அறிஞர் கோவே!
கொங்குவேள் தந்த பெருங்கதைச் சுவைதனை
எங்கும் முழங்கி ஏற்றம் பெருக்கிப்
பொங்கும் தமிழ்ச்சுவைப் பொழிவின் முன்னர்
மங்கும் கொல்லித் தேன்சுவை உண்மை!
பெருமிதம் நிறைந்த உம்மைப் போற்றிடப்
பொருத்தம் வாய்ந்த புகழ்மொழி தேடியே
வருத்தம் அடைந்தார் வண்டமிழ்க் கவிஞர்.
ஓரியின் வில்லும் உமது சொல்லும்
நேரிதிற் சென்று இலக்கை எய்திடும்;
சிலம்பை இயற்றிய இளங்கோ அடிகளும்
சிலம்பொலி பேச்சைக் கேட்க அவாவுவார்;
உமறுப் புலவரும் உமதுரை கேட்டால்
உளமிக மகிழ்வார் எம்மைப் போன்றே!
கலக்கம் தவிர்த்துக் கற்போர் தெளிவுறத்
தமிழ்க்கடல் பெற்ற கலங்கரை விளக்கமே!
பெரியார் நெறியிற் பிறழா அரிமா;
அண்ணா வழியினின் றகலா அண்ணல்;
கலைஞர் போற்றிடும் புலமைக் கொண்டல்;
புலவர் அனைவரும் அணுகிடும் புகலிடம்;
பண்பினால் இமயம்; அன்பினால் பெருங்கடல்;
இயற்றிய பாடலின் பொருள்தெளிந் திடவே
இன்றமிழ்ப் பாவலர் உம்மை அணுகி
அணிந்துரை தேடி அணிவகுக் கின்றார்;
பாரதி தாசனின் பாநலன் அனைத்தும்
பாரெலாம் பரப்பிய பைந்தமிழ்ப் பாணரே!
புலவர் குழந்தை வழங்கிய நூலை
இராவண காவியத் தேன்சுவை அமுதைப்
பராவிப் போற்றிய திராவிடத் திலகமே!
தமிழினைப் போற்றும் புலவர் போன்றும்
இறைவனை வாழ்த்தும் அடியவர் நிகர்த்தும்
உம்புகழ் போற்றி உம்மை வாழ்த்தியே
உள்ளம் மகிழ்ந்திட விழைகிறோம் நாங்கள்!
வாழிய பெரும! வாழிய நெடிது!
மக்கள் சுற்றம் நண்பர்
மிக்க நலனுடன் சிறப்புற வாழ்கவே!
---மறைமலை இலக்குவனார்