Saturday, July 03, 2010

மரபணு மாற்ற பி.டி கத்தரிக்காய்

"என் வூட்டு கதவ புடிங்கி எதிர்வூட்டுல போட்டுட்டு விடிய விடிய காவ காத்த கத தெரியுமா" இல்லையா இது காவகாத்த கத மட்டுமில்லை காவுகொடுக்கும் கதையும் கூட.

இப்போது இந்தியனை பிடித்திருக்கும் அடுத்த சனி இந்த பி.டி.கத்திரிக்காய் அட கத்திரிக்காய்க்குகூட அப்பன் பெயரெல்லாம் இருக்குதாண்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியும்.
நமது நாட்டின் விவசாயம்(அப்படின்னா), விவசாயிகள்(இன்னும் உயிருடந்தான் இருக்காங்களா?) அப்படியே நம்ம வாழ்வையும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது மரபணுகள் மாற்றப்பட்ட விதைகளில் இருந்து மனிதனை மனிதனே சிறுக சிறுக கொலை செய்ய கண்டிபிடிக்கப்பட்ட பி.டி.கத்தரிக்காய.

மனிதவளம்,தொழில்வளம்,மண்வளத்தைப் பெருக்கி உலகிற்கு நெல்முதல் புள்வரை வளர்த்தெடுத்து, விவசாயத்தை தங்கள் உதிரம் ஊற்றி வளர்த்த நாட்டில் வீரிய விதைகளைக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்கிற மனநோயானது இந்தியாவில் மனிதம் தவிர்த்து பணத்தை மட்டுமே மூலதனமாகவும், பணத்தை மட்டுமே அறுவடையாகவும் யோசிக்கும் மேல்தட்டு வர்க்கத்தின் வியாபார புத்தி. தற்போது பி.டி.கத்தரிக்காய் என்ற மேற்கத்திய வணிக கலாச்சாரத்தை விவசாயத்தின் அடுத்த கட்ட சோதனை என்று நமக்கு காதில் பூ சுற்றும் உத்தி மிக வேகமாக நடந்துவருகிறது.

ஏற்கனவே நாம் மஞ்சளையும், பாசுமதி அரிசியையும் இன்னபிற நம் மண்ணுக்கே உரிய தானியங்களையும் அடுத்தவனிடம் அடகுவைத்துவிட்டு இப்போது பிச்சைக்கேட்டு வரிசையில் நிற்க அவன் அள்ளிகொடுப்பதில்லை நம்மிடத்திலிருந்து அபரித்துக்கொண்டதை கிள்ளிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றில் தன்னுடைய பாசிச அதிகார மூளையை செலுத்தி சில இரசாயன கலவையை அரிசியுடனும், மஞ்சளுடனும் சேர்த்து அதிவேக விளைச்சல் என்று நமக்கே திருப்பி அனுப்புவதோடு மட்டுமல்லாமல், இப்படிபட்ட கலவைகளை பயன்படுத்துவோரை தங்களின் அடிமையாக ஆக்கி அடிபணியவைக்கும் நச்சு வேலையையும் அறியாமல் உலகம் அவனிடத்தில் சரணாகதியடைகிறது.

பலதரப்பட்ட வீரிய விதைகளை உருவாக்கி மனிதனை அழிவின் விளிம்பிற்கே கொண்டுச்சென்ற வேளாண்மை ஆய்வானது இன்று பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மையான வணிக நோக்கத்ததிற்கு உள்ளாகி, அதை நியாயபடுத்தும் முயற்சியும் சிறப்பாக நடந்தேரி வருகிறது. இதேப்போல் ஆறுமாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட அரிசியானது சுருங்கி மூன்றுமாத சாகுபடியாக அதனால் கைக்குத்தல் அரிசியின் தரமிழந்து போனது நினைவிருக்கும். இன்று அதன் தொடர்ச்சியாக பி.டி. காட்டன் என்ற பருத்தி, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பயிரிடப்பட்டு, அது நல்ல மகசூலைத் தந்ததால், விவசாயிகள் பெரு மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த விளைச்சல் இதனால் பாதிக்கப்பட்டதோடு அல்லாமல் அடிமண்ணும்,மேல் நிலமும் கெட்டுப்போய் வேளாண்மையே பெரும் கேள்விக்குறியாகி பல உழவர்களின் வாழ்க்கை இருண்டுப்போனது. இது ஒருகாலத்தில் பசுமை புரட்சி என்று வந்தது என்பதை நாம் அறிவோம்.

இதன் தொடர்ச்சியாகவே மழைபொய்த்ததும், வேளாண் நிலங்கள் எல்லாம் வீட்டுமனையாகிப் போனதாலும், அரசு முழுமையாக விவசாயிகளை கைவிட்டதாலும் மழைபெய்தாலும், மழைப்பொய்த்தாலும் பாதிக்கிப்படும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் இந்த பசுமை புரட்சி என்ற பி.டி. காட்டனின் குற்றம்தான் என குற்றம் சாற்றப்பட்ட நிலையில் அது அப்படியே நிழுவையில் இருக்கையில், அடுத்ததாக பி.டி. கத்தரிக்காய் என்ற உயிர்கொல்லியை அரசின் ஆதரவுடனும், அதிராகத்தின் துணையுடனும், ஊழலேயே தங்களின் குருதியாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும் தாண்டி, பணத்திற்க்காக எதையும் செய்யும் ஒரு சில வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களின் உதவியுடன் மக்களிடையே திணிப்பதில் வேகம் காட்டி வருகிறது மன்சாட்டோ.

பி.டி. கத்திரிக்காய் என்று கூறப்படும் மரபணு மாற்ற கத்தரி விதையை சாகுபடி செய்தால், அவைகளில் தண்டுப் புழு வராது என்று கூறி, அதைப் பயன்படுத்துமாறு விவசாயம் தெரிந்த விவசாயிக்கு அறிவுரை கூறப்படுகிறது. சமூக ஆர்வலர்களும், மனசாட்சியுடைய அறிவியலாளர்களும், விதை ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், “அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று மன்சாட்டோவிற்குச் சாதகமாக பேசும் சுற்றுச் சூழல் அமைச்சரைக் கொண்டுள்ள மத்திய அரசால் இந்தியாவின் உழவர் வாழ்விற்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

இதோடு மற்றொரு அபாயமும் எழுந்தது. அது தமிழக அரசிடமிருந்து உருவானது. வேளாண் பல்கலையில் பட்டம் பெற்றப் படிப்பாளிகள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைக் கூற வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்ட வரைவை தமிழக அரசு இயற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உழவில் பிறந்து உழவிலேயே உழன்றுக் கொண்டிருக்கும் நமது நாட்டின் உழவனுக்கு வேளாண் பல்கலையில் படித்தவன் மட்டுமே ஆலோசனை வழங்க வேண்டுமாம். விவசாயம் எனும் மானுடத்தின் பூர்வீகத் தொழில் ஆய்வுக் கூடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்த்தியப் பின்பு பின்வாங்கியது தமிழக அரசு. சிறிது காலம் கழித்து வேறொரு வடிவில் மீண்டும் வந்து மிரட்டலாம்.

மரபணு மாற்ற பி.டி கத்தரிக்காய் என்பது மண்ணுக்கடியில் இருக்கும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படும் மரபணுவைக் கொண்டு செய்யப்படும் விதையிலிருந்து வரும் கத்தரிச் செடியின் காய், இலை, பூ, தண்டு என எதைப் புழு கடித்தாலும் செத்துபோகும் அளவுக்கு செடி முழுவதும் நஞ்சு நிறைதிருக்கும். இதனை உண்பவர்களுக்கு ஒவ்வாமை, மலட்டுத்தன்மை,புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது.

தாவரம் அல்லாத பாக்டீரியாவின் மரபணுவைச் செலுத்தி கத்திரிக்காயை விளைவிக்கும் தொழில் நுட்பம் என்பதால் இது சர்ச்சையை உருவாகியுள்ளது. இதை தொழில் நுட்பம் என்ற பெயரில், இந்திய விவசாயத்தை படிப்படியாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் அமெரிக்க விதை நிறுவனமான மான்சாண்டாவின் கண்டிப்பிடிப்பாகும். மஹிகோ என்ற இந்திய நிறுவனம் இதன் உரிமத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வீரிய ஒட்டு விதைகளாலும், இராசாயன உரங்களாலும் மர்மக்காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை மனித இனத்தைப் பாதித்து வருகிறது. கத்தரிக்காய் நம் நாட்டு சொத்து என்பதை மறந்து, பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வரும் முயற்சி தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உலக மயமாதலின் பக்கவிளைவு இது என்பதை அரசு உணர வேண்டும்.

பி.டி.கத்திரிக்காய் என்று களத்தில் நிற்கும் எமன் நம் அருகே வர துடிக்கும் நேரத்தில் இதை மறக்கடித்து கொல்லைவழியாக கொண்டுவரும் உத்தியை அரசும். முதலாளியமும் பெரும் முயற்சியில் இறங்கிவுள்ளதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. மறந்தால் ஒரு போபால் என்று எதிர்காலத்தில் இல்லாமல் ஒட்டுமொத்த நாடே போபாலாகும் அபாயம் அருகில் உண்டு. கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டவனின் வாயில் மேலும் மண்ணை போட்டதுப்போல் கத்திரிக்காயால் பாதிக்க போகிறவர்களுக்கு எந்த மண்ணையும் போட முடியாது ஏனெனில் அதற்குள் முளை செயல் இழந்து வழக்குப்போடும் அளவிற்கு அறிவே இருக்காது என்பது உறுதி.

2 comments:

  1. சுயநலம் உள்ள அரசியல்வாதி இருக்கும் வரை பி.டி.கத்திரிக்காய் போல் புது புது வடிவத்தில் மக்களை மெல்ல கொள்ளும் நச்சுகள் வரத்தான் செய்கிறது...

    ReplyDelete
  2. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete