முஸ்தீன் – இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். கீற்று ஆறாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடந்த ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கை முஸ்லிம் மக்களின் நிலை, தமிழர் – முஸ்லிம்கள், பிளவு, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எடுத்த விரிவான நேர்காணல் இது. அவரவர் தரப்பு நியாயங்களை மட்டுமே அவரவர் பேசும் நிலையில், துணிச்சலுடன் தான் சார்ந்த சமூகத்தின் தவறுகளையும், போராளிக்குழுக்கள் மற்றும் அரசின் தவறுகளையும் கதைத்துள்ளார். தமிழர் – முஸ்லிம் ஒற்றுமை குறித்தான பல புதிய திறப்புகளுக்கு இந்நேர்காணல் வழிவகுக்கும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளுக்காக அவரது புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பேட்டி குறித்த நம்பகத்தன்மைக்காக, பேட்டி குறித்த முஸ்தீனின் கருத்தை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம்.
“பொதுவாக பதிவு முயற்சிகள் என்பது எல்லா இடங்களிலும் பலரால் செய்யப்படும் வழமையான ஒன்று. ஆனால், கீற்று இணையதளம் செய்திருக்கிற என்னுடைய நேர்காணல் என்பதை மிக வித்தியாசமான ஒன்றாக என்னால் பார்க்க முடிகிறது. ஒரு நேர்காணலைச் செய்பவர்கள், பேட்டி கொடுப்பவரின் கருத்துக்களை உள்வாங்கி, தன்னுடைய இயைபுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுகின்ற சூழல் நிலவுகின்ற இந்தக் காலத்தில், பல நாட்கள் நாங்கள் கதைத்த விடயங்களை முழுமையாகப் பதிவு செய்து, தட்டச்சு செய்த பின்னால், அதை மீண்டும் என்னுடைய பார்வைக்குக் கொண்டுவந்து, ‘நீங்கள் கதைத்த விடயங்கள் எல்லாம் சரியாகப் பதிவு செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துமாறு வேண்டுவது என்பது இப்போதைய சூழ்நிலையில் ஒரு வினோதமான செயலாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. கருத்துக்களைத் திரித்து எழுதும் சூழ்நிலையில் உங்களது கருத்துக்கள் சரியாக வந்துள்ளதா என்று சரிபார்க்கச் சொல்வது உயர்ந்தபட்ச நாகரிகமாகக் கருத வேண்டியிருக்கிறது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நான் பேசிய விடயங்கள் பலத்த சர்ச்சைகளையும், தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் ஒருவித அதிருப்தியையும் உண்டாக்கியது. இந்தப் பேட்டியை முழுமையாக வாசித்தால், அன்றைக்குப் பேசப்பட்ட விடயங்கள் வேறொரு கோணத்தில் புரியப்பட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றேன். இதுபோன்ற – மக்களின் மனோநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற – நியாயமான பதிவுகள் காலகாலத்திற்கும் நின்று, நியாயத்திற்குக் குரல் கொடுக்கின்ற ஒரு உண்மையான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன். ”
1.
கீற்று: இலங்கையில் முஸ்லிம்கள் மீதான முதல் தாக்குதல் எது?
அது பிரிட்டிஷ் காலத்தில் 1915ல் நடந்த கலவரம். மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு அமைதியாகப் போக வேண்டும் என்ற சட்டவிதி உண்டு. ஆனால் சிங்களவர்கள், பள்ளிவாசல் வழியாக ‘பெர’ (பறை மாதிரியான வாத்தியக்கருவி) அடித்துக் கொண்டு போனதால் பிரச்சனை ஆரம்பித்தது; பின்பு கலவரமாக மாற்றப்பட்டது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்திலேயே இனரீதியான வேறுபாடு ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவுதான் 1915 கலவரம்.
அந்த நேரத்தில் பிரிட்டிஷார் முஸ்லிம்களுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் பக்கம் நியாயம் இருந்தது என்பதற்காக அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. பெரும்பான்மையை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் சிங்களர்களை எதிர்த்து முஸ்லிம்கள் பக்கம் நின்றார்கள்.
பிரிட்டிஷார் இந்தக் கலவரத்திற்குக் காரணமான சிங்களர்களைக் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யச்சொல்லி பிரிட்டிஷாரிடம் கோரிக்கை வைத்தவர் ராமநாதன் என்கிற தமிழர். பிற்காலத்தில் சிங்களர்களை விடுதலை செய்யச் சொல்லி நீதிமன்ற உத்தரவு வந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். ‘கொல்லப்பட்டபின்புதான் உத்தரவு கிடைத்தது’ என்று, கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
ராணுவத்திற்கும் புலிகளுக்கும் நடந்த கடைசி யுத்தத்தில் இந்திய அரசின் கோரிக்கைப்படி அதாவது தமிழக அரசியல்வாதிகள் இந்திய அரசிடம் சொல்லி அவர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் சொல்லி புலிகள் சரணடைவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சரணடைந்தவர்கள் அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த விடயத்திற்கு ராணுவத்தளபதி அளித்த பதில், அவர்கள் சரணடைய வருவது தங்களுக்குத் தெரியாது எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னரே தனக்கு அந்தத் தகவல் கிடைத்ததாகவும் சொன்னதாக பத்திரிகைகளில் படித்தேன். இதுபோன்ற ஒரு காரணத்தைத்தான் பிரிட்டிஷார் சிங்களர்களைக் கொல்வதற்கும் பயன்படுத்தினர்.
கீற்று: இந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது?
அப்போது முஸ்லிம்கள் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ந்தவர்களாக இருந்தனர். அந்தக் கலவரத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டது, வீடுகள் உடைபட்டது தவிர உயிர்ப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்தக் கலவரம் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே நீ வேறு, நான் வேறு என்ற பிரிவை ஆழமாக ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் முஸ்லிம்களும் ஒரு தவறு செய்தனர். அவர்கள் தங்களது பிரச்சனையை தங்களது பக்கம் நின்று தங்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தனர். சிங்களர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம் ராமனாதன் வாதாடியதை ‘தமிழர்கள் தங்களுக்கு எதிரானவர்கள்’ என்ற கண்ணோட்டத்தில் தவறாகப் பார்த்தனர். சிங்களர்களும் பள்ளிவாசல் முன்பு பறை அடித்ததை தவறாகப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் ராமனாதனை சிங்களர்கள் வீரராகப் பார்த்தனர். அதே ராமநாதனை 50க்குப் பிறகு சிங்களர்கள் எதிரியாகப் பார்த்ததும் நடந்தது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அந்தந்த இனக்குழு தங்களது பார்வையில் மட்டுமே பார்த்தனர். தங்கள் மொழிசார்ந்த, இனம்சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாரிடமும் இருக்கவில்லை.
கீற்று: இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு நிலைமை எப்படி இருந்தது?
1948 சுதந்திரத்திற்குப் பிறகு, 1956ல் தனிச்சிங்கள சட்டம் வந்தபோது மொழிரீதியான பிரச்சனை கூர்மையடைகிறது. தமிழ் பேசுகிறவன் வேறு, சிங்களம் பேசுகிறவன் வேறு என்கிற பிரிவினை வந்தது. முஸ்லிம்கள் சிங்களர்கள் வாழும் பகுதியில் அவர்களோடு கலந்து வாழ்ந்தாலும் அவர்களது தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. சிங்களர் பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களது கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்ற இனத்திற்குள் அடக்கப்படவில்லை. தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவர்கள் ‘தமிழர்கள்’ என்றும் முஸ்லிம்கள் ‘இஸ்லாமியத் தமிழர்கள்’ என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர். இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தைப் பிரயோயகம் அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்காக முஸ்லிம் தலைவர்கள் அப்போது போராடிப் பார்த்தார்கள். அது தமிழ்த் தரப்பில் எடுபடவில்லை. உடனடியாக ஒரு முரண்பாட்டு ரீதியில் முஸ்லிம் தலைவர்கள் அதை அணுகத் தொடங்கினார்கள். முஸ்லிம்கள் பேசும் தமிழில் அதிகமான அரபுச் சொற்கள் கலந்திருந்ததால், தமிழர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி, முஸ்லிம்களால் தமிழில் பேசமுடிந்தது. இதனால், மொழிரீதியாக ‘நீ வேறு நான் வேறு’ என்ற விடயத்தை முஸ்லிம் தலைவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள். இது பிற்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அத்தோடு, முஸ்லிம் தலைவர்கள் ‘சோனகர்கள்’ என்னும் புதிய இனத்துவ அடையாளத்தினுள் முஸ்லிம்களை உட்படுத்தினர். எழுபதுகளின் பிற்பாடுகளில் இந்த சோனகர் என்னும் அடையாளம்கூட கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது. ‘சோனி’ என்கிற இழிவான உச்சரிப்புடன் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த இழிநிலையைப் போக்குவதற்கு முஸ்லிம்கள் போராடிய அதே நேரத்தில் ஒரு தமிழ் புத்திஜீவியேனும் அதைக் கண்டிக்க முன்வரவில்லையே என்கிற ஆதங்கம் இருந்தது. இவ்வாறு பயன்படுத்தவேண்டாம் என்று ஒருவராவது குரல் கொடுத்திருந்தால், இனத்துவரீதியில் ஒரு ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். இதுதவிர, சிங்களர்களும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால்தான் அழைத்தனர். அது சிங்களப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
இலங்கை முஸ்லிம்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கவில்லை. மிகவும் பாமரத்தனமாக இருந்தார்கள். எனவே பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தோடு ஒன்றாகக் கலத்தல் போன்றவற்றை அவர்களால் பெரிதாகச் செய்ய முடியவில்லை. இலங்கை சுதந்திரப் போரட்டத்திலும் ஓரிரு தலைவர்களைத் தவிர அவர்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்திருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் தங்களை உட்படுத்திக்கொள்ளவில்லை. அதை அவர்கள் தனித்துப் பார்க்கவே இல்லை.
அதே நேரத்தில் முஸ்லிம்களை இனரீதியாக பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் சிங்களப் பிரதேசத்திற்குள் சிங்கள மக்களை அண்டி வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த 87களுக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரைக்கும் முஸ்லிம்களின் அதிகாரம் இருந்தது – வடகிழக்கிற்கு வெளியில் – சிங்களர்களை அண்டி வாழ்ந்த முஸ்லிம்களின் கையில் தான். அதனால் அவர்கள் சிங்களர்களை எதிர்க்கும் போக்கைக் கொண்டிருக்கவில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கு என்று தனிக்கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படி ஒன்று இல்லை. இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழ்கிற பிரதேசம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள். அவர்கள் எல்லா அரசியல் போராட்டங்களிலும் தமிழர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அஸ்ரப் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தோடு இணைந்து வேலை செய்தவர்தானே.
ஈழப்போராட்டம் ஆயுத வடிவத்திற்கு மாறியபின்பு, இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. இருதரப்பும் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமை உருவானது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருவருக்கும் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட அந்த உரையாடலில் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க வேண்டாம என இஸ்மாயில் கூற, நீங்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் கூறுகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அந்த உரையாடல் முழுவதும் இதுதொடர்பான விவாதம் தான் நடந்தது.
இதில் தவறு இருதரப்பு மீதும் இருக்கிறது. முஸ்லிம்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்வதை விரும்பவில்லை. மொழிமீது உள்ள பற்றினால் ஒரு முஸ்லிம் தன்னை தமிழர் என்று சொன்னால் அவரை விரோதியாகப் பார்க்கும் மனநிலையும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது.
கீற்று: சிங்களப் பேரினவாதம் இந்தப் பிரிவினையை எப்படி பயன்படுத்திக் கொண்டது?
முஸ்லிம்கள் தங்களது இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளால், 1956களில் மொழிப்பிரச்சனை வந்தபோதும் மவுனமாகத்தான் இருந்தார்கள். பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தபோதும் முஸ்லிம்கள் வாய்திறக்கவில்லை. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை என எடுத்துக் கொண்டனர். முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
சிங்கள அரசாங்கம் முஸ்லிம்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களை வழங்கினார்கள். 1972களில் பதியுதீன் மஹ்மூத்திற்கு கல்வி அமைச்சும், 77களில் ஏ.சி.எஸ்.ஹமீதுவிற்கு வெளிநாட்டு அமைச்சும் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சபாநாயகராக ஒரு முஸ்லிமே இருந்தார். போராட்டக் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நபராக ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். முஸ்லிம்கள் தங்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் எடுப்பார்கள் என சிங்களர்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அபிவிருத்தித் திட்டங்களில் இந்த முஸ்லிம் தலைவர்கள் மூன்று சமூகத்தவரும் திருப்தி அடையும் வகையில் செயல்பட்டார்கள்; தேசிய இனப்பிரச்சினையில் சில அடிப்படைகளைத் தவறவிட்டுவிட்டார்கள்.
கீற்று: இது மறைமுகமாக முஸ்லிம்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பியது என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆமாம். இந்த அடிப்படையில் தான் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற சொல்லாடல் மேலும் முனைப்புப் பெறுகிறது. இதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தியது சிங்களப் பேரினவாதம் தான்.
கீற்று: அது எப்படி என்று கூறமுடியுமா?
சிங்களர்கள் சில முஸ்லிம்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததன் தொடர்ச்சியாக நகர்ப்புறத்து வணிகம் சில முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. 70களின் தொடக்கத்தில் சிங்கள இனவாதிகள் பிரதான நகர்ப்புறங்களை தங்களது இன அடையாளத்தோடு கொண்டு வருவதற்காக மாதம்பை என்ற இடத்தின் மதிப்பை இழக்கச் செய்து, சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமான – புதிதாக உருவாக்கப்பட்ட சில்வா டவுன் வழியாக பிரதான போக்குவரத்துகள் அனைத்தையும் மாற்றினார்கள். 76-ல் புத்தளத்திலும் இதைச் செய்தார்கள். அதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடமாகாணங்களுக்குப் போகும் சகல வாகனங்களும் புத்தளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் புதிதாக ஒரு சாலையை உருவாக்கி சிங்களமயப்படுத்தி அதன்வழியாக எல்லா வாகனங்களும் சென்று வருவதற்கான திட்டமிடுதலைச் செய்தனர்.
இதில் இருக்கும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்ட முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள பொத்துவில்லு என்ற இடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்கின்றனர். அங்கு வந்து போலீசார் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் பள்ளிவாசலிலேயே கொல்லப்படுகின்றனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இருநூற்றுக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தவர் ஒரு முஸ்லிம் ஏ.எஸ்.பி. ஆனால் அது சிங்கள அரசு நடத்திய தாக்குதலாகத்தான் பார்க்கப்பட்டது.
அந்த முஸ்லிம் ஏ.எஸ்.பி. இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வேறுமாதிரியாகப் பார்க்கப்பட்டிருக்கும். சிங்களர்களும், தமிழர்களும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்றுதான் முஸ்லிம்தரப்பு பேசியிருக்கும். இது ஒரு துரதிருஷ்டவசமான நிலை. தன்பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்ப்பது என்பதை முஸ்லிம்கள் பக்கம் உள்ள ஒரு பிரச்சனையாகத்தான் நான் பார்க்கிறேன்.
முஸ்லிம்கள் சிங்கள அரசோடு சேர்ந்து போராளிகளை கொலை செய்ததாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் வரும் தகவல்களையும் இந்தப் பின்னணியில் தான் பார்த்தாக வேண்டும். ஒரு சாதாரண முஸ்லிம் துப்பாக்கி எடுத்து யாரையும் கொன்று விட முடியாது. செய்தவன் சிங்கள அரசாங்கத்தின் ராணுவத்தில், போலிசில் பணிபுரிந்த முஸ்லிம். அப்படியானால் அந்தச் செயலை செய்தது அரசாங்கம் என்பதையும், செய்தவன் அரசாங்க ஊழியன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். அரசபடையினர் செய்த கொலையாகப் பார்க்காமல் முஸ்லிம்கள் செய்த கொலையாகத் தான் பார்த்தார்கள்.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இருந்த முஸ்லிம்களும், முஸ்லிம்களைக் கொன்றார்கள். ஆனால் அப்போது அவர்களை விடுதலைப் போராளிகளாகத்தான் பார்த்தார்களே தவிர முஸ்லிம் என்று யாரும் அடையாளப்படுத்தவில்லை. குறிப்பிட்ட அமைப்பைத் தான் அடையாளப்படுத்தினார்கள்.
90களுக்குப் பிறகு தான் முஸ்லிம்கள் 100 வீத ஒருமைப்பாட்டுடன் சிங்கள ராணுவத்தில் சேர்கின்றனர். நான் ஒரு முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகிறேன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்ற உணர்வுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டிற்கு காரணம்.
90களுக்குப் பிறகு இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் நிறைய பேர் கொல்லப்பட்டார்கள். இதை பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே செய்ததாக ‘உறங்காத உண்மைகள்’ என்ற பெயரில் வெளிவந்த சி.டி.யில் கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார். இதை அவர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து வந்த பின்னால் சொன்னதால் நாங்கள் அதை முழுக்கவும் நம்பி விடவில்லை. அந்த கொலைகள் நடைபெறும்போது கருணாவும் எல்.டி.டி.யில் தான் இருந்தார் என்பதையும் நாங்கள் மறந்து விடவில்லை.
ஏனெனில் கிழக்கில் அப்போது கருணா தான் தளபதியாக இருந்தார். அப்படியானால் அங்கு கருணாவிற்கு கீழிருந்தவர்களை அவர்தானே கொன்றிருக்க வேண்டும்? அதைப்பற்றி பேசாமல் பிரபாகரன்தான் குற்றவாளி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எல்லாப் பழிகளும் பிரபாகரன் மீதே சுமத்தப்படுகிறது. அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோரணையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புலிகள் இல்லாத வெற்றிடத்தில் இதுமேலும் வலுப்பெறுகிறது. இப்படிப் பார்ப்பது தவறு; இது பிரச்சினையில் இருந்து இன்னொரு தரப்பு தப்பிக் கொள்வதற்கான உத்தியாகும். இப்படித்தான் ஒருபக்க பார்வையோடு பிரச்சனைகள் பேசப்படுகின்றன.
கீற்று: கொழும்புவில் தமிழர்கள் அதிகாரமற்று இருந்தார்கள். முஸ்லிம் மக்களும் அப்படித்தான் இருந்தார்களா? இதுபற்றி சொல்லுங்கள்?
கொழும்பு மட்டுமல்ல இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் எல்லாப் பகுதியிலும் அவர்கள் அதிகாரமற்று தான் வாழ்ந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் அதிகாரத்தில் இருந்தார்கள்.
2.
கீற்று: தமிழர்கள் தங்களுக்கு என்று போராட்ட அமைப்புகளை ஏற்படுத்தியது போல் முஸ்லிம் மக்களுக்கு என்று ஏதாவது போராட்ட அமைப்பு இருந்ததா?
1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சிங்களக் காவல்துறை முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பிறகு எஸ்.ஜே. வி. செல்வநாயகம்தான் பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை பேசினார். ஆனால் அங்கிருந்த முஸ்லிம் உறுப்பினர்களும் அதற்காகப் பேசவில்லை. ‘முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க கட்சி ஒன்றைத் தொடங்குங்கள்’ என முஸ்லிம் தலைவர்களை செல்வநாயகம்தான் அறிவுறுத்தினார். இப்படியாக 1986ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதை போராட்டக்குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு எதிரான எல்லா வேலைகளையும் புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் ஆட்களும் செய்தார்கள்; ஈரோசில், ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களும் செய்தார்கள். 1987ல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்த நிலையில், ‘தேர்தலில் போட்டியிட்டால் மரண தண்டனை’ என்று விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தினார்கள். தடையை மீறி, தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும், ஏனைய பகுதிகளில் 12 ஆசனங்களையும் பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.
கீற்று: ஆனால் புலிகள் இயக்கத்திலும் நிறைய முஸ்லிம்கள் இருந்தார்கள் அல்லவா, அவர்கள் எப்படி இயங்கினார்கள்?
வடகிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் சமூக அங்கீகாரமற்றிருந்த முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் பெருவாரியாக இணைத்துக் கொண்டார்கள். முஸ்லிம் பகுதிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை உள்வாங்கும் ஒரு பரந்துபட்ட வேலையை புலிகள் 1983ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செய்தார்கள். புலிகள் இயக்கத்தில் சேர்ந்த சில முஸ்லிம்கள், ஆயுதப்பயிற்சி பெற்றபின்பு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். முஸ்லிம் பகுதிகளில் இருந்த சில சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து மக்களை மிரட்டுவது, பணம் பிடுங்குவது போன்ற செயல்களில் இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். இச்செயல்பாடுகள் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. இப்படிப்பட்ட செயல்பாடுகளால் முஸ்லிம் சமுதாயம் புலிகள் இயக்கத்தைத் தவறாகக் கருதத் தொடங்கியது. புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுத் தளத்தில் இயங்காமல் அடக்குமுறைகளை அவ்வியக்கத்தில் இருந்த முஸ்லிம்கள் செய்ததை – முஸ்லிம் மக்கள், புலிகள் இயக்கம் செய்வதாகவே புரிந்து கொண்டனர்.
புலிகள் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்குவது கிழக்கில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவில்லை. அங்கிருந்த மக்கள் புலிகளின் தவறுகளோடு அவர்களை சகித்துக்கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிராகப் பேசவும் இல்லை, செயல்படவும் இல்லை. எதிர்ப்பு என்பது மன அளவில் இருந்தாலும் 1990ஆம் ஆண்டுவரை யாருமே அவ்வெதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டவில்லை; ஏனெனில் அங்கிருந்த முஸ்லிம் பகுதிகளில் பெரும்பாலானவை புலிகளின் நூறுவீத ஆளுகைக்குள் இருந்தது.
ஆனால் வடக்கில் நிலைமை இதற்கு மாறாக இருந்தது. எருக்கலம்பிட்டி ஊரில் இருந்த படித்த முஸ்லிம் இளைஞர்கள்தான் இதை ஒரு பிரச்சினையாக உணர்கிறார்கள். போராளிக் குழுக்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களின் சில தவறான அணுகுமுறைகள் இஸ்லாமிய சமய மற்றும் சமூக நலன்களுக்குப் பாதகமாக அமைகிறது என்று எண்ணுகிறார்கள். அதன்விளைவாக அனைத்து ஆயுதக்குழுக்களையும் இதே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஈரோசு, ஈபிடிபி, புளோட்டு, ஈபிஆர்எல்எப் ஆகிய தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்திருந்தனர்; இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிரிகளாகப் பார்த்த நிலைதான் இருந்தது. அந்தச் சூழலில் அரசப் படைகளின் உதவியைப் பெற்றால் மட்டும் தான் இந்த அமைப்புகளிடம் இருந்து தப்பலாம் என்னும் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் தரப்பில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை.
‘ஆயுதக் குழுக்களால் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச வேண்டும்’ என்றும் ‘தங்களுக்கு ஆயுதப் பயிற்சி தர வேண்டும்’ என்றும் ஒரு காலகட்டத்தில் அமைச்சர் எம். எச். முகமதைச் சந்தித்துக் கூறுகிறார்கள். அக்கோரிக்கையை அப்போது எம். எச். முகமது மறுத்துவிடுகிறார். ‘நீங்கள் இதைச் செய்ய மறுத்தால் நாங்கள் தமிழ் ஆயுதக்குழுக்களிடம் சென்று ஆயுதப் பயிற்சி பெறுவோம். அவர்கள் உங்களைக் கொல்லச் சொன்னால் அதற்கும் தயங்க மாட்டோம்’ என்று கூறுகிறார்கள். அதன் பின் தான் எம். எச். முகமது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறார்.
‘அரசு எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தரவேண்டும்; ஆயுதங்களும் தரவேண்டும். அரசு முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இப்படிச் செய்யப்பட்டால் நாங்கள் இராணுவத்திற்கு ஒத்துழைப்போம். ஆனால் இராணுவம் எங்கள் மக்கள் மீது அநியாயமாக நடந்தால் அதற்கு எதிராகவும் போராடுவோம்’ என்ற விடயத்தை அவர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வைக்கிறார்கள். அதற்குப் பிறகு முப்பத்து மூன்று முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவம் இருநூற்றைம்பது முஸ்லிம்களுக்குப் பயிற்சி கொடுத்தது. இந்தப் ஆயுதப் பயிற்சி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை என்றாலும் வெளியே முஸ்லிம் மக்கள், தமிழ் போராளிகளுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள் என்று மிகப்பெரிதாகக் கதைக்கப்பட்டது. இவர்களிடம் பெரிய ஆயுதங்கள் இல்லாதபோது, அப்படி இருப்பதாக பெரிய அளவில் கதைகளை இவர்களும், அந்தப் பிரதேசத்து முஸ்லிம் மக்களும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களை அச்சுறுத்தும் வகையில் கட்டிவிடுகிறார்கள்.
தொடக்கத்தில் எந்தவொரு தமிழ் ஆயுதக் குழுவும் முஸ்லிம் பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்பது தான் இவர்களுடைய நோக்கமாக இருந்தது. இதற்காக ஒருகட்டத்தில் எருக்கலம்பிட்டி ஊரின் முகப்பில் முஸ்லிம் மக்கள் ஒரு சோதனைச்சாவடி அமைத்திருந்தார்கள். போராளிகளைத் தேடிப் போய் அழிக்கும் நோக்கமும் அவர்களிடம் இல்லை; அதற்குரிய வலுவும் இல்லை.
முஸ்லிம் இளைஞர்கள் இராணுவத்திடம் தஞ்சமடைவதற்கு புலிகள் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலர் செய்த தவறுகள்தான் பிரதான காரணமாகிறது. புலிகள் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இருந்தாலும் இத்தவறுகளை இயக்கத்தின் மேல்மட்டத்தில் இருந்த தலைவர்கள் கண்டிக்கத் தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். முஸ்லிம் தரப்பும் இதுகுறித்து வெளிப்படையாக கதைக்கத் தயாரில்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் வந்த பாரியப் பின்விளைவுதான் புலிகள் மீதான எதிர்ப்பாக மாறிவிட்டது.
‘சிங்களப் படைக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்துவிட்டார்கள்’ என்பது போன்று வெளியே உருவாக்கப்பட்ட தோற்றப்பாட்டைக் கண்டு ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளும் அஞ்சத் தொடங்கின. ‘இராணுவம் எங்கள் மக்களைக் கொடுமைப்படுத்தினால் அதற்கு எதிராகவும் நாங்கள் மாறுவோம்’ என்று முஸ்லிம் குழுக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் சொல்லியிருந்தது சரியாகப் பதியப்படவில்லை. இதன்பின்னர் இராணுவத்தில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் தமிழ் போராளிக்குழுக்களால் இலக்கு வைத்துக் கடத்தப்படுகிறார்கள். ரம்ஸீன் என்பவர் ஈரோஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்; அமீன் என்பவர் ஈபிஎல்ஆர்எப் அமைப்பால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்; 1985ஆம் ஆண்டு பாயிஸ் என்பவரைக் குறிவைத்து வவுனியாவில் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் அவரோடு பேருந்தில் இருந்த ஐம்பத்து மூன்று பேர் மாண்டுபோனார்கள். அந்த ஐம்பத்து மூன்று பேரில் தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்கள் இருந்தார்கள். இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம் மக்களிடம் ஈழப்போராட்டத்தையே வெறுக்கச் செய்யுமளவிற்கு எதிர்ப்புணர்வைக் கிளப்பியது. இதுதான் வடக்கு மாகாணத்தின் நிலையாக இருந்தது.
இந்திய இராணுவம் (ஐபிகேஎப்) இலங்கை வந்தபோது, ‘எருக்கலம்பிட்டி இளைஞர்களை இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள்’ எனப் பார்க்காமல் தனி ஆயுதக் குழுக்களாகத் தான் கருதியது; கைது செய்து சித்திரவதை செய்தது. அவ்வேளைகளில் இலங்கை அரச ராணுவம் கூட அவர்களைக் கைவிட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தின் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்தவரிடம் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கையளிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள். பேரினவாத சக்திகளின் – முஸ்லிம், தமிழர் பிளவை கூர்மைப்படுத்துகின்ற – திட்டமிட்ட நகர்வை இருதரப்பாருமே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். இரண்டு சமூகத்தின் அரசியல்வாதிகளுமே இதை ஒரு விடயமாகவே விளங்கிக் கொள்ளவில்லை.
கீற்று: எந்த மாதிரி என்று சொல்ல முடியுமா?
88களில் முஸ்லிம் மக்களின் மீது பரவலாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு கண்டுகொள்ளவேயில்லை. சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெரிய அளவில் பேசிய அளவிற்கு, முஸ்லிம்களின் மீதான எந்தத் தாக்குதலையும் பேசவில்லை. அதோடு, இழப்புகளுக்கு எந்த நிவாரணத்தையும் அரசு சரியாகச் செய்யவில்லை. சிங்களவர்கள் என்றால் பெரிய அளவில் முக்கியத்துவமும், முஸ்லிம்கள் என்றால் ஓரவஞ்சனையோடும் பார்க்கப்பட்டது.
பேரினவாத அரசு தமிழ் மக்கள் – தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இடையே நடக்கும் கொலைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். பேரினவாதத்திற்கு தமிழ் – முஸ்லிம் வேறுபாடு என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தது. அதை வெற்றிகரமாக பேரினவாதம் செய்து முடித்தது. முஸ்லிம் தரப்புத் தலைமைகளும், தமிழ்த்தரப்புத் தலைமைகளும் அதை உணர்ந்து கொள்ளவே இல்லை.
கீற்று: இலங்கை விடுதலைக்குப் பின் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறமுடியுமா?
1915, 1976 தாக்குதல்களுக்குப் பிறகு சிங்களத் தரப்பால், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய தாக்குதல்களாக 1990 ஜூலை வவுனியாவில் முஸ்லிம் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளைக் கடத்தி 4 முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதைச் சொல்லலாம். 1990 ஜூலை 31ல் அனுராதபுரம் மாவட்டத்தில் உடப்பாவல சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் சிங்களர்களால் கொல்லப்பட்டு, அவர்களது சடலங்கள் கிணற்றில் வீசப்பட்டது. 1998 எலபெடகம, பன்னல ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டது. வீடுகள் எரிக்கப்பட்டன; 16 பேர் அளவில் படுகாயமடைந்தனர். 2001ம் ஆண்டு மே மாதம் மாவனெல்லையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தார்கள். பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. 2002ம் ஆண்டு பேருவளை என்ற ஊரில் முஸ்லிம்களின் மீன்பிடி படகுகள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. அதே ஆண்டு கொழும்பு மருதாணையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை முன்னிட்டு எழுந்த மோதலில் பல முஸ்லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். அதற்குப் பின் கொழும்பில் இருந்த இணக்கமான சூழல் விலகி, ஒருவரையொருவர் சந்தேகமாகப் பார்க்கின்ற நிலை ஏற்பட்டது. 2003ம் ஆண்டு ‘காலி’யில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில, சிங்களர்களால் எரிக்கப்பட்டன. 2007ல் தர்காநகர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சில எரிக்கப்பட்டன. வருடம் சரியாக நினைவில்லை, ஒரு அரசியல் பிரச்சினை காரணமாக பேருவிளையில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 11 பேர் அளவில் காயப்படுத்தப்பட்டார்கள். இதைத் தவிர சின்ன சின்ன தாக்குதல்கள் சிங்களர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டது.
தமிழர்கள் தரப்பு என்று பார்த்தால், 1985ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வாழைச்சேனை பகுதியில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நடந்த முதலாவது கூட்டுப்படுகொலை. எந்த இயக்கம் செய்தது என்று தெரியவில்லை. 1986ல் மன்னார் பள்ளிவாசலில் ஈரோஸ் இயக்கம் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். 1987 மார்கழி 30ம் தேதி காத்தான்குடியில் 28 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதேமாதம் 60 முஸ்லிம் குடியிருப்புகள் காத்தான்குடி எல்லையில் எரிக்கப்பட்டன. இது புலிகள் செய்ததாக நம்பப்படுகிறது.
1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 1988 கார்த்திகை மாதத்தில் 42 முஸ்லிம் போலிஸார்களை மட்டும் தெரிவு செய்து, ஈ.என்.டி.எல்.ப், ஈ.டி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசிய இராணுவம் கொன்றது. 1989 டிசம்பர் 10ம் தேதி, 12 முஸ்லிம்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர். 1990 பிப்ரவரி 1ம் தேதி காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தைக் கொண்டு வந்து விடுதலைப்புலிகள் வீடு வீடாக சோதனை செய்து இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள் என்னும் ஐயத்தில் முப்பது பேரைச் சிறை பிடித்தார்கள். அதே நாளில் கல்முனையில் நாற்பது பேரைச் சிறை பிடித்தார்கள்; முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மருதூர் கனி கடத்தப்பட்டார்.
கல்முனை சிறைப்பிடிப்பை எதிர்த்து புலிகள் அலுவலகத்தின் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஐந்துபேரை மருத்துவமனையில் வைத்து, சுட்டுக் கொன்றார்கள்; பத்துப்பேரைச் சிறை பிடித்துச் சென்றார்கள். 1990 ஜூலை 16 மட்டக்களப்பு குறுக்கன்மடம் என்னும் இடத்தில் 68 ஹஜ் யாத்ரிகர்கள் கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 3ம் தேதி காத்தான்குடி பள்ளிவாசல்கள் இரண்டில் 126 பேரும், மஜித்புரத்தில் 7 பேரும், செம்மாந்துறையில் ஒரு தந்தையும் மகனும் கொல்லப்படுகிறார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி அம்பாறையில் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி ஏராவூரில் 116 பேர் கொல்லப்பட்டார்கள். 60க்கும் மேற்பட்டோர் காயப்படுகிறார்கள். இதுதவிர மேலும் பல தாக்குதல்கள் நடைபெற்றன; மேலும் பலர் கொல்லப்பட்டனர்.
யார் எதைச் செய்தாலும் அதைப் புலிகள் தாம் செய்திருப்பார்கள் என்னும் எண்ணத்தை இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திடம் முழுமையாகத் தோற்றுவித்து விட்டது. அதற்குப் பிறகு விழுந்த பெரிய அடிதான் வடக்கிலிருந்து 1990 அக்டோபரில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஆகும். 1992 ஏப்ரல் 26ல் அழிஞ்சிப்பொத்தானையிலும், செப்டம்பரில் பள்ளித்திடலிலும் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
பிற்பட்ட காலங்களில் முஸ்லிம் பகுதிகளில் தனித்தனியாக கொலைகள், ஒரு சில ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், கப்பம் பறித்தல் போன்ற சில செயற்பாடுகள் நடந்தன. ஆனால் உண்மையில் புலிகளுக்கும் அச்செயல்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. புலிகள் செய்யாத கொலைகள், கொள்ளைகள் ஆகியன கூட புலிகள் அமைப்புதாம் செய்ததாகப் பட்டியல் போடப்பட்டது. உதாரணமாக 2002 காலப்பகுதியில் ஓட்டமாவடி பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வுத் துறையில் செயற்பட்ட அஸீஸ் என்பவரின் படுகொலை, புலிகளால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. போர்நிறுத்தக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்திய செயல். ஆனால் இது முஸ்லிம்களாலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்ற கொலையாகும்.
இரண்டு தனிநபர்களின் பிரச்சனைகள் கூட இனரீதியாகப் பாதிக்கும் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன. உதாரணமாக 2002 ஜூன் 27, 28, 29களில் வாழைச்சேனை என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையங்கள் புலிகளால் தாக்கப்பட்டு பொருட்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்டது. கடைகள் எரிக்கப்பட்டன. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் நடந்தது. இந்தச் சம்பவம்தான் ‘இனி மாற்றவே முடியாது’ என்றளவிற்கான வெறுப்பை புலிகள் மேல் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்னவென்றால், மீனவ முஸ்லிம் ஒருவர் இளங்கீதன் என்ற புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரிடம் மீன்பிடி டைனமைட் உபகரணம் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்.
புலிகள் அமைப்பு என்பது கட்டுக்கோப்பான இயக்கம். எனவே இதுபோன்ற வேலைகளைச் செய்ய முடியாது. தலைமைக்குத் தெரியாமல் சின்னவன் என்பவரோடு இணைந்து இளங்கீதன் இந்த வேலையைச் செய்கிறார். ஜூன் 25 ம் தேதி பணம் வாங்குகிறார். 26 ம் தேதி முஸ்லிம் மீனவர் சென்று டைனமைட் கேட்டபோது அவர் செங்கல்லைப் பொதி செய்து கொடுத்து, தோணியில் அழைத்துச் செல்கிறார்கள். பொதியில் இருப்பது செங்கல் என்பது மீனவருக்குத் தெரியவர விவாதம் செய்கிறார். இளங்கீதனும், சின்னவனும் அவரைக் கொன்று விடுகின்றனர்.
தமிழ்ப்பகுதியில் நடந்ததால் பழி புலிகளின்மேல் விழுகிறது. இதைப் புலிகள் விசாரணை செய்கிறார்கள். விசாரணையிலிருந்து தான் தப்பிக்க வேண்டி, ஒரே சாட்சியாக இருந்த சின்னவனை இளங்கீதன் கொன்று விடுகிறார். இப்போது பிரச்சினை வேறு வடிவம் பெறுகிறது. ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதற்குப் பதிலாக, ஒரு தமிழர் முஸ்லிம் தரப்பால் கொல்லப்படுகிறார் என்று திசைமாறுகிறது.
கீற்று: சிங்களர்களுடன் இணைந்து கொண்டு சில முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதாகவும், காட்டிக் கொடுத்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறதே! அதைப் பற்றி கூற முடியுமா?.
இதில் நிறைய விடயங்களை நாம் கதைக்க வேண்டியிருக்கிறது. புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள் இருந்தது போலவே பிற போராளி அமைப்புகளிலும் முஸ்லிம்கள் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இலங்கை இராணுவத்திலும் தென் மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அதிகளவில் இருந்தார்கள். ஏனெனில் தென்மாகாண முஸ்லிம்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் இருந்த முஸ்லிம்களின் சிக்கல்களோ போர்ச்சூழலோ விளங்காது. இந்தப் போராளி அமைப்பில் இருந்து பிற போராளி அமைப்புகளுக்கு உளவு சொல்பவர்களாக இருந்தவர்களை அந்தந்தப் போராளி அமைப்புகள் காட்டிக்கொடுப்பவர்களாகப் பார்ப்பதும் பிற போராளி அமைப்புகள் சிறந்த உளவாளியாகப் பார்ப்பதும் இயல்பானது தானே! அப்படி இருந்தவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தவர்கள் என்று சொல்வது சரியான நிலையாக இருக்காது. அப்படிப்பட்டவர்களை அணுகிய விதத்தில் புலிகள் பிழை விட்டுவிட்டார்கள் என்று தான் கருத இடம் உண்டு.
காட்டுக்குப் போய் விறகு வெட்டி அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஒரு முஸ்லிம் விறகுவெட்டியைச் சிங்கள இராணுவம் பிடித்து, புலிகள் பற்றிச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால் அவனால் என்ன செய்ய முடியும்? அவன் தான் கண்டதை இராணுவத்திடம் சொல்லிவிட்டு வந்து விடுவான். இதைக் காட்டிக்கொடுப்பாக எடுப்பது சரிதானா? அதேநேரத்தில் புலிகளின் பிரதேசங்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் இராணுவம் மிகக்கடுமையாக தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்ற முஸ்லிம்களிடம் சோதனை செய்தது. அதையும் தாண்டி, அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு விரோதமாக புலிகளுக்கு மண்னெண்ணய், தீப்பெட்டி, அரிசி ஆகியவற்றைக் கொடுத்தார்கள். பதிலுக்கு புலிகள் அவர்களது தொழில் நடவடிக்கைகளை இலகுவாகச் செய்ய சலுகைகளை வழங்கினார்கள். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்த முஸ்லிம் மக்கள் மீது இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதை வைத்து மொத்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டை இராணுவம் எடுக்கவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்குச் சாதகமானவர்கள் என்று நம்பியது. இதை எப்படி எடுத்துக்கொள்வது? அத்துடன் எந்தப் பக்கமும் சாராமல், தான் உண்டு தன் பாடு உண்டு என்றிருந்த முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருக்கத்தானே செய்தார்கள்?
இலங்கை அரசப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் அங்கத்துவம் பெற்றிருந்தார்கள். குறிப்பாக மலேய முஸ்லிம்கள் இராணுவத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அரசப்படை தமிழர்களைக் கைது செய்கிறது என்றால், அங்கு விசாரணை நடத்துபவர்களாக முஸ்லிம்கள்தான் இருந்தனர். இதற்கு ஒரே காரணம் அரசப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளையும் தெரிந்தவர்களாக இருந்தார்கள் என்பதுதான். இது வெளியே எப்படி பேசப்பட்டது என்றால், முஸ்லிம்கள்தான் சிங்களவர்களின் கைக்கூலிகளாக இருந்து தமிழர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள், காட்டிக் கொடுக்கிறார்கள் என்று சாதாரண மக்கள் கூட பேசும் நிலை ஏற்பட்டது.
கீற்று: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஊர்க்காவல் படையாக அமைந்து தமிழ்ப்போராளிகளைத் தாக்கினார்கள் என்ற கருத்து நிலவுகிறதே, அது எந்தளவுக்கு உண்மை?
1987களின் பிற்பாடு வடக்கிலும், 1990களில் கிழக்கிலும் முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அவ்வவ்பிரதேச முஸ்லிம்களே உறுதிப்படுத்தும் பொருட்டு, ஊர்க் காவல் படை என்ற ஒன்றை அரசு பரவலாக அமைக்கிறது. அவர்களுக்கான பயிற்சியும், ஆயுதமும் அரசினாலேயே கொடுக்கப்பட்டது. இந்தக் குழுக்களை தனியாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று பார்க்கமுடியாது. இருப்பினும் இந்த ஊர்க்காவல் படையினர் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்களைச் நடத்தியிருக்கிறார்கள். இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதேசம் குறித்து இவர்களுக்கு எல்லாத் தகவல்களும் தெரியும் என்பதால், இராணுவத்தை வழிநடத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்கள். 1990களில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதி இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் இணைந்து புலிகளுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தல்லாடி இராணுவ முகாம் பலப்படுத்தல், மன்னார் தீவுப்பகுதிகளை கைப்பற்றுதல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகித்தார்கள்.
இப்படி முஸ்லிம் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்துவது ஒரு புனிதப்பணியாகக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் பிரச்சாரம் பண்ணப்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்த ஊர்க்காவல் படையினர் ஜிகாத் குழுக்கள் என்கிற பெயரால் அழைக்கப்பட்டனர். இது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் அளவிற்குச் சென்றது. ஜெனிவாவில் அரசுக்கும் புலிகளுக்கும் நடந்த ஒரு பேச்சுவார்த்தையில் முஸ்லிம் ஜிகாத் குழுக்கள் என்ற அம்சமே ஒரு தனி பேசுபொருளாக மாறியிருந்தது. இதை இன்றளவும் முஸ்லிம் சமூகம் உணரவில்லை. ஜிகாத் குழுக்கள் என்றாலே மூதூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்கள்தான் மையப்பகுதி என்ற கருத்தோட்டம் இப்போதுவரை கூறப்படுகிறது.
கீற்று: முஸ்லிம் தரப்புக்கும் ஈழப்போராட்டக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றுகிறார்கள். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எந்தமாதிரியான இன்னல்களை அனுபவித்தார்கள்? அவர்களுக்கு இலங்கை அரசு போதிய உதவிகள் செய்ததா?
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் 1990 அக்டோபர் 18 ஆம் தேதி முல்லைத்தீவு ஊர் பெரியவர்களிடம் சொல்கிறார்கள், ‘கிழக்கிலிருந்து ஒரு படை வரப்போகிறது. அவர்கள் முஸ்லிம் இளைஞர்களைப் பிடிக்கப்போகிறார்கள். அதனால் உங்க இளைஞர்கள் எல்லோரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் 10 இளைஞர்களுக்கு ஒரு முதியவர் என்ற அடிப்படையில் காட்டு வழியாக வவுனியா வந்து சேர்கிறார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு அக்டோபர் 20 ஆம் தேதி, முஸ்லிம்கள் எல்லாருமே உடனடியாக வெளியேற வேண்டும் என்று கட்டளை போடப்படுகிறது. துடிப்புள்ள இளைஞர்கள் எல்லோரையும் வெளியேற்றியபிறகும் ஏழை முஸ்லிம்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ‘இந்த மண்ணில் சம்பாதித்தவை அனைத்தும் இந்த மண்ணிற்கே சொந்தம். எனவே அனைத்தையும் நீங்கள் மண்ணிலேயே விட்டுச் செல்ல வேண்டும்’ என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி முல்லைத்தீவு மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறினார்கள்.
1990 அக்டோபர் 23ம் தேதி மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 28ம் தேதி வெளியேறுகிறார்கள். வெளியேற்றப்பட்டதற்கு முன்பாக பணம், தங்க நகைகள் அனைத்தும் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டன. 1990 அக்டோபர் 31ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 250 ரூபாய் தொடக்கம் முதல் 500 ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 24 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி முஸ்லிம்களும் இதே பாணியில் வெளியேற்றப்பட்டனர். வவுனியாவில் உள்ள முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற உத்தரவிடப்பட்டனர். ஆனால் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. மீண்டும் திரும்பி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் பெரும்பாலான பொருட்களை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றார்கள். மூன்று மாதம் காலம் கழித்து, சிங்களக் கிராமங்களை அண்டிய வவுனியா மக்கள் மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். ஆனால் அவர்களது எந்தச் சொத்துக்களும் அங்கு இருக்கவில்லை. வேறுவழியில்லாமல் மீண்டும் அனுராதபுரம், புத்தளம் பகுதிகளில் தஞ்சமடைகிறார்கள்.
அகதிகளாக வெளியேற்றப்பட்டவர்கள் அனுராதபுரம், குருநாகல், கண்டி போன்ற பிரதேசங்களில் தஞ்சமடைந்தார்கள். பின்னர் பெருவாரியான மக்கள் புத்தளம் வந்தனர். வெளியேற்றப்பட்டபிறகு பேரினவாதத்தின் கோரம் என்ன செய்தது என்றால் சிங்கள் மக்கள் வாழ்ந்த சில கிராமங்களில் முஸ்லிம் மக்களை இருக்க அனுமதிக்கவில்லை. அதைப் போல முஸ்லிம் மக்களும் வந்தவுடனே இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைத் தங்க விடாமல், பாடசாலைகள் எல்லாவற்றையும் பூட்டி வைத்திருந்தார்கள். அப்போது இவர்களுக்காக போராடியவர் டாக்டர் இலியாஸ்தான். அவர் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த மக்களிடம் பிரச்சினைகளைக் கேட்டு அறிகிறார். அதற்குப் பிறகு, அவர் மிகக் கோபமாக ஒரு கோடாரி எடுத்துக்கொண்டு போய் எல்லாப் பாடசாலைகளின் பூட்டையும் உடைத்து அங்கே தங்க வைக்கிறார். பிரதேச மக்களிடம் போய், ‘இடம் பெயர்ந்து வந்த மக்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். நாம்தான் உதவி செய்யவேண்டும்’ என்று பேசுகிறார். அதற்குப் பிறகுதான் வந்த மக்களுக்கு சாப்பாடு, மற்றும் மற்ற விடயங்களையெல்லாம் புத்தளம் மக்கள் கொண்டு வந்து மிகத் தாராளமாகக் கொடுக்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொரு விடயம் என்னவென்றால், வெளியேறி வந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது சிங்கள ராணுவம். புலிகளோட வல்லம்தான் வருகிறது என்று தாக்குகிறார்கள். பின்னர் அது முஸ்லிம்களோட வல்லம்தான் என்பதைச் சொல்லி அடையாளப்படுத்திய பிறகுதான் அந்த தாக்குதல் நிறுத்தப்படுகிறது.
பிற்காலத்தில் அந்த மக்களுக்கு சரியான மீள் குடியேற்றம் எதுவும் சிங்கள அரசால் செய்யப்படவில்லை. அவர்களுக்கான நிவாரணம் எதுவுமே சரியாகச் செய்யப்படவில்லை. வெளியேற்றப்பட்ட மக்கள் கைவிடப்பட்ட நிலையில் நீண்ட காலம் இருந்தார்கள். அதற்குப் பின்னர் SLFP கட்சி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஓரளவு மாற்றம் வருகிறது. அதற்கு என்ன காரணம் என்றால், அந்தப் பகுதியில் இருந்து இரண்டு முஸ்லிம் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் அந்த மக்களோட வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேற்றம் நடந்தது. வெளிநாட்டிலிருந்து உதவிகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டங்கள் வாயிலாக சில செய்யப்பட்டதால் இப்போது அந்த மக்கள் ஓரளவு நிம்மதியாக ‘வீடு இருக்கு’ என்ற அளவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியலில் இதுவரைக்கும் பெரிதான எந்த முன்னேற்றமும் அரசால் ஏற்படுத்தப்படவில்லை. இந்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு இருக்கிறது அல்லவா, அதை சரியாக பாராளுமன்றத்தில் உரத்துச் சொல்வதற்குக்கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிவிட்டார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறிவிட்டார்கள்.
கீற்று: சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது பேசினார்கள்?
இவர்கள் இரண்டு பேருமே கதைக்காதபோது அவர்கள் எப்படி கதைப்பார்கள்? சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கதைக்கவில்லை. மிக நியாயமாக, மானுடத்தை நேசிக்கிற செல்வநாயகம் போன்றவர்களுடைய மனோநிலையில் யாருமே இல்லாத நிலைதான் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று, இரண்டு விடயங்கள் செய்தார்கள். மற்றபடி அவர்களுடைய அரசியல் நலனை மட்டுமே பார்த்தார்களே ஒழிய அதைத் தாண்டி எதையும் செய்யவில்லை.
வெளியேற்றபட்டவர்களுக்கு அகதி அந்தஸ்தும் கடைசி வரைக்கும் கிடைக்கவில்லை. தமிழ் மக்களில் பெரும்பான்மையான மக்கள் அகதி அந்தஸ்து பெற்று வெளிநாட்டுக்குப் போய் தஞ்சம் அடைந்தார்கள் இல்லையா, அது மாதிரி முஸ்லிம்களுக்கு வெளிநாட்டுக்குப் போய் தஞ்சம் அடைவதற்கான வாய்ப்பு அரசால் கொடுக்கப்படவில்லை.
சந்திரிக்கா பண்டாரநாயகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த மக்களின் பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்வதற்கு ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்டே வந்தார்களேயொழிய ஆணையம் அமைக்கப்படவே இல்லை. இது பேரினவாதத்தோட இன்னோர் முகம். இதைக்கூட அம்பலப்படுத்த முடியாதவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்கிற உண்மையையும் நாம் பதிவு செய்தாக வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில்தான் நிறைய கொடுமைகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்க விடப்பட்டது.
கீற்று: அது எந்த காலக் கட்டத்தில்?
1970களில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி 1994களில் தான் ஆட்சியிலிருந்து வீசப்படுகிறது. பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருகிறது. அதற்கு அப்புறம் வந்த 2000ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில்தான் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த காலம் எல்லாம் முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்தான். அதில் இன்னொரு வினோதம் என்னவென்றால் சிங்களவர்களைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலாக வாக்களிக்கிறவர்கள் முஸ்லிம்கள். ஆனாலும் கூட அவர்களது அநியாயங்கள் நிற்கவில்லை.
கீற்று: முரணாகயிருக்கிறதே!! தனக்கு அதிகமாக கொடுமை செய்கிறவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி அதிகமாக வாக்களிக்கிறார்கள்?
அதுதான் அந்த மக்களோட அப்பாவித்தனம் அல்லது வெகுளித்தனம். இப்பவும்கூட அதே நிலைமை தான். கடந்த தேர்தலில் கொஞ்சம் மாறியிருந்தது. பேரினவாதம் என்பது மிக கவனமாக அனைத்திலும் தன்னை விஸ்திரப்படுத்தி நகர்ந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூடுதலாக வாக்களிக்கிற ஆட்கள் வடக்கு கிழக்குக்கு அப்பால் இருந்த முஸ்லிம் மக்கள். (இவர்கள் முஸ்லிம் காங்கிரசு தோற்றுவிக்கப்பட்டபிறகு முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.) ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்கள் மீதான ஒரு அதிகபட்ச அடக்குமுறையை வைத்திருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் தங்களது பிரச்சினைக்காக கோரிக்கை வைத்தால்கூட, ‘நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்’ என்கிற அளவுக்கு அந்தக் கட்சி இருந்தது. இதைக்கூட முஸ்லிம் புத்திஜீவிகள் மக்களிடம் சொல்லத் தவறிவிட்டார்கள்.
தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருதரப்பினரும் இருந்ததால், இதற்குப் பின்னால் இருந்த பேரினவாதத்தின் முகத்தை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். அந்தத் தவறு பிற்காலத்தில் பாரிய சிக்கல்களுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் நடந்த பிரச்சனைகளை வைத்து அவரவர் சார்பு வியாக்கியானம் செய்தார்கள் அல்லவா, அது தப்புக்கு மேல தப்பு செய்த மாதிரியான ஒரு விடயம். அதைச் செய்திருக்கவே கூடாது. தமிழ்த் தேசியம் பேசிய ஆட்களும் அந்தத் தவறை செய்திருக்கக்கூடாது; முஸ்லிம்களின் இருப்பைப் பற்றி கதைத்தவர்களும் அந்தத் தவறை செய்திருக்கக்கூடாது.
கீற்று: போராளிக் குழுக்களுக்கும், முஸ்லிம்களுக்குமான இந்த முரண்பாடு எல்லா இடங்களிலும் இருந்ததா? இணக்கப்பாடான செயல்கள் எங்காவது இருந்ததா?
சங்கர் என்னும் ஆயுதப் பயிற்சியாசிரியரை போர்நிறுத்தக்காலத்தில் புலிகளின் பிரதேசத்தில் நான் சந்தித்தேன். அவருடன் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு முஸ்லிம் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் நிறைய முஸ்லிம்கள் புலிகள் அமைப்பில் கடைசிவரை இருந்தார்கள். புல்மோட்டை ஊர் முழுக்கவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஊர் என்னும் நிலைப்பாடு இருந்தது. அந்த அளவுக்கு புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் பலர் கடைசி வரை புலிகள் அமைப்பில் இருந்தார்கள். இப்படிப்பட்ட செய்திகளை எல்லாம் நடுநிலையில் இருந்து கதைக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அங்கு இல்லை. இந்த வெற்றிடத்தால் முரண்பாடுகள் கூர்மையடைந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களாக நிலைத்து விட்டன.
விடுதலைப் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன், எதிர்த்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன் என்று செயல்படுவதுதான். நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மை குறைந்து விட்டது. நடுநிலைப் பார்வை என்பதை உருவாக்கினால் மட்டும் தான் பழைய வரலாறுகளைச் சரியாகப் பதியும் ஒரு வேலையைச் செய்ய முடியும்.
3.
கீற்று: இலங்கை முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை நிலவுகிறதா? ஒரு பகுதியில் இருக்கும் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு மற்ற பகுதியில் இருப்பவர்கள் குரல் கொடுக்கிறார்களா?
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோட சேர்ந்தும், மலையகத்தில உள்ள மக்கள் தமிழ் சிங்கள மக்களோட இணைந்தும், தெற்கு மேற்கிலுள்ள மற்ற மக்கள் சிங்கள மக்களோட சேர்ந்தும் வாழ்கிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அந்தந்தப் பகுதிப் பிரச்சினைகள்தான் பெரிதாகப் படுகிறது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதுபோன்ற நிலைப்பாடுதான் இருந்து வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால் வட கிழக்கிற்கு வெளிய இருந்த முஸ்லிம்கள் இப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் என்னவென்றால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்து நின்று ஒன்றுபட்டு குரல் கொடுப்பதற்கு எந்த வாய்ப்புகளும் – வடக்கு கிழக்கு தவிர்த்த – மற்ற பிரதேசங்களில் மிகவும் குறைவு. அங்கெல்லாம் குறைவான எண்ணிக்கையில்தான் வாழ்கிறார்கள்.
அடுத்தது என்னவென்றால், இந்த அரசியல்வாதிகளும் ஒற்றுமையின்மைக்கு ஒரு முக்கிய காரணம். அந்த அந்த சந்தர்ப்பத்தில் அந்த அந்த இடத்திற்கு ஏற்ப என்ன என்ன பேச வேண்டுமோ அவற்றை மட்டும் பேசிக் கொண்டு போவார்களே தவிர அதைத் தாண்டி எதுவும் செய்ய மாட்டார்கள். அதே மாதிரி முஸ்லிம் மக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்களையும் பிரச்சினைகளையும் சரியாகக் கொண்டு போவதற்கு சரியான ஊடகம் இல்லை. கேவலம் இதுவரைக்கும் ஒரு தினப் பத்திரிக்கை கூட இல்லை. ஊடக பலம் இல்லாததனால் கருத்தியல் ஒருமைப்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது. சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு அவர்கள் எதிர்நோக்குகிற பிரச்சனை தான் மிகப் பெரிய பிரச்சனையாகத் தெரிந்தது. உதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால், சிங்களப் பிரதேசத்தில் வாழ்கிற ஒரு முஸ்லிம் தன்னுடைய பிறப்பு சான்றிதழ் எடுத்துக்கொள்வதற்கு படாத பாடு படவேண்டியிருக்கிறது.
கீற்று: எதனால்?
பேரினவாதம் வைத்திருக்கும் இறுக்கமான, கட்டுக்கோப்பான ஒதுக்கல்தான் காரணம். அந்த மக்களுடைய வாதம் என்னவென்றால், ‘வட கிழக்கில் உங்களுக்கு இருக்கிறது எல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. வட கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவையான பிறப்புச் சான்றிதழ் எடுக்க வேண்டும் என்றால் மிக இலகுவாக எடுத்துவிடலாம். ஆனால் இங்கே இன்று வா, நாளை வா என்று அலைக்கழிப்பார்கள்.’
பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்களத்தைப் பேசுகிறவர்களாக இருக்கிறார்களேயொழிய சிங்களப் படிப்பறிவு என்பது பெரும்பாலும் இல்லை. சிங்களப் பிரதேசங்களில் அவர்கள் வாழ்ந்தாலும் கூட அவர்களுடைய கல்வி மொழி தமிழாகத்தான் இருக்கிறது. அண்மைக் காலமாகத்தான் முஸ்லிம்கள் தங்களுடைய பிள்ளைகளை சிங்களப் பாடசாலையிலும் படிக்க வைக்கிறார்கள். தமிழ்மொழி மூலமாகப் படிக்கும்போது வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்காததினால் சிங்களப் பள்ளிகளில் சேர்கிறார்கள். சிங்கள மொழி பயின்றால்தான் முன்னேற முடியும் என்கிற மாதிரியான ஒரு நிலை அரச நிர்வாகம் உட்பட ஏனைய எல்லாவற்றிலும் வந்ததற்குப் பிறகு முஸ்லிம்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள்.
அடுத்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாள் தினத்தில் விலங்குகளை அறுத்து குர்பானி கொடுப்பார்கள் அல்லவா, வடகிழக்குப் பிரதேசங்களில் இதை எந்தத் தடையுமேயில்லாமல் மிகவும் சாதாரணமாக செய்துவிட்டுப் போகிறார்கள். ஆனால் சிங்களப் பிரதேசங்களில் வாழ்கிற மக்கள் பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
கீற்று: எந்த மாதிரியான கஷ்டம்?
அதாவது தடைசெய்யப்பட்ட ஒரு செயலாகப் பார்க்கிறார்கள். மலையைப் பிய்த்து எடுக்கிற விடயம் மாதிரி பார்க்கிறார்கள்.
கீற்று: ஏன்? சிங்களர்களின் பௌத்த மதம் கொல்லாமையை வலியுறுத்துவதாலா?
ஆமாம். கொல்லாமையை வலியுறுத்துகிறவர்கள் இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும் இல்லையா? சாப்பிடுவது அதிகம் பேர் அவர்கள். கொல்லப்பட்டதற்குப் பிறகு ஈரல் சார்ந்த பகுதிகளை போலீஸாருக்குக் கொடுத்துட்டால் அந்த முஸ்லிம், புண்ணியவான். இதில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அண்மையில் இந்த குர்பானி விடயத்தில் மிக நளினமான போக்கைக் கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி ஆணையிட்டிருந்தார். ஆனாலும் அதிகாரிகள் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்தனர்.
அண்மையில பாங்குப் பிரச்சனை வந்தது. இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்கும் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் சட்டம் போட்டது. அது பெளத்தரயிருந்தாலும் சரி முஸ்லிம்மாக இருந்தாலும் சரி பயன்படுத்தக்கூடாது. இது பொதுவாக கொண்டு வரப்பட்ட சட்டம். எல்லோருடைய நலனுக்காகவும் போடப்பட்ட சட்டத்தை முஸ்லிம்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், அதிகாலையில் சொல்லப்படுகின்ற சுபுஹூ பாங்கிற்காக நீதிமன்றம் போனார்கள். கடைசியில் நீதிமன்றம் 5 நேர தொழுகைக்கான அழைப்புகளிலும் கைவைத்தது. மட்டுப்படுத்தப்பட்ட நேரத்துக்குள் தான் தொழுகைக்கான அழைப்பு விட வேண்டும் என்றது.
கீற்று: மட்டுப்படுத்தப்பட்ட நேரம் என்றால்?
மட்டுப்படுத்தப்பட்ட நேரம் என்றால் 2 நிமிடம் முதல் 3 நிமிடம். அதுக்குள்ளே அந்தப் பாங்கை சொல்லி முடித்துவிட வேண்டும். ஒரு பிரதேசத்தில் ஐந்து பள்ளிவாசல்கள் இருந்தால், பிரதான பள்ளியில் மட்டும் தான் பாங்கு சொல்ல வேண்டும் என்பதுமாதிரியான ஒரு தீர்ப்பு. இந்த விடயத்தை குழப்பிக் கொண்டதே முஸ்லிம்கள்தான். ஆனால் வெளியே முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்படிப் பேசினார்கள் என்றால், முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்தோட கோர முகம் என்று பிரச்சாரம் செய்து, அதை தங்களோட அரசியல் நலனுக்காக ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்படிப் பேசுகின்ற முஸ்லிம் ஆளைக்கூட முஸ்லிம் சமுகத்திற்கு விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இருக்கிறது. இப்படி நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது.
அடக்குமுறை என்பது எந்தக் கோணத்தில் நடக்கிறது என்பதை விட்டுப்போட்டு சின்ன சின்ன விடயங்களுக்காக சன்டை போடுகிற போக்கு இருக்கிறது. முதற்படியாக இனம் சார்ந்து சிந்திக்கிற போக்கு இருக்கிறது மிகவும் கஷ்டமான விடயம். பிரச்சனைகளை விளங்கிக் கொள்கின்ற விதம் இருக்கிறது இல்லையா, அதில்தான் அந்தச் சிக்கலே இருக்கிறது.
கீற்று: வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்வதற்கும் தெற்குப் பகுதியில் அவ்வாறு இல்லாததற்கும் என்ன காரணம்?
கண்டி மன்னன் ஆட்சி செய்த காலத்தில்தான் கிழக்கு நோக்கி பெரும்பாலும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தொடக்க காலங்களில் இலங்கையில் எந்தவொரு இடத்திலேயும் காணி வாங்கலாம், கடை வைக்கலாம், சொத்து சேர்க்கலாம் என்ற நிலைப்பாடு இயல்பாகவே இருந்தது. பிற்பட்ட காலங்களில் பேரினவாதம் கூர்மை அடைந்ததற்குப் பின்னர், எல்லா விடயமும் ஒரு இனவாதப் பின்னோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. நகர்ப்புறம் முஸ்லிம்களுடைய கட்டுபாட்டிலிருந்து சிங்கள மக்களின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்கிற இனவாத விதையினால் நிலைமை வித்தியாசமாகப் போகிறது. இது தமிழ்த் தரப்பிலும் விதைக்கப்பட்டது. உதாரணமாக மட்டக்களப்பிலும் (இது கிழக்கு மாகாணத்தில் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர்) துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டிருந்தது, ‘முஸ்லிம்கள் கடையில் இனி யாரும் சாமான்கள் கொள்முதல் செய்யக்கூடாது’ என்று. அதே நேரத்தில முஸ்லிம் தரப்பிலிருந்தும் என்ன செய்தார்கள் என்றால், சிங்கள நபரையோ, தமிழ் நபரையோ அங்கீகரிப்பதற்குப் பதிலாக முஸ்லிமையே கூடுதலாக அங்கீகரிக்கிற போக்கு இருந்தது. எல்லா இனத்திலேயும் கூடுதல் பற்றுள்ள ஆட்கள் இருக்கிறார்கள். அந்த இனவாதப் பற்றை விஷக் கருத்தாக மாற்றி, மொத்த சமுதாயத்திலும் பரப்புவதுதான் இனப்பிரச்சனைக்கு முக்கியமான காரணம். தப்பு என்றால் யார் செய்தாலும் தப்பு என்றுதான் பார்க்க வேண்டும். அதைத் தாண்டி தங்கள் தரப்பு செய்தால் மட்டும் தப்பில்லை என்று பார்க்கக்கூடாது.
கீற்று: தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் கல்வி நிலை, வேலைவாய்ப்புகள், வாழ்க்கைத்தரம் ஆகியன பற்றிச் சொல்ல முடியுமா?
இலங்கைச் சூழலில் அவரவர் உழைத்தால்தான் எதுவும் பண்ணலாம் என்னும் நிலை இருக்கிறது. இனத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ முன்னேற்றத் திட்டங்கள் பெயரளவில் இருக்கின்றனவே தவிர, அரசு பெரிய அளவில் எந்தத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. திட்டங்கள் அனைத்தும் இலங்கையருக்கான பொதுவான திட்டமாக இருக்கும். அத்திட்டங்களில் சிறுபான்மையினரை விடப் பெரும்பான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நிர்வாகத் தேர்வுகளில் எல்லாம் திறமைகளின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுக்காமல் அரசியல் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தொழில் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான சட்டங்களில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் கைகளிலும் தமிழர்கள் கைகளிலும் தங்கியிருந்த ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய வணிகங்களைக் கையகப்படுத்தும் வேலையைத் தொண்ணூறுகளுக்குப் பிற்பாடு பேரினவாதம் திட்டமிட்டுச் செய்திருக்கிறது. இப்போது நடக்கும் நகரமாக்குதல் முதலியனவற்றில் திட்டமிட்டுச் சிங்களமயப்படுத்தும் போக்குதான் அதிகமாக இருக்கிறது. நியூ டெளன், ஓல்டு டெளன் என்பதையும் புதிய வீதி, பழைய வீதி என்பதையும் உன்னிப்பாகக் கவனிக்கும்போது பேரினவாதத்தின் கோரமுகம் இருப்பதை நன்றாகக் காணலாம்.
இனவாதத்தை நூறு வீதம் தங்களுடைய கொள்கையாகக் கொண்ட நிறுவனத்தாரும் அங்கு இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய தொழிற்சாலைகளிலோ பிற அமைப்புகளிலோ சிறுபான்மை மக்களை உள்வாங்கமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய உற்பத்திகளைச் சிறுபான்மை மக்களிடம் சந்தைப்படுத்தி விற்பார்கள். இது பரவலாக நடக்கிறது. பிளாஸ்டிக் கதிரைகள், படுக்கைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் முஸ்லிம் பகுதி, சிறுபான்மை மக்கள் வாழும் பகுதி என எல்லாப் பகுதிகளிலும் தன்னுடைய காட்சிக்கூடத்தை (ஷோ ரூம்) வைத்திருக்கிறது. நான் அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வேலை வாய்ப்பில் பெரும்பான்மையினத்தைத் தவிர வேறு யாருக்குமே அங்கு இடமில்லை. இந்நிலை எதிர்கால ஒன்றுபட்ட இலங்கைக்குரிய ஒரு பண்பாக இல்லை.
இத்தோடு சிறுபான்மை மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளில் ஒருவிதமான அலட்சியப் போக்கு இருக்கிறது. எந்தவொரு வளர்ச்சிப் பணியும் நேர்மையாக நடப்பதில்லை என்பதான ஒரு நிலை இருக்கிறது. தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக இருந்தாலும் சரி, அவற்றை ஊக்குவிப்பதாக இருந்தாலும் சரி, துறைமுகங்கள் வளர்ச்சி என்றாலும் சரி, அதில் சிறுபான்மை மக்களுக்கு ஓரவஞ்சனை இருப்பதாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுவும் எதிர்கால ஒன்றுபட்ட இலங்கைக்கு நலமான விடயம் இல்லை.
‘இனி இந்த நாட்டில் சிறுபான்மை என்பது இல்லை’ என்று போர் முடிந்ததற்குப் பின் ஜனாதிபதி மகிந்த இராசபக்சே கதைத்தார். இவ்வரி ‘இனி இந்நாட்டில் சிறுபான்மை கிடையாது; ஆனால் பெரும்பான்மை இருக்கிறது’ என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உண்டாக்குகிறது. இது ஒன்றும் அவர் தெரியாமல் சொன்ன வார்த்தைகள் இல்லை! எழுதி வாசிக்கப்பட்ட அதிபரின் உரை! இது ஒருவிதமான அச்சத்தை உண்டுபண்ணுகிறது. சிறுபான்மை, பெரும்பான்மை என்னும் பாகுபாடு கிடையாது என்று அவர் சொல்லியிருந்தால்கூட அதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடு வந்திருக்கும். ஆனால் முதலாவது உரையிலேயே ‘சிறுபான்மை இல்லை’ என்று சொன்ன அந்த விடயத்தை ஊடகங்கள் ஆதரித்து எழுதினாலும் கூட மறைமுகமாக அச்சப்படவே வேண்டியிருக்கிறது.
இப்படித் தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிறபோதும் அந்த அநீதியைக் கதைக்க இயலாத ஒரு விதமான நிலைக்கு ஒவ்வொருவரும் இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள். போதைப் பொருள், கடத்தல் போன்ற சமூக எதிர்ச் செயல்களைச் செய்யும் மாபியா கூட்டம், கொழும்பை மையப்படுத்தித் தொடக்கத்தில் இருந்தது. பின்னர் அக்கூட்டம் அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமாக மாறி, அவர்களுக்குப் பிடிக்காதவர்களைக் கொல்வதற்குக் கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள். இந்தக் கூலிப்படைகளாக விவரம் தெரியாத, எழுத்தறிவு இல்லாத முஸ்லிம் மக்களும் அதிக அளவில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களும் சிறுபான்மை மக்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டார்கள். இந்நிலை அங்குள்ள சுமூக நிலையைப் பாதிக்கும் காரணியாக இருக்கிறது. இதுவும் முஸ்லிம் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே பிளவு ஏற்படுவதற்கும் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவு ஏற்படுவதற்கும் ஒரு காரணியாக இருந்தது. இப்படி இருந்தவர்களே அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக வந்தபோது அவர்களும் பாகுபாடில்லாமல் கொல்லப்பட்டார்கள். இந்த மாபியாக்கள்தான் வர்த்தகர்களிடம் இருந்து பணம் பறிக்கப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருக்கிறது.
கீற்று: இத்தகைய போக்குகளுக்கு எந்தவிதத்திலாவது எதிர்ப்பு இருந்ததா?
இப்படிப்பட்ட செய்திகள் எதையுமே அநியாயம் என்று பேச முடியாத நிலைமை இருக்கிறது. பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுபவர் யாரும் அங்கு வாக்குமூலம் அளிப்பதில்லை. கொழும்பில் உள்ள சிறுபான்மையின வணிகர்கள் கடத்தப்படுகிறார்கள், கப்பம் பறிக்கப்படுகிறார்கள் என்னும் செய்தி பெரிய சிக்கலாகப் பேசப்பட்டது. தான் பாதிக்கப்பட்டதாகக் கூறிக் காவல்துறையிடம் முறையிடவோ வேறு ஏதேனும் செய்யவோ யாரும் முன்வரவில்லை. இது போன்ற செய்தியை நாம் கவனமாக ஆராய வேண்டும். இவை உள்ளங்களைச் சமூக ஒற்றுமைக்குப் பிணைத்து நல்ல சூழலை ஏற்படுத்தும் காரணிகள் அல்ல. அரசு தான் நேர்மையாகச் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ள நினைத்தால் இவ்விடயங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
கீற்று: இலங்கையின் அரசு வேலைகளில் சிங்களர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அவர்களை ஒப்பீடாகக் கொண்டால் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்?
தொடக்கக் காலங்களில் கிடைத்த வாய்ப்புகளின் மூலமாக மிகச் சிலத் துறைகளில் சிறுபான்மையினர் தங்கள் விழுக்காட்டை விட அதிகம் இருக்கிறார்கள். அது தவிர, பெரும்பான்மைச் சிங்களருக்குத் தான் எல்லாத்துறைகளிலும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதில் இனவாத முகம் தெளிவாகக் காட்டப்படாமல் அக்கோர முகத்தைப் பின்னால் வைத்துக்கொண்டே எல்லாவற்றையும் நிகழ்நிலைப்படுத்தும் நிலைப்பாடு இருக்கிறது. தெளிவாக இவர்களுக்குத் தான் வேலை கொடுப்போம் என்னும் நிலைப்பாடோ அறிவித்தலோ முதலில் வெளியே தெரியாது. வேலை அமர்த்தத்திற்குப் பின் தான் அது பேச்சிற்கு வரும். அதையும் அப்போதே விமர்சித்து விட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். இது தான் அரசின் எல்லாத் துறைகளிலும் இருந்து வருகிறது.
கீற்று: பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினருக்குக் கல்வி திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்று சொல்கிறார்களே!
ஒவ்வொருவரும் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தொடக்கக் காலங்களில் பல்கலைக்கழகங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. சில மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு அக்கொள்கை, கல்வியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் படிப்பு வீதம் குறைவு என்பதால் இவர்களால் அந்த இடங்களை நிரப்ப முடியவில்லை. தமிழ் மக்கள் ஓரளவு அந்த இடங்களை நிரப்பினார்கள் என்று சொல்லலாம். ஆனால் போருக்குப் பின் அதிலும் நிரம்ப வீழ்ச்சி வந்து விட்டது. போர் உச்சக் கட்டத்தை அடைந்ததன் பின் ஏற்பட்ட மன உளைச்சலே இவர்கள் கல்வியில் முன்னுக்கு வரும் வாய்ப்புகளைக் குறைத்துவிட்டது.
இப்போது ‘Z score’ என்னும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த முறையில் சமயப் பாடங்கள், மொழிப் பாடங்களுக்கு மதிப்பு குறைவு. கலைத்துறையில் சேரும் ஒரு முஸ்லிம் மாணவர் பெரும்பாலும் ‘இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரிகம்’ என்னும் பாடத்தை எடுப்பார்; அத்தோடு இன்னும் சில பாடங்களையும் படிப்பார். இப்போதைய ‘Z score’ முறையில் அவருடைய விருப்பப்பாடத்திற்குரிய புள்ளி வீதம் மிகக் குறைவாக இருக்கிறது. எனவே இம்முறைப்படி, ஒரு முஸ்லிம் மாணவர் தம்முடைய விருப்பப்பாடத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. ஆனால் ‘Z score’ முறையில் அதிக புள்ளி வீதங்களைக் கொண்டிருக்கும் ஒருவர் சில பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். இப்படியாக ‘Z score’ முறை சீராக இல்லை. ஒரு சரியான, சீரான, முற்றான கல்விக்கொள்கை வேண்டும் என்பதைப் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வலியுறுத்தல் சீர்தூக்கிப் பார்க்கப் படவேண்டும். அப்போது தான் மலையகத் தமிழர்கள், கல்வி வாய்ப்புக் கிடைக்காத ஏழைகள், சிறுபான்மை மக்கள் என அனைவரும் உயர்கல்வி பெறும் நிலை ஏற்படும். உயர்கல்வி வாய்ப்புப் பெறாத ஏனைய மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் இதுபற்றிய விழிப்புணர்வு சிறுபான்மை சமூகத்திடம் சரியாக செய்யப்படாத நிலை இருக்கிறது.
கீற்று: விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்று சொன்னீர்கள். அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?
விடுதலைப்புலிகள் நிர்வாக அடிப்படையில் சீரான ஒரு கட்டமைப்பை வைத்திருந்தார்கள். உடல்நலனில் மக்களுக்கு எவ்விதக் கேடும் வந்து விடக்கூடாது என்பதற்காகக் குளிர்பானங்களைக் கூடத் தடை செய்து வைத்திருந்த அற்புதமான ஒரு கட்டுக்கோப்பு அவர்களிடம் உண்டு! 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தான நேரத்தில் நாங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழையும்போது இன்னொரு நாட்டுக்குள் நுழைவது போன்ற ஓர் உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த கட்டமைப்பு அங்கு இருந்தது. மரங்கள் வெட்டுவதைக் குறைத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றைப் புலிகள் நேர்த்தியாகச் செய்தார்கள். அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை வன்னிக்குப் பொருளாதாரத் தடை இருந்ததால் மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகளில் பெரிய முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. ஒரு உரூபா பெறுமதி உள்ள ஒரு பொருள் கூட இருபது உரூபாவிற்கு விற்கப்படும் சூழல் தான் அங்கு இருந்தது. இந்தப் பொருளாதாரத் தடை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் அம்மக்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.
போக்குவரத்துத் துறை போன்றவற்றில் விடுதலைப் புலிகள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். நாங்கள் பிற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் தமிழீழக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும் முன் இராணுவ முகாம்களில் பதிய வேண்டும். அதன் பின் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது புலிகளிடம் பதிய வேண்டும். அப்பதிவுக்கான படிவங்கள் தனித்தமிழில் இருக்கும்; படிவங்களை நிரப்பி எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்பன போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும். நிரப்பிய பின் வண்டிகளில் வந்தவர்கள் வண்டிகளுக்கான வரியை அங்கு செலுத்த வேண்டும். தணிக்கைச் சாவடியில் அடையாள அட்டையை கொடுத்துவிட்டுப் போகவேண்டும். நாலைந்து தணிக்கைச் சாவடிகளைக் கடந்து, நாங்கள் போகும்போது அங்கு எங்களுடைய அடையாள அட்டை வந்திருக்கும். எப்படி அதைக் கொண்டு வந்திருப்பார்கள் என்றே தெரியாது. இது போன்ற மிகச்சிறந்த ஒரு கட்டமைப்பு அங்கு நிலவியதைச் சான்றாகச் சொல்லலாம்.
பொருளாதாரத் தடை இருந்ததால் பல வளங்கள் கிடைக்காமல் இருந்தன. ஆனால் கிடைத்த குறைந்த வளங்களைப் பயன்படுத்திச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். பொருளாதார நெருக்கடியால் மக்கள் ஒருவிதமான நெருக்கடி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டிருந்தார்கள்; எவ்வித நெருக்கடியையும் தாங்கிக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருந்தார்கள்; ஒரு பிடி அரிசியிலும் ஒரு குடும்பம் வாழலாம் என்னும் சூழலுக்குக் கூட அவர்கள் பழகிவிட்டார்கள் என்று சொல்லலாம். பொருளாதார தடையும் நெருக்கடிகளும் அம்மக்களை இது போன்ற வாழ்க்கைக்குப் பழக்கியிருந்தது.
போரின் கோர முகத்தை அப்பகுதிகளில் நம்மால் காண முடியும். எவ்வளவு நேர்த்தியான கட்டமைப்பையும் ஒரு போர் எப்படிப் பாதிக்கும் என்பதைத் துல்லியமாக நாம் அங்கே காண முடியும். யாழ்ப்பாணத்தில் சிதைந்த கட்டடங்களையும் கைவிடப்பட்ட நகர்ப்புறங்களையும் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கும். ஒரு நகர்ப்புறமே புதர் படிந்து காடு மண்டிக் கிடக்கும் அளவுக்குப் போர் தன்னுடைய கோர முகத்தைக் காட்டியிருக்கும். இப்போது மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான நிலையில் இருக்கிறார்கள். முகாமை விட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் மக்கள் மீண்டும் முகாமுக்குத் திரும்பி வந்து விடும் சூழ்நிலை அங்கு இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கான எந்த ஆயத்தப்படுத்தலும் அரசால் முற்றாகச் செய்யப்படாததால் தான் இந்நிலை நீடிக்கிறது.
இம்மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களுக்காகப் பாராளுமன்றத்தில் பேசிச் செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் நன்றாக வாழ்கிறார்களே தவிர மக்களுக்காக உரக்கப் பேசுவதில்லை. பசி என்றால் என்ன என்றே தெரியாத பாராளுமன்ற உறுப்பினர்களாக அவர்கள் இருக்க, இம்மக்களோ முகாமை விட்டு வெளியே விட்டாலும் முகாமுக்கே திரும்பி விடும் அளவுக்கு நொடிந்து போயிருக்கிறார்கள்.
4.
கீற்று:தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் திட்டமிட்டுக் குடியமர்த்தப்படுகிறார்கள். புதிது, புதிதாகப் புத்த சமய அடையாளங்கள் அமைக்கப்பட்டு, புத்த சமயம் திணிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே..
அரசாங்கத்தின் இச்செயல் நியாயமான சில சிங்களர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றுதான்! ‘தெருவோரங்களில் புத்த சமய அடையாளங்களை வைப்பது தவறு! அது புத்தரை அவமதிப்பது’ என்று அசோக கந்தகம முதலியோர் பேசுகிறார்கள். ஆனால் புத்த சமய அடையாளங்களைத் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெசாக் திருவிழா ஒட்டுமொத்த இலங்கை முழுவதும் பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடப்பட்டது. இது போன்ற செயலால் பகுதி சிறுபான்மை மக்களின் மனம் புண்படுகிறது என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
கீற்று: இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்த போரில் சிங்களர்களின் வெற்றிக்காகக் கொண்டாடப்பட்டன எனப் பல செய்திகள் அங்கிருந்து வந்தன. அப்படிப்பட்ட தோற்றம் அங்கு இருந்ததா?
போரில் கிடைத்த வெற்றி சிங்களத்தின் வெற்றி என்னும் ஒரு தோற்றப்பாட்டை சாதாரண மக்களிடம் கூடப் பதித்து விட்டார்கள்.
கீற்று: சிறுபான்மையினர் எந்தப் பகுதியிலும் பெரும்பான்மையினராக இருக்கக்கூடாது. எனவே அதற்கேற்ப சிங்களர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று செய்திகள் வருகின்றனவே!
இதை முஸ்லிம் மக்களின் கோணத்தில் பார்ப்பது, தமிழ் மக்களின் கோணத்தில் பார்ப்பது என இரண்டு வகைகளாகப் பார்க்கலாம். இலங்கையில் முஸ்லிம்கள் எல்லாப்பகுதிகளிலும் வாழ்கிறார்கள்; எல்லா இடங்களிலும் வணிகம் புரிகிறார்கள்; கடைகள் கட்டுகிறார்கள். அங்கெல்லாம் சிங்களர்கள் வீடு வாங்குவது, குடியேறுவது ஆகியவற்றைத் தவறாகப் பார்க்க முடியாது.
தமிழ்மக்கள் தலைநகரில் ஓரளவு நன்றாக இருக்கிறார்கள். பிற பகுதிகளில் அப்படிச் சொல்லிவிட முடியாது. தமிழ் மக்களின் மனநிலையில் சிங்கள ஆக்கிரமிப்பு என்னும் கருத்தைச் சிங்கள மக்களே கட்டமைத்து அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். சிங்களர்கள் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்; இது சிங்களர்களுக்கான நாடு என்னும் கருத்தை வலியுறுத்தித் தீவிர சிங்கள இனவாதம் பேசும் அரசியலாளர்களின் அறிக்கைகள் இச்செயலுக்குச் சாதகமாக இருக்கின்றன. அவ்வறிக்கைகள் தமிழ்மக்ககளின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி அமைதியைக் குலைத்து விடுகின்றன.
திட்டமிட்ட குடியமர்த்தம் என்பது போர்க்காலத்தில் இருந்தே மிகக் கச்சிதமாகச் செய்யப்பட்டு வந்தது. அம்பாறை மாவட்டத்தின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே அது புரிந்துவிடும். அம்பாறை என்பது பெரிய நகரமாக முன்பு இல்லை. அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெகியத்துகண்டி வரை உள்ள பகுதிகளில் சிங்களக் குடியமர்த்தங்கள் மிக அழகாகச் செய்யப்பட்டன. பின் அம்பாறை மாவட்டத்துடன் தெகியத்துகண்டியும் இணைக்கப்பட்டு அம்மாவட்டத்தில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினம் ஆகுமாறு செய்யப்பட்டது. இப்படி நுணுக்கமாகப் பல வேலைகள் செய்யப்பட்டன.
‘சமத்துவமாக எல்லோரும் எல்லாப் பகுதிகளிலும் வாழலாம், சிங்களப் பகுதிகளுக்கு ஒரு தமிழர் சென்று காணியை வாங்கினாலும் சரி, சிங்களப் பகுதிகளில் ஒரு முஸ்லிம் சென்று ஒரு காணியை வாங்கினாலும் சரி, அவற்றில் எல்லாம் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது, இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இருக்கக் கூடாது’ என்னும் நிலையை நூறு வீதம் தோற்றுவித்ததற்குப் பின் தமிழ்ப் பகுதிகளிலோ முஸ்லிம் பகுதிகளிலோ சிங்களர்கள் குடியேற்றப்படுவது தவறாகப் பார்க்கப்படாது. ஆனால் அப்படிப்பட்ட நிலை இப்போது இல்லை. சிறுபான்மை மக்கள் தங்கள் பகுதிகளில் நூறு வீதம் பாதுகாப்பாக வாழ முடியும் என்னும் மனநிலையே இன்னும் அங்கு முழுமையாக வரவில்லை. இது போன்ற நிலையில் சிறுபான்மை மக்கள் அக்குடியேற்றங்களை அச்சத்துடன் தான் பார்ப்பார்களே தவிர ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது போன்ற அச்சத்தைப் போக்கி நிறைவான விடையளித்து மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் பணியைத்தான் சிங்கள அரசு முதலில் செய்ய வேண்டும்.
கீற்று: உங்களுக்குத் தெரிந்த வரையில் மக்கள் அகதிகள் முகாமில் எப்படி இருக்கிறார்கள்?
நிலைமை ஒரளவுக்குச் சுமூகமான பிறகுதான், நான் அந்தப் பகுதிகளுக்குச் சென்று பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. நிலைமை மிகக் கடினமாக இருந்த நேரத்தில், அங்குப் போய் வந்த சகோதரர்கள் சொன்ன செய்திகள், ரொம்பப் பரிதாபம். அடிப்படை வசதிகளே இல்லை என்னும் நிலைதான் இருந்தது.
கீற்று: அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகக் கூறமுடியுமா?.
இதை விட வேறு பரிதாபம் இருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் அடிப்படை வசதிகள் ரொம்பக் குறைவு. ஒவ்வொரு பேருந்திலும் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் சொன்ன செய்தி அது. வருகின்ற ஆட்களுக்கு இன்றியமையாத தேவைகளான சோப்பு, உடுப்பு, குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. தேவைப்படுகிற மருத்துவ வசதிகளை, அந்த நேரத்தில், அதுவும் நிறைவான முறையில் போதிய அளவு செய்யவில்லை. ஏனென்றால் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள் என்பது, களத்திலே இருந்த ஆள் சொன்ன வாக்குமூலம். அது தவிர வெளியில் இந்த நிலைமைகள் சரியாகவும் துல்லியமாகவும் பதியப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் தொடக்கத்தில் யாருக்குமே பெரிய அளவில் அங்குப் போய் பதிவுகளை மேற்கொள்வதற்கு அரசின் ஒப்புதல் இல்லாததினால் சரியான கள நிலவரம் இதுதான் என்பது துல்லியமாகப் பதிவு செய்யப்படவில்லை. நிலைமை ஓரளவு சீரடைந்த பிறகுதான் நிறையப்பேர் அங்கு செல்ல முடிந்தது. இப்பொழுது உள்ள நிலவரங்களை வைத்துத்தான் முந்தி இப்படி நடந்திருக்கலாம் என்று கணிக்கக்கூடிய நிலை இருக்கிறது. மற்றபடி சான்றுகளைக் கொண்டு நாம் அந்தச் செய்திகளைத் திரட்டினோம் என்று சொன்னால், அது தொடர்பாக துணிச்சலாகக் கதைக்கலாம்.
மக்களுக்கு முதலாவதாகச் சாப்பாடும் தண்ணீரும்தான் தேவைப்பட்டது. அந்த மக்கள் எந்த அளவுக்குத் துன்பப்பட்டிருப்பார்கள் என்று அறிந்து கொள்வதற்கு அந்த ஒரு செய்தியே போதும். போர் நேரத்தை, அந்த கடைசிக் கட்டத்தை, என்னைப் பொறுத்தவரையில், உலகத்தில் நடந்த ஒரு உயர்ந்த அளவுக் கொடுமையாக, ஒரு தண்டனையாகக் கூட பார்க்கிறேன். அதற்கு மேல் ஒருவர் ஒரு துன்பத்தை அனுபவிப்பது என்பது, அப்படி ஒன்று இருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பிட்ட ஒரு நீண்ட காலம், அந்த மக்கள் பொடிநடையாகவே எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதே நேரத்தில் அந்த மக்களுக்கு ஆதரவளிப்பது போன்ற எந்தவொரு ஏற்பாடும் இருக்கவில்லை. எந்த நேரமும் நாம் கொல்லப்படுவோம், கண் முன்னாலேயே எத்தனையோ பேர் கொல்லப்படுகிறார்கள் என்ற அந்த மிகக் கோரமான பதிவுகளிலிருந்து, அந்த மக்கள் விடுபடுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
கீற்று: இலங்கையில் இனி முஸ்லிம்-தமிழ் மக்கள் இணக்கமாக வாழ வழி இருக்கிறதா?
அரசியல்வாதிகள் மக்களை இனரீதியாக பிரித்து வைப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த தேர்தலில் அது தெளிவாகத் தெரிந்தது. முஸ்லிம் ஓட்டு முஸ்லீமுக்கே, தமிழரின் ஓட்டு தமிழருக்கே என்றுதான் ஓட்டு போட்டார்கள். இந்த அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடும் வேலையைத் தான் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதை மாற்ற வேண்டும்.
அடுத்தபடியாக இஸ்லாமியத் தமிழர்கள் என்று அழைப்பதையும், முஸ்லிம்கள் என்று தனித்து அடையாளப்படுத்துவதையும் நிறுத்தி விடுவோம். மொத்தமாக தமிழ் பேசும் மக்கள் என்று கூறவேண்டும். எக்காரணம் கொண்டும் பழைய பிரச்சனைகளை அதனுள் கொண்டு வரக்கூடாது. உடன்படுகிற, முரண்படுகிற விஷயங்களை பொதுவாக எடுத்துக்கொண்டு முரண்படுகிற விடயங்களை விட்டுவிட்டு உடன்படுகிற விஷயங்களில் இணைந்து வேலை செய்ய வேண்டும். முரண்படுகிற விடயங்களை எந்தப் புள்ளியில் முரண்படுகிறோம் என்பதைப் பேசித் தீர்க்க வேண்டும்.
கீற்று: கடந்த ஆண்டு முடிவுற்ற யுத்தத்திற்குப் பிறகு சிங்கள மக்களிடம் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது?
இந்த யுத்தம் சிங்கள மக்களிடம் தாங்கள் மேலானவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கிறது. இனிவரும் காலத்தை இவர்களுடன் வாழ்வது என்பது தமிழ் பேசும் மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதற்கு இன்னொருமுறை ஆயுதம் தூக்குவது என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது. அதேநேரத்தில் சிறுபான்மையினர் தங்களது அடையாளங்களை மறந்து பேரினவாதத்தில் கரைந்து போவது என்பதையும் ஏற்கமுடியாது. உரிமைகளை ஏதேனும் ஒரு தளத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அரசு அதை முழுமையாகவும், நியாயமாகவும் செய்யும் என்ற நம்பிக்கை விட்டுப் போய்விட்டது. அரசியல்வாதிகள் துணைக்கு வருவார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. மக்கள்தான் மாற்றத்திற்கான விதைகளைத் தூவ வேண்டும்.
வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் தங்கள் சொத்துக்களை அங்கேயே விட்டு விட்டு அகதி முகாம்களில் வாழத்தொடங்கி, இந்த இருபது வருடங்களில் ஓரளவிற்கு தங்களது நிலையை அமைத்துக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு, வீடு உறவினர்களை இழந்து எதுவுமில்லாமல் இருக்கும் தமிழ் மக்களின் நிலை உண்மையில் பரிதாபமானது. இந்த நிலை ஓரளவிற்காவது சரியாவதற்கு இன்னும் இருபது, முப்பது ஆண்டுகள் பிடிக்கும்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களுக்கு சரியாக வாழ்விடங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை. முகாம்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து போய் என்ன செய்வது? அடுத்த வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் அவர்கள் படும்பாடு மிகத் துயரமானது.
தமிழகத்திலும் இலங்கை தமிழ் மக்களை வைத்து அரசியல் பேசும் அரசியல்வாதிகளால் அம்மக்களுக்கு பயனேதும் இல்லை. கடந்த தேர்தலில் தமிழகத்தில் பேசுபொருளாக இலங்கைப் பிரச்சனை இருந்தது. அதற்கு முன்னரும் இலங்கையில் படுகொலையும், ஆட்கடத்தலும், பாலியல் பலாத்காரமும் இருந்து கொண்டுதானே இருந்தது. தங்களது சுயலாபத்திற்காக தான் இவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரிகிறது. இன்னும் ஐந்து வருடத்தில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை.
அதேநேரத்தில் நியாயமான தமிழ்த் தேசியவாதிகள் அம்மக்களை விட்டுவிடப்போவதுமில்லை. தமிழ்த் தேசியவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்! தமிழ் மக்கள் என்று பேசும்போது, முஸ்லிம் மக்களையும் சேர்த்துப் பேசுங்கள். தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் பேசுங்கள். தமிழர்களுக்காக இயக்குனர் அமீர் பேசியது அங்கே பெரிய அளவில் தமிழ் மக்களால் விதந்து பேசப்பட்டது. அதேநேரத்தில் நான் இங்கு வந்தபிறகு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், இங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்காகவும் பேசுகிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் இந்த நியாயமான குரல் இன்னும் இலங்கை முஸ்லிம்களின் காதுகளில் ஒலிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று இங்குள்ள தமிழ்த் தேசியவாதிகள் பேசுவது இலங்கை முஸ்லிம்களைச் சென்றடைந்தாலே போதும், அவர்களின் மனநிலையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். அப்போதுதான் கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரண்டு தரப்பினரும் பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்படுவதற்கு எதிராக அணி திரள முடியும்.
கீற்று: போருக்குப் பின் ஒரு தனிமனிதனுக்கான அத்தனை உரிமைகளும் முஸ்லிம் மக்களுக்கு இருக்கிறதா? பேச்சு, எழுத்து, வாழ்வுரிமை…?
லசந்த கொல்லப்பட்டதற்கு பிறகு மிக அதிகம் பேர் உண்மை பேசுவதையோ, எழுதுவதையோ விட்டு விட்டார்கள். மக்களிடையே அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது மக்களிடம் உள்ள அச்சத்தைக் களைய வேண்டும்.
கீற்று: எந்த போராட்ட அமைப்புகளும் இல்லாத நிலையில் மக்களின் உரிமைகளை இந்த அரசு தந்துவிடும் என்று நம்புகிறீர்களா?
சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்ற அரசியல்வாதிகள் தங்கள் பிரச்சனைகளுக்காக ஒரு அணியில் திரளாதவரை அது அரசுக்கு நாம் தரும் வாய்ப்பாகப் போய்விடும். ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகள் யாரும் மக்களுக்கு எந்த நம்பிக்கையும் தரும் வகையில் இல்லை. இலங்கையின் மொத்த செல்வத்தையும் சுரண்டுவது எப்படி, வெளிநாடுகளில் சொத்து வாங்குவது எப்படி போன்ற விஷயங்களில் தான் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களோடு ஒப்பிடும்போது பிரபாகரன் மிகவும் நல்லவராகத் தெரிகிறார்.
அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நான் மட்டுமல்ல எந்தவொரு முஸ்லிமும் எதிர்க்கவில்லை. நான் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக சிறுபான்மை மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை மறுதலிக்க முடியாது.
எந்த ஒரு நியாயமான போராட்டமும் முற்றுமுழுதாக தோற்றுப் போவதில்லை. மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை இந்த அரசு வழங்கத் தவறினால் மீண்டும் போராட்டங்கள் தொடங்கும். அது ஆயுதப் போராட்டமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்கள் வெறுக்கத் தொடங்கினாலே அது அச்சமூட்டக்கூடிய எதிர்ப்பாக மாறும். ‘நான் யாருக்கும் இனி பயப்பட வேண்டாம், என் உரிமைகள் எனக்குக் கிடைக்கும்’ என்ற நிலை ஏற்படாத வரை இப்போதைய அமைதி நீடிக்கும் எனத்தோன்றவில்லை.
- முஸ்தீன் >theenizhal@gmail.com // இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் // document.write( '' );
// ]]>)
நன்றி: நேர்காணல்: கீற்று நந்தன்
தட்டச்சு: மினர்வா, முத்துக்குட்டி, மோகன்
No comments:
Post a Comment