Friday, November 26, 2010

"புதைந்து கிடக்கும்
கோடானுகோடி
எலும்புக் கூடுகள் மீது
அமைதியாக
உறங்கி எழும்
நாம் யார்?" -

என்று கவிஞர் அழகு நிலா நம்மை நோக்கி எழுப்பும் கேள்விக்கு நாம் தலையை குனிந்துகொள்வதை தவிர எதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதுதான் மனிதயினத்தின் உட்சநிலை ஒதுங்குதல் எனலாம். ஒரு குண்டூசி குத்தினாலே பத்துநாளைக்கு வலியிருக்கும், குண்டுகள் தலையில் நேரடியாக விழுந்தாலும் கூட வலி தெரியாது உயிர் பிரிந்துவிடும். ஆனால் நகம் தொடங்கி உடல் உறுப்புகளை இழந்து தானும் வாழ முடியாமல் அடுத்தவருக்கும் பாரமாக அமைந்துவிடுகிற நிலை கொடூரமானது.

மனிதனின் உறவு படிநிலையானது சக மனிதன் என்கிற செயல்பாட்டில் தொடங்கி தன் குடும்பம் என்று சுருங்கிவிடுவது அறிந்த ஒன்றே. இருப்பினும் தன் இனம் சார்ந்த, தன் மொழி சார்ந்த தன் குருதி உறவு என்கிற மிக அருகாமை உயிர்கள் பாதிக்கப்படுகிறபோது நமக்கும் அதே வலிமிகுந்த வாழ்க்கை தான் என்பதால் ஈழத்தமிழர் என்றில்லை உலகில் எந்த மனிதன் பாதிக்கப்படாலும் அந்த வலி நேரடியாக நம் உணர்வில் கலந்துவிடுகிறது.

போர் நடக்கும் இடங்களில் எல்லாம் உயிரிழப்பு தவிர்க்க இயலாததுதான் ஆனால் யாருடைய உயிர் யாருக்காக எதற்காக இழக்கப்படுகிறது அல்லது இழக்கவைக்கப்படுகிறது என பல துணைக்கேள்விகள் நம்முள் எழுகிறது. சுற்றி வலைத்து பார்த்தால் பேரினவாத்தின் கொடும்பசிக்கு பொதுமக்களின் உயிர் மட்டுமின்றி இராணுவ வீரர்களின் உயிர்களூம் பலியிடப்படுகின்றன. நமக்கு உயிர் என்கிற போது இரண்டு உயிர்களும் ஒன்றுதான். இதில் பேரினவாதம் தன்னை தற்காத்து கொள்வதற்கு பணம் கொடுத்து சில பாதுகாவலர்களை ஏற்படுத்தி தன்னை சுற்றி நிறுத்திக்கொள்கிறது.

பணத்திற்காகவே கொலைசெய்யும் கொலை வியாபாரிகளையும் அதே பணத்திற்காக இராணுவ நடவடிக்கை என்கிற பெயரில் கண்களை கட்டிக்கொண்டு களத்தில் நிற்கும் இயந்திர மனிதர்களையும் நாம் ஒரே தட்டில்வைத்துதான் பார்க்க முடிகிறது. பேரினவாதம் எப்போதும் தனக்கு தன் அடிமைகள் பலி தந்துக்கொண்டே இருக்கவேண்டும், இல்லாவிடில் தன் அடிமைகள் தனக்கு பலி தரும் செயலை மறந்துவிடக்கூடும் என்கிற சந்தேகத்திலேயே அடிக்கடி அடிமைகளை ஏவிவிட்டு அவர்களின் பணியை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. அடிமைகளும் தன் எசமானர்களுக்கு பலி கொடுத்து கொடுத்தே தங்களின் கூலியை உயர்த்திக்கொள்கின்றன.

இனி இந்த பேரினவாததால் பாதிக்கப்படும் உயிரினங்களை பார்போம்.

ஒரு மண் புழுவாக இருந்தால்கூட அதை நாம் மிதிக்கும்போது நம்மை தாகுவதெற்கென தன் தலையை வேகமாக நம்மை நோக்கி திருப்பும். அதனால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்று பேசாமல் இருப்பதைவிட எதிர்த்து சாகும் போது மிதிப்பவனுக்கு எதிர்ப்பு என்கிற சித்தாந்தத்தை உணரவைத்துவிட்டுதான் சாகிறது. மண் புழுவுக்கே அப்படியெனில் நாம் மனிதர்கள். நசுக்கப்படும்போது நற நறத்துக்கொண்டு திமிரி எழுவோம், அந்த எழுச்சி என்பது பேரினவாதத்திற்கு செரிமானம் ஆகாத செயல் என்பதை தன் அடிமைகளை ஏவிவிட்டு கொலைசெய்ய சொல்லுகிறது, அடிமைகளும் தன் எசமானின் காலடியை சக மனித குருதியால் குளிப்பாட்டி தன் விசுவாச நிலையை தக்கவைத்துக்கொள்ளும்.

பேரினவாதத்திற்கும், அடிமைகளுக்கும், நசுக்கப்படுவோருக்கும் இடையே நடக்கும் இந்த விளையாட்டில் நாம் பார்வையாளர்களாய் நம்மையறியாமலேயே நுழைகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் பார்வையாளர்களில் ஒரு பெரும்பகுதி பேரினவாதத்தை எதிர்க்கும் அதேவேலையில், பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பேரினவாதத்தின் அடிமைகளில் ஒரு பகுதி பேரினவாதத்தை ஆதரித்து நம்மை குரள்வலை பிடிக்கவும் தவறுவதில்லை.

இதில் பெரும் ஒற்றுமை என்னவெனில் நம்மை நசுக்கும் இங்குள்ள பேரினவாதத்தின் பிற முகங்கள் அதே ஆளுமையில் ஆட்சி அதிகாரத்துடன் இருப்பதுதான்.

"சிதறிய எம் மக்களை
இணைப்பதற்காக
சிதறுகிறேன் நான்
வலிகளே இன்றி"

--என கவிஞர் எழில்நிலா எழுதியுள்ளதில் இருக்கும் உள் கருத்து நம்மை கடந்து செல்லவிடாமல் ஒருவித உணர்வுகளால் கட்டிப்போடுகிறது.

தன் மக்கள் சிதறடிக்கப்பட்டு, ஓட ஓட தன் சொந்த மண்னைவிட்டே விரட்டப்படுகிறார்கள் அதனால் அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த மண்ணில் இணைப்பதற்காகவும், அவர்களின் காற்றை அவர்களே தீர்மானித்து விடுதலையுடன் சுவாசிக்க வைப்பதற்காகவும் நான் சிதறக்கூட தயங்க மாட்டேன் என்கிற போர்க்குரலை தொடங்கிவைப்பதே இந்த பேரினவாதங்கள்தான்.

நாம் குடியிருக்கும் வாடகை வீட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்ற நினைக்கும் வீட்டின் உரிமையாளர் வாடகை ஏற்றம் என்கிற பேரினவாத கருவியை பயன்படுத்துவர். இதனால் கொதிக்கும் நாம் எவ்வளவோ தனிவாக பேசிப் பார்ப்போம் இருந்தும் நம் ஆற்றலுக்கு மீறுகிற போது உன்னால் இயன்றதை பார்த்துக்கொள் என நாமும் எதிர்க்கவேண்டிய சூழல் வரும். ஏன் அந்த உரிமையாளர் நம் பேச்சுக்கு செவிமடுக்க மறுக்கிறார்? எனில் அதுதான் "தான்" என்கிற பேரினவாத போக்கு. தன் குடும்பம் போல்தான் அவர்களும் என்கிற மனநிலை அவருக்கு எழ வாய்ப்பில்லை காரணம் அவரை பொருத்தவரை நாம் வாடகைக்கு வந்தவர்கள் (வந்தேறிகள்) தன் கட்டளைக்கு கீழ்படிந்து உடனே வெளியேறியே ஆகவேண்டும்.

ஆனால் அதே வீட்டில் பங்கு என்கிற நிலையில், சொந்த அண்ணன் தம்பிகளிடம் இதேப்போல் பேச இயலுமா? பேசினால் வெட்டு குத்து என்று ஆகுமல்லவா. ஒரு வீட்டிற்கே இந்த நிலையெனில் ஒரு நாட்டில் அண்ணன் தம்பிகளிடம் வன்முறையால் பேச நினைத்தால் தம்பிகளும் அதே வன்முறையால்தான் பதில் சொல்ல வேண்டிருக்கும், அப்படி பேசுகிற போதுதான் பேரினவாததிற்கு எங்கே தனனை இவன் வென்றுவிடுவானோ என்கிற பதட்ட நிலை ஏற்பட்டு தன்னை ஒத்த பேரினவாதங்களுடன் கைக்கோர்த்து தன் தம்பிகளை அழித்துவிட்டு தானே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறது, அதற்கு உடனே அண்டையில் இருக்கும் பேரினவாதங்கள் கைக்கொடுக்கிறது. இப்படியாக தொடங்கும் விளையாட்டுகளில் பேரினவாதத்தை கையிலெடுத்த அண்ணன்களை அவர்களுக்கு புரிகிற மொழியிலேயே பேசி இறுதியில் பேரினவாதத்திற்கு எதிரான தம்பிகள் வென்றுவிடுகிறார்கள். அதே நேரத்தில் பேரினவாதத்திற்கு கைக்கொடுத்த அண்டையரும் வீழ்த்தப்படுகிறார். இது ஒரு வினைக்கு எதிர்வினை என்கிற கணக்கில் காலம் நேர்மையான தீர்ப்பை வழங்கிவிடுகிறது.

உள்நாட்டு போர் தொடங்கி, உலகப்போர்வரை தூண்டப்படுவது இந்த பேரினவாதங்களின் பேராசையால்தான் என்பதை நாம் உணர்வோம், இன்றைய தேதிவரை உலகெங்கும் எத்தனை வன்முறைகள் தூண்டப்பட்டிருகின்றனவோ அதன் பின்ணணியில் எல்லாம் பேரினவாதம் இருந்து சிறப்பாக செயல்பட்டிருப்பதை நன்கறிவோம். அதே போல் தோற்று ஓட்டம் கண்டிருக்கு வரலாற்றையும் நாம் நன்கு அறிவோம்.

No comments:

Post a Comment