Thursday, August 18, 2011

ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில்

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவுடன் ஒத்துழைப்பதா? அல்லது அதற்கு எதிர் அரசியல் நடத்துவதா? இல்லை கண்டுக்கொள்ளாமல் இருப்பதா என்கிற மக்களின் ஊசலாட்ட போக்கு ஊழல், லஞ்சம், இன்னபிற அரசியல் சுரண்டலுக்கு எதிராக களம் இறங்கும் நடுநிலை மனிதர்கள் அல்லது தொடக்க நிலை அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பட்டமான உண்மை. ஏனெனில் ஒரு போரட்டம் என்பது ஒருவரோடு முடியாது. அதேப்போல் ஒருவர் எழுப்பும் குரல் அரசியல் அதிகாரத்தால் நசுக்கப்படும். அதே ஒட்டுமொத்த மக்களின் குரல் என்றால் அதிகாரம் கொஞ்சம் யோசிக்கும்.

ஊழல் என்பது இந்தியாவின் தேசியத்தொழில். கஞ்சா குடிச்சவன் கை நடுங்குவதுப்போல ஊழல் செய்யாவிட்டால் இந்திய அரசியல்வாதிகள் கை நடுங்கிக்கொண்டே இருக்கும்போல. அன்னா ஹசாரேவின் பிடிவாதமான கோரிக்கைகள் ஒருபுரம் ஏற்கத்தக்கதாக இருப்பினும் எப்படி காந்தியின் உண்ணாவிரத அரசியலுக்கு பின்னால் இந்துத்துவா இருந்ததோ அதேப்போல் அன்னா ஹசாரேவின் உண்ணா அரசியலுக்கு பின்னாலும் இந்துத்துவாவின் பிரதிநிதிகளான பா.ஜ.க நிற்பதுதான் கவலைக்கிடம்.

சக அரசியல்வாதிகள் போல் அன்னாவும் தேர்தல் அரசியலுக்கு வர துடிக்கிறார். அதற்கு காந்தியைப்போல உடலரசியல் நடத்துகிறார். ஊழலை அடியோடு ஒழித்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்கலாம் என நினைக்கும் அன்னாவின் கட்சியிலும் எதிர்காலத்தில் ஊழல் நடக்காமல் இருக்காது. அன்னாவின் அரசியலுக்கு வட இந்தியர்களின் ஆதரவு வழக்கம்போல் பெருமளவில் இருந்தாலும், தென்னிந்தியாவில் ஒரு துளியும் இல்லை.

பொதுவாகவே வட இந்தியர்கள் போராடும்போது தென்னிந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும், தென்னிந்தியர்கள் ஏதாவது கோரிக்கைவைத்து போராடும்போது வட இந்தியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் காலம் காலமாக நடந்துவரும் கண்ணாமுச்சி விளையாட்டுகள்.

அன்னா ஹசாரேவின் கோரிக்கையினை காங்கிரசு ஏற்காததன் காரணம். ஏற்றால் காங்கிரசு தலைவர் முதல் கடைநிலை காங்கிரசுகாரர்வரை ஊழல் செய்துவைத்திருப்பதாலேயே என்பதை பேசாத மக்கள் இல்லை.மேலும் கைது செய்வதும் பின் விடுதலை செய்வதுமான சித்துவிளையாட்டும் தேவையில்லை. ஒருபக்கம் அன்னாவை தூக்கிவிடுவதாகவும், இன்னொரு பக்கம் நீர்த்துப்போக செய்வதுமாகவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.இதை சமீபத்திய கைதுதானது அன்னாவிற்கான ஆதரவு இந்தியாவில் எந்தநிலையில் இருக்கிறது என்பதை மத்திய அரசு நாடிபிடித்து பார்ப்பதாகவே அமைந்தது. இப்படிபட்ட தொடைநடுங்கி அரசியலும் தேவையில்லை. வழக்கப்படி போரட்டத்தை கலவரமாக்கி துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி அன்னாவை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து அடக்கிவிடலாம். ஆனால் காங்கிரசு அரசு அன்னாவுடன் கண்ணாமுச்சு விளையாட்டு விளையாடுவது எதற்காக என்றுதான் நம்மால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

இறுதியாக திரு.அன்னா ஹசாரேக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் உங்கள் அரசியலை உங்கள் பாணியிலேயே முன்வையுங்கள் மாறாக "காந்தியவழியில்" என்கிறபோது எங்களைப்போன்ற சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிரானதாக ஆகிவிடக்கூடாது. காந்தி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரியவில்லை மாறாக ஊழலுக்கும், சாதியத்திற்கும் ஆதரவாகவே காந்தியின் பலபோராட்டங்கள் இருந்திருக்கின்றன. நீங்கள் எதிர்க்கட்சிகளின் அல்லது உங்களை ஆதரிக்கும் கட்சிகளின் தோளிலிருந்து இறங்கிவந்து போராடினால் உங்கள் பின்னால் மக்கள் திரள்வார்கள் என்பது உறுதி.

அன்னா ஹசாரேவுக்கு தமிழகத்தில் இருந்து சிற்சில ஆதரவும் எதிர்ப்பும் இருப்பது அரசியலே. அதற்காக "யாரந்த அன்னா ஹசாரே இவ்வளவு நாள் எங்கிருந்தார்" என்று கேட்பது மருத்துவர் ராமதாசுக்கு அழகல்ல. ஏனெனில் மருத்துவர். இராமதாசு திடீரென்று தமிழை காப்பாற்ற வந்து "தமிழ்க்குடிதாங்கி" வேடம் போட்டபோதும் இதே கேள்விதான் எழுந்தது அதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. தேவையெனில் தமிழர் கட்சியாகவும் பிறகி படையாச்சிகளின் கட்சியாகவும் நிறமாற்றிக்கொண்டே இருக்கும் மருத்துவர். இராமதாசு இதுவிடயத்தில் அடக்கிவாசிக்கலாம்.

ஊழல் வெல்கிறதா....ஓய்கிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment