Sunday, November 13, 2011

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்

இந்திய, இலங்கை இனவெறி அரசுகளால் தங்கள் இன்னுயிரையும் மண்ணுயிரையும் இழந்த எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் தமிழகத்தின் முக்கிய அரசியல் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைத்து கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் நடாத்திய மாபெரும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. வீரவணக்கம்:

•இனப்படுகொலைப் போருக்குப் பலியான இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள்.
•ஈழப்போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான போராளிகள்.
•முத்துக்குமார் முதல் செங்கொடி வரை உயிர் ஆயுதம் ஏந்தி தமிழர் உரிமைக்காக தம் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனைத்துத் தியாக உறவுகளையும் நினைவில் ஏந்தி இம்மாநாடு வீர வணக்கம் செலுத்துகிறது.

2. வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தாயகமாய்க் கொண்ட தமிழ் மக்கள், தமிழீழத் தமிழ் அரசே தீர்வு என்பதை 1972ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் உறுதிப்படுத்தினர். மேலும் 1977இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாய் வாக்களித்து ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, தொடர்ந்து தமது போராட்டங்கள் மூலம் அதை உறுதி செய்துள்ளார்கள். எனவே அய்.நா. மன்றமே! கிழக்கு தைமூர், கொசாவா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழரின் தாயகப் பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்திட ஆவன செய்!.

3. ”இனப்படுகொலைப் போர்க் குற்றவாளியான ராஜபக்‌சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும், சிங்கள இனவெறி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.” என தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது இந்திய அரசே நடவடிக்கை எடு!

4. போர்க் குற்றங்கள் இழைத்துள்ள இலங்கையில் எதிர்வரும் 2013ல் காமன்வெல்த் நாடுகள் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாகக் கனடா நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளதை இம்மாநாடு வரவேற்றுப் பாராட்டுகிறது. அதேபோல் இந்தியா உட்பட அனைத்து காமன்வெல்த் நாடுகளும் உச்சி மாநாட்டிற்கான இடத்தை இலங்கையில் இருந்து மாற்றக் கோரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. இராசீவ் கொலை வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குக்கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள மரணதண்டனை தொடர்பான சட்டங்களில் இந்திய குடியரசுத் தலைவருக்கு இணையான அதிகாரத்தைக் கொண்ட ஆளுநரும், மாநில அரசும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குதண்டனையை உடனடியாக நீக்கம் செய்திட தமிழக அரசே நடவடிக்கை எடு!.

6. சர்வதேச சமூகமே! தமிழீழப் பகுதிகளில் விரிவாகவும், செறிவாகவும், மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்து!

7. இந்திய அரசே, ஈழ மக்கள் அங்கீகரித்த தனி ஈழ அரசு அமைக்கப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.

8. இந்திய அரசே! இலங்கைச் சிறைகளில் விசாரணை ஏதுமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை நிபந்தனையின்றி சிங்கள அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடு!

9. அய்.நா மன்றமே! தமிழீழப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மேற்கொள்!

10. இந்திய அரசே! தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழீழ அகதிகளுக்கு பன்னாட்டு அகதிகள் சட்டப்படி உரிமைகள் வழங்கி மனித நேயத்தோடு நடத்து!

11. இந்திய அரசே! மலையகத் தமிழர்களுக்கு இருப்பிடம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்திட இலங்கை அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்திடு!.

12. இந்திய அரசே! மனிதகுலப் பண்பாட்டிற்கும், மனித உரிமைகளுக்கும், எதிரான மரணதண்டனையை உலகில் 137 நாடுகள் ஒழித்துக்கட்டியது போல் சட்டத்திலிருந்து நீக்கு!

13. தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குதண்டனைகுறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுக!

14. ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்துப் பரப்புரை செய்திட அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களை அமெரிக்க அரசு திருப்பி அனுப்பியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

15. தமிழக அரசே! தமிழகச் சிறைகளில் வாடும் மரணதண்டனைக் கைதிகள் உட்பட நீண்ட காலம் சிறையில் வாடும் அனைத்துக் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!

16. இந்திய அரசே! தமிழக மீனவர்களைப் படுகொலை செய்தும், மனித மாண்புகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தும், வலைகளை அறுத்தெரிந்தும், வாழ்வாதாரங்களை அழித்தும், இந்திய இறையாண்மையை அவமானப்படுத்துகிற சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடு!

17. இந்திய அரசே! தமிழக மீனவர்களின் மரபார்ந்த மீன்பிடி உரிமைக்கு எதிரான கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்று!

18. இந்திய அரசே! தமிழக மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கக் கூடிய கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை இழுத்து மூடு! மின் உற்பத்திக்கான மரபுசார் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்த உரிய திட்டங்களைச் செயல்படுத்துக!

19. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் சமரசமின்றிப் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு இம்மாநாடு முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

20. பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தமிழக்க் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. படுகொலைக்குக் காரணமான ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.


கண. குறிஞ்சி
தமிழக ஒருங்கிணைப்பாளர்
9553307681

தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம், தமிழ்நாடு
20/33 திருவள்ளுவர் நகர், ராம்நாதபுரம், கோவை: 641045.
மின்ன்ஞ்சல்: eezhamanaadu@gmail.com; வலைத் தளம்: kovaimaanaaduNOV6.blogspot.com
தொடர்புக்கு: 9553307681,9443039630,94444204740,96555587892

1 comment:

  1. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete