Saturday, August 16, 2014

ஊடக சுதந்திரமும் – அவமானமும்

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.


ஊடக நிலைப்பாடு

தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதோ அதேப்போல் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் நடுநிலை வகிப்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போவதேயன்றி வேறில்லை. இங்கே பயங்கரவாதம் என்று தொடங்கியவுடன் நமது பொது புத்தியில் பட்டென தோன்றும் காட்சிகள் ஏதோ ஒரு இயக்கத்தின் ஆவேச நடவடிக்கையோ என்றுதான் தோன்றும் ஆனால் நாம் இங்கே பார்க்கபோவது உலகில் உள்ள ஒரு சில இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதங்களைவிட கொடியதான "ஊடக பயங்கரவாதம்" என்ன? ஊடக பயங்கரவாதமாவென... உங்கள் புருவங்கள் உயரலாம், ஆம் அதுவே உண்மை ஏனெனில் தத்துவாதிரமான இயக்கங்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உயிர்களைதான் கொல்லும் தவறாக வெளியிடப்படும் பத்திரிக்கை பயங்கரவாதமோ நிகழ்வில் கொஞ்சமும் சம்மந்தபடாத பல்லாயிர கணக்கான அப்பாவிகளது உணர்வுகளையும் கொல்லும்.

இது ஒரு முட்டாள்தனமான வாதம் என்றுக்கூட பலருக்கு தோன்றலாம் ஆனால் நமக்கு தெரிந்தே ஒரு புறம் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்படும் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதமானது உலக முஸ்லீம் சமூகத்தினர் மீதும், சிறுபான்மை நாடுகள், இனங்கள் மீதும் கட்டமைக்கப்பட்டு அவர்கள் குறித்து உலகத்திற்கு தவறான பல செய்திகளை கொடுத்து குறிப்பிட்ட இனமக்களை சமூக மைய நீரோட்டத்திலிருந்து விலக்க நினைத்து உள்நாடுகள் முதல் உலக நாடுகள் வரை ஒரு மறைமுக பயங்கரவாதத்தினை ஊடகங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இவ்வித பயங்கரவாதத்திற்கு பெரும்பாலும் பாதிப்பிற்குள்ளாகி கிடப்பது முஸ்லீம் சமூக மக்களே என்பதனை நாம் நன்கறிவோம்.

இப்பாதக செயலில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்திய ஊடகங்கள் எனலாம் ஏனெனில் இன்று தகவல் துறை  மிக வேகமாகவும் காத்திரமாகவும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதாலும் அதிலும் முக்கியமாக ஊடகத்துறை காணப்படுவதாலும் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டதை நாம் அறிவோம். உலகின் எந்த ஒரு மூலையில் நடைபெறும் ஒரு சிறுநிகழ்வும் ஒரு சில நொடிகளில் மற்றொரு மூலைக்கு சென்றடைவதும் அந்த நிகழ்வின் வீச்சுக்கேற்ப உலகின் பல பகுதிகளில் உள்ளூர் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பலவிதமான திடீர் செயல்பாடுகள் மாறுபடுவதும் அறிந்த ஒன்றே.

இப்படியான துரித செயல் ஓட்டம் மிகுந்த ஊடக வளர்ச்சியால் உலக மக்களில் அனைவரும் தகவல்களை நொடிக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ளவும் தங்களுக்கு தேவையான தேவையற்ற தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளும் பெரும் வசதியினையும் பெற்றுள்ளனர் என்பதனை நாம் மறுக்க இயலாது. எந்த ஒரு நல்ல/ தீய செய்தியாக இருக்கட்டும் அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ நமது வரவேற்பறைக்கும், கைப்பேசிக்கும் வந்துவிடுகிறது. இந்த வகையில் தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் பங்கு மிக கடமையுணர்வுள்ளது மட்டுமல்ல மிகமிக முக்கியமானதும், மிகப் பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒரு சமூக பணியுமாகும். இதைவைத்துதான் ஊடகம் என்பது ஒரு நாட்டின் முகெலும்பிற்கு சமமான ஒன்று என்பதான நிலைப்பாடு எழுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அராய்ந்து பார்க்காமலும், தகவலின் உண்மைத் தன்மையினை அறிந்துக்கொள்ளாமலும், நாகரிகமான முறையில் அவற்றை செழுமைபடுத்தாமலும் ஏதோ தகவல் கிடைத்துவிட்டது அதை உடனே தங்கள் ஊடகமூலம் வழங்கி தாங்கள்தான் அதிவே செய்தியாளர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எந்த ஒரு செய்தியையும் ஒரு பக்க சார்பாகவோ, உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்பதனை ஊடகங்களும் அதன் பொருப்பாளர்களும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.


ஊடக தர்மம்
ஊடக தர்மம் என்பது நம்மூர் ஊடகங்களுக்கு ஏட்டுச்சுரைக்காய் மட்டுமல்ல ஏடுகள் வழியாக நிகழ்த்தும் அதர்மகங்கள் என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு பிடித்த, பிடிக்காத தனிமனித அல்லது இயக்க அரசியல் ஏற்ற தாழ்விற்கு இடம்கொடுத்து  தங்களை அறிந்தே ஊடகங்கள் தங்களை விற்றுவிடுவதும் பிறகு அதிலிருந்து மீள மனமில்லாமல் அதிலேயே கிடந்து புரண்டுக் கொண்டு இருப்பதற்கும் காரணம் அதிலிருந்து தங்களுக்கு கிடைக்கும் அதீத லாபமான பணம்.. பணம்... பணம்... மட்டுமே. ஏனெனில் ஒரு பத்திரகை செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்வதைவிட இச்செய்தி சமூகத்தில் எவ்வித பரபரப்பை ஏற்படுத்தும் அதன்மூலம் தங்கள் பத்திரிக்கைக்கு எவ்வளவு பணமும் பெயரையும் வாங்கிக்கொடுக்கும் என்பதை பொருத்தே அமைகிறது. இதை தவிர்த்து சமூக அக்கரை, மறுமலர்ச்சி என்கிற பம்மாத்துகளை அவ்வப்போது அவிழ்த்துவிடவும் தவறுவதில்லை. ஏனெனில் ஊடக தர்மம் எதை சொல்லுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பாண்மைதான் மக்களிடமும் பரந்துக்கிடக்கிறது. இதை நன்கு புரிந்துக்கொண்ட ஊடகங்கள் "நன்றாக தங்கள் தொழிலை" வளர்த்துக்கொள்கின்றன.

இப்படி ஊடக தர்மம் என்கிற நாடகங்களை நிகழ்த்திக்கு கொண்டு  தான் சமூக அக்கரையுள்ள ஒரே ஊடகம் என்பதாக மக்களை ஏம்மாற்றி பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தும் படியாக உலகப் புகழ்பெற்ற, மிக முக்கிய ஊடகங்களில் ஒன்றான ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் சர்வீஸ்’ (பி.பி.சி.)யின் இயக்குனர் ஜார்ஜ் என்ட்விஸ்டில் ஒரு தவறான செய்தியை தனது பொறுப்பில் இருக்கும் பி.பி.சி. வெளியிட்டுவிட்டது என்பதால்! விலகியிருப்பது ஒரு ஊடக நேர்மையினை காட்டுகிறது.

‘ஒரு நாய்க்கு தண்டனை கொடுப்பதாக இருந்தாலும் விசாரித்து அதன்மேல் குற்றம் இருப்பதாக தெரிந்தால்  மட்டுமே கொடுக்கப்படும்’ என்பது பிரிட்டன் சட்டத்தின் முக்கிய அம்சமாக பல தருணங்களில் பலராலும் மேற்கோள் காட்டப்படும் ஒரு சொற்றொடர். இங்கிலாந்து நாட்டின் சட்டம் மட்டுமல்ல, ஊடகங்களும் இந்த தர்மத்தை பின்பற்ற முடிந்தவரையில் முயற்சித்து வருவதைத்தான் பி.பி.சி.யின் இயக்குனர் தனது பதவியை விட்டு விலகியிருப்பதிலிருந்து தெரிகிறது.


எதெற்கெடுத்தாலும் வளர்ந்த நாடுகளை மேற்கோள்காட்டி எழுதும் நமதூர் ஊடகங்கள் இதை வகையாக மறந்துவிட்டது மட்டுமல்ல எப்போதும் அவதூறுகளையும், பொய் புரட்டுகளையும் மட்டுமே எழுதி பழகிவிட்டதால் இது தங்களுக்கானதல்ல என கண்டுக்கொள்லாமல் விட்டிருக்கலாம் அப்படியே வெளியிட்டிருந்தாலும் நமது ஊடகங்களின் தாரக மந்திரமான "பரபரபிற்காக" மட்டுமே என்று நாம்தான் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமது ஊடகம் மீதான மக்களின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ஊடக தர்மம் என்பது தன்னால் தன்பொருப்பில் இருக்கும் ஒரு ஊடகத்தால் பங்கம் விளைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தனது உயரிய பதவியை தாமே முன்வந்து துறநத ஜார்ஜ் எண்ட்விஸ்டில் போன்ற ஊடகவியலாளர்கள் எங்கே... சொந்த இனத்துக்கே துரோகம் செய்து பணம் பார்க்கும் இந்திய ஊடகக்காரர்கள் எங்கே... பி.பி.சி. தன் செய்தி தவறாக அமைந்துவிட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. மன்னிப்பு கேட்டது. இதேப்போல் எத்தனையோ தவறான செய்தியினை இந்திய ஊடகங்கள் அட்டை படத்தில் போட்டுவிட்டு பிறகு அது தவறு என்று பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பினால் எங்கே தமது பணம் சம்மாதிக்கும் வியாபாரத்திற்கு கேடுவந்துவிடுமோவென அஞ்சி தன் தவற்றை "ரொம்ப உணர்ந்தவர்களாக" காட்டிக்கொள்ள தனது மறுப்பு செய்தியினை ஒரு சிறு பெட்டி செய்தியாக வெளியிட்டு தங்களை சமூக அக்கரையுள்ளவர்களாக காட்டிக்கொள்ளுவார்கள்.

தன்பொருப்பில் இருக்கும் ஊடகம் செய்தது தவறு என்று அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரே பதவி விலகியிருக்கிறார். இதே அளவுகோலை இந்திய/தமிழக ஊடகத்துறையுடன் பொருத்திப் பார்த்தால், பெரும்பான்மையான பத்திரிகைகளின் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரும் பதவியில் இருக்க முடியாது, ஊடகம் என்கிற பெயரில் தன்மானத்தை விற்று பணம் சம்பாதித்து கொழுக்கும் முதலாளிகளும் இருக்க முடியாது எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு போகவேண்டுயதுதான்.
இதற்கு சான்றாக எத்தனையோ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்.

பத்திரிக்கை சுதந்திரம்.
இந்த ஒரு சொல் படுத்துகிற பாடு இருக்கே சொல்லி மாளாது. இந்த பத்திரிக்கை சுதந்திரம் என்கிற பெயரில் இவர்கள் இருப்பதை எழுதினால் பரவாயில்லை இல்லாததும், தங்கள் கற்பனைக்கு உதிக்கிரதையும் எழுதுவது. ஒரு சிறிய செய்தி கிடைத்தால் அதற்கு கை,கால்கள் வைத்து தங்கள் கற்பனைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக திரைக்கதை அமைத்து பிரச்னை பெரிதாக்கி தங்கள் ஊடக சுதந்திரத்தை நிலை நாட்ட தவறுவதில்லை. உண்மையான சமூக பிரச்னை கண்டு ஓடிவிடுகிற ஊடக சுதந்திரம் பொய் புகட்டுகளை எழுதும்போது மட்டும் கரைபுரண்டு வந்துவிடும் இப்படியான பத்திரிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பிற்குள்ளானவர்கள் ஏதாவது தட்டிக்கேட்டால் ஓ பாருங்கள் எங்களது பத்திரிக்கை சுதந்திரத்தை பரிக்கிறார் என்பதாக கூச்சலிடும்.
சினிமா கிசுகிசுகளையும், சினிமா உலக  பரபரப்புகளையும் காசாக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்கப்போவதில்லை மாறாக இவர்கள் வெளியிடும் ஆபாச படங்களுக்கும், செய்திகளுக்கும்  இவர்களுக்கு இல்லாத சுதந்திரமா! பெரும்பாலும் கிசுகிசு எழுதினால் யாரும் வந்துக்கேட்கபோவதில்லை என்கிற துணிவினை அப்படியே சமூக நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துவதால்தான் நாம் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசவேண்டியிருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது "சென்னையில் ஒரு காவலர் புகார் கொடுக்கவரும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ளுவதை ஆய்வு செய்தவர் அது உண்மை என்கிற செய்தியினை சேகரித்து அதை உடனே வெளியிடாமல் சமமந்த பட்ட காவலரிடம் போய் இதுப்பற்றி பேசியபோது "நீ வெளியிட்டுக்கொள் எனக்கு என்ன கவலை" என்பதுப்போல் பேசியிருக்கிறார் இருந்தும் அந்த காவலருக்கு வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் இருப்பதால் இதை எழுதாமல் விட்டேன்" என்றார். ஏன் செய்திதான் கிடைத்துவிட்டதே என்பதற்காக தனது பத்திரிக்கை சுதந்திரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா. அவர் பத்திரிக்கை தர்மம்/ பத்திரிக்கை சுதந்திரம் என்றால் என்ன என்பதை உண்மையாக புரிந்து செயல்பட்டதால் சமூகத்தில் அந்த பெண்பிள்ளைகள் தலைநிமிர்ந்து நடக்க இயலுமா என்பதை யோசித்து எழுதாமல் விட்டிருக்கிறார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது உண்மையினை எவருக்கும் அஞ்சாமல் எழுதுவதில்தான் இருக்கிறது. மாறாக பொய்,புரட்டுகளையோ, கற்பனை வடிவாக்கங்களையோ எழுதி சமூக அமைதியில் தேவையற்ற பிரழ்வுகளை ஏற்படுத்தி தங்கள் பத்திரிக்கையினை பரபரப்பாக்கி பணம் சம்பாதிப்பதில் இல்லை என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்தாலே ஊடக பயங்கரவாதங்கள் தடுக்கபடும். 

முஸ்லீம்கள் மீதான ஊடக பயங்கரவாதம்.
இதில் சிறுபான்மையினத்தவர் என்கிற முழுபட்டியலையும் இணைத்துக்கொள்ளலாம் ஏனெனில் உலகில் ஊடக பயங்கரவாதங்களால் பாதிக்கப்படுவதில் உலக சிறுபான்மையினத்தவரே அதிகம் இதை ஏன் ஆணித்தரமாக நம்மால் சொல்லமுடிகிறது எனில் உலகில் எங்கு ஒரு நோய் பரவினாலும் உடனே அது ஆப்ரிக்காவிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், எங்காவது ஒரு புரட்சியோ, மக்கள் விரோத போக்குகளோ நிகழ்த்தப்படும் எனில் உடனே அது முசுலீம் தீவிரவாதிகளால் இருக்கிமோ என்கிறதான அனுமானங்களை ஊடகங்கள் அழித்துவிட்டு தங்களின் விற்பனை மதிப்பை கூட்டிக்கொள்ளுவதுடன் சம்மந்தபட்ட நாட்டின் அரசியல் அதிகாரங்களுக்கு தாங்கள் அடிமைகள் என்பதனையும் வெளிகாட்டிக்கொண்டு பெருமிதம் கொள்ளும்.
ஆளும் வர்க்கத்திற்கோ, தான்சார்ந்த சாதி,மத தலைவர்களுக்கோ, மக்களின் பொதுபுத்திக்கோ எதை கொடுத்தால் தத்தமத்து விற்பனை கூடுவதுடன் தான் எப்போதும் ஒரு நடுநிலை நாளேடு என்பதை சொல்லக்கூட பத்திரிக்கைகளுக்கு அவ்வப்போது முஸீலிம்கள் குறித்து ஏதாவது செய்தி வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் தங்களுக்கு நிகர் தாங்களே என மார்தட்டிக்கொள்ளுவதில் உலக அளவில் இந்திய ஊடகங்களே முதலிடதில் இருக்கின்றன. இதற்கு சான்று பகிர்வதுப்போல் இந்திய அரசியலில் நடக்கும் நாடகங்களுக்கும், அரசியல்காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் கலவரங்களுக்கும் இந்திய ஊடகங்கள் இராஜபாட்டை போட்டுத்தருகின்றன என்றால் மிகையாகாது.
தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை அலசி அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து நாகரிகமான முறையிலும் தாங்கள் வெளியிடப்போகும் செய்தியால் மக்கள் மத்தியில் என்ன மனநிலை மாற்றங்கள் நிகழும் என்பதும் அதன் தொடர்ச்சியாக செய்தியில் சம்மந்தப்பட்ட சமூகம் எவ்விதத்தில் பாதிபுக்குள்ளாகும் என்கிறவற்றை ஆய்வு செய்யும் மனபக்குவமோ, சமூக அக்கரையோ இந்திய ஊடகங்களுக்கு சிறிதளவேனும் இருப்பதில்லை. எந்த ஒரு செய்தியினையும் பக்க சார்பாகவோ உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது என்கிற பொதுஅறிவுக்கூட நமது இந்திய ஊடகங்களுக்கு இருப்பதில்லை இந்த ஒருநிலை சார்ந்த ஊடக மனநிலை இந்திய சூழலில் ஒரு பாசிச வன்மங்களாகவோ, சாதிய அரசியல் சார்ந்தோ எல்லாவற்றிகும் மேலாக தாங்கள் வாங்கிய தொகைக்கு விசுவாசமாகவோ எடுக்கப்படுகிறது என்பதனை நமது இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் பல பொய் பரப்புரைகள் மூலம் நிரூபித்திருக்கின்றன என்றால் அது பொய்யில்லை.

தங்களுக்கு கிடைக்கும் செய்தியில் ஒரு பக்க சார்பின்மை, உண்மை தன்மை என்பது ஊடக தர்மமாக பார்க்கப் படுவதற்கு பதிலாக இந்துத்துவ அரசியல் சார்புதான் அதிக படியான இந்திய பத்திரிக்கைகளில் பரவிகிடக்கின்றது. ஊடகம் என்பது ஒரு செய்தியினை உடனுக்குடன் வழங்கும் அவசர உத்திகளை கையாளும் அதே நேரம் வழங்குகின்ற செய்திகள் மக்கள் மத்தியில் வேறு ஒரு கருத்தில் புரியப்பட்டு செய்தியில் சம்மந்தப்பட்ட இனம் ஒட்டு மொத்த இந்திய பொதுபுத்தியில் தவறாக புரிந்துக்கொள்ள நேரும் என்கிற பொருப்பின்மையும், செய்தியில் இருக்கும் நேர்மையும் கெடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் கடமையாகும் என்பதனை புரிந்துக்கொண்டே தவிர்த்து எழுதும் மன பிரழ்ந்த நிலையினைதான் இந்திய ஊடகங்கள் முசுலீம்கள் விசயத்தில் கையாள்கின்றன.
எனவே ஊடகம் என்பது ஒரு சமுக சீர்திருத்தத்திற்கான கருவி என்பதோ, சமூக நல்லிணக்க நகர்வுக்கான ஒரு பாதை என்பதையோ புரிந்து அதை சரியாக பயன்படுத்தும் நேர்மை உலக முசுலீம்கள் விசயத்தில் இந்திய ஊடகங்களுக்கு இல்லாமல் போனது கவலைக்கிடமான ஒன்று மட்டுமல்ல இந்திய இறையாண்மை என்பதின் கேள்விக்குறியாகவும் படுகிறது.
இந்திய ஊடகங்களின் பயங்கரவாத பார்வை உலக முசுலீம்கள் மீது மட்டும் ஒரு நிலை சார்பாக பதிந்துவிட்டதற்கான காரணங்களை நாம் ஆராய தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் உலக அளவில் நிகழ்த்தப்படும் அரசியல் நகர்வுகளில் இசுலாம், இசுலாம் அல்லாத என்கிற இரண்டே அளவுகோள்பிடித்துதான் நிகழ்த்தப்படும் இதை உள்வாங்கும் இந்திய ஊடகங்கள் இந்துவ பாசிச கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் இச்செய்தி எந்தவகையில் உறுதுணையாக இருக்கும் என்பதனை உணர்ந்தே வெளியிடப்பட்டு ஒட்டு மொத்த இந்திய முசுலீம்களின் இந்திய சார்புநிலைக்கு வேட்டுவைக்க நினைக்கின்றன. இது பல சந்தர்ப்பங்களில் தோல்வியை கண்டாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வெற்றியைதான் தந்திருக்கின்றன என்பதற்கு ஆங்காங்கே நடைபெரும் கைதுகளும், தண்டனைகளும், போலி என்கவுண்டர்களும் உறுபடுத்திவிடுகின்றன.
இந்த ஊடக ஒருநிலை சார்புடைய தன்மை என்பது காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ஒரே தன்மையுடையதாக இருப்பதன் நோக்கம் நமக்கு அதிர்வை தருகிறது. "இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்பு ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு தங்களது மதகோட்பாடுகளில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாமல் போராடிய இசுலாமிய களவீரர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எந்த நிலை தரப்படுகிறது என்பதுதான் இந்திய இறையாண்மையினை கேள்விக்குறியாக்குகிறது". இந்நிலை தொடர்ந்து நிகழ்த்தப்படுமெனில் ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மை தளர்ந்து வெருப்புக்குள்ளாகும் அதே நேரத்தில் தங்கள் சொந்த நாட்டின் ஒரு இன மக்கள்மீதான வெறுப்பு எதிர் இனத்திரிடையே வளர்ந்து வளர்ந்து எதிர்கால இந்திய கூட்டு இறையாண்மைக்கே வேட்டுவைக்கும் நிலை ஏற்படலாம் என்பதும் கண்கூடு.
காஷ்மீரில் ஒரு இந்திய முசுலீம் கைதாகிறான் எனில் அது காஷ்மீரின் உள்ளூர் பிரச்னைக்காக கூட இருக்கலாம். காஷ்மீர மக்கள் தங்களின் தனிமனித சுதந்திரம் அல்லது வாழ்வுரிமையில் இந்திய அரசு தலையிடுவதை எதிர்த்து களமாடி இருக்கலாம் ஒரு காஷ்மீரி இந்திய அரசை எதிர்த்த விடயம் ஊடகங்களால் பயங்காரவாதமாக கட்டமைக்கப்பட்டு தங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதனை உணராத கன்னியாக்குமரி மக்களுக்கு முசுலீம் பயங்கரவாதம் என்கிறதாக மூளை சலவை செய்யப்படுவதாகவே படுகிறது.
உலக ஊடக பயங்கரவாத அளவுகோலினால் பார்த்தோமானால் இந்திய ஊடகங்களுக்கு இல்லாத பத்திரிக்கை சுதந்திரம் உலக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதாவென ஒரு அய்யம் ஏற்படுகிறது. ஏனெனில் இதுவரை உலக ஊடகங்கள் குறிப்பாக இசுரேலிய பின்னணியில் இயங்கும் ஊடகங்கள் வேண்டுமென்றே இசுலாமிய மத கோட்பாடுகளை சீண்டிப்பார்ப்பதிலேயே தங்களின் பத்திரிக்கை விளம்பரத்தினை வளர்த்துக் கொள்ளுகின்றன என்பதை பல நிகழ்வுகளிலும், செய்தி வெளியிடலிலும் நாம் அறிந்திருக்கிறோம்.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டுமெனில் அமெரிக்காவில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட "INNOCENCE" படத்தின் முன்னோட்டம் வெளியான போது உலக முஸ்லீம்களிடையே கிளர்ந்த எதிர்ப்புக்குரல் ஒருபுரமிருக்க மேலும் உலக இஸ்லாமியர்களின் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக சார்லி ஹெப்டோ என்கிற பிரரெஞ்சு பத்திரிக்கை நபிகளின் படத்தை நிர்வாண கேலிச் சித்திரமாக வெளியிட்டு மேலும் கடுப்பை கிளப்பியது. இவற்றை கண்டித்து அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான அல்ஜீரிய ஜனநாயக ஒன்றியமும், அரேபிய ஒன்றிய அமைப்பும் இணைந்து சுமார் 780,000 யூரோ இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தன (வெரும் இழப்பீடு தொகை இதற்கு தீர்வாகது என்பது எமது கருத்து) இவற்றை எதிர்க்கும்விதமாக எதிரிகள் தரப்பில் வாதாடும் ரிச்சர்ட் மால்கா என்கிற வழக்கறிஞர் கூறுகையில் "மதங்களை நகைச்சுவை பண்புடன் விமர்ச்சிக்கும் பிரஞ்சு மரபை உடைப்பதாக" வாதாடினார்.

ஒரு மதத்தின் கோட்பாடுகளையோ, வழிபடும் தன்மைகளையோ விமர்ச்சிக்கும்போது அது ஒருநிலை சார்பாகவோ சம்மந்தப்பட்ட மதத்தினை ஏற்றுக்கொண்ட மக்களின் மனதினை வேதனைபடுத்தும் விதமாகவோ அமைய கூடாது என்பதனை கிருத்தவ மத அடிப்படையிலான பிரிவினைகளை இருவேறு "கிருத்துவ அமைப்புகள் ஒருவருக்கொருவர் விமர்சிக்கும்போது அது கருத்து கலந்தாய்வுகளாகவே இருத்தல்வேண்டும் மாறாக ஒரு கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட இன்னொரு கிருத்துவ மக்களின் கருத்தினை கேளி செய்வதாக இருத்தல் கூடாது" என்பதனை ரோமானிய கத்தோலிக்க மற்றும் பெந்தகொஸ்தே அமைப்புகளுக்கிடையேயான மோதலின்போது இதே பிரஞ்சு நீதிமன்றம் கண்டித்ததாக எங்கோ படித்த நினைவு. இதே கண்டிப்பு இசுலாமிய மத கோட்பாடுகளை கேளி செய்யும் யூத,கிருத்தவ பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும் என்பதை அந்த வழக்கறிஞரின் மண்டைக்குள் ஏற்றுவதோடு இசுலாமிய எதிர்ப்பு என்றவுடன் கோவணத்தை வரிந்துக்கட்டுக்கொண்டு இறங்க நினைக்கும் ஊடக பயங்கரவாதத்தினையும் கண்டித்தே தீரவேண்டும்.
இப்படியான கண்டிப்புகளை எதோ சம்மந்தப்பட்ட இசுலாமிய அமைப்புகள் மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்று கைகழுவி விட்டுவிடாமல் இத்தகைய ஊடக பயங்கரவாதங்களுக்கு எதிராக பிர ஊடகங்களும், பிரமதங்களும் கூட முன்னெடுக்க வேண்டும். ஏனனெனில் கேளிச்சித்திரங்கள்தானே என கிருத்தவ மத நம்பிக்கைகளை இதுவரை எந்த இசுலாமிய பத்திரிகையும் வெளியிட்டு அவமான படுத்தியாதவோ, வழக்கு தொடர்ந்ததாகவோ உலகளவில் செய்திகள் இல்லை.
உலக பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது இசுலாமிய கருத்தியல் கேளிக்கையாக மட்டுமே நின்றுவிட இந்திய பத்திரிக்கை பயங்கரவாதம் என்பது கருத்தியலுடன் சேர்ந்த இந்திய எளியமக்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவே நிகழ்த்தப்படுகிறது. இந்தியாவில் ஏதாவது மூளையில் ஒரு சில முஸ்லீம்கள் இந்திய சட்டமீறல் அடிப்படையிலான வேறு வழக்குகளில் (ஒரு சாதாரன சந்தேக வழக்காகக்கூட இருக்கலாம்) சிக்கிக்கொண்டாலும்கூட உடனடியாக அது ஒரு பயங்கரவாத செயலாக உருமாற்றப்பட்டு அவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை இருக்கும் இசுலாமியர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்கிற ஊடக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு அவரை ஒரு தீவிரவாதியாக உறுதிபடுத்தும்வரை ஓயமாட்டோம் என்கிறரீதியில் குதிக்க தவறுவதில்லை.
இதேப்போல் இந்தியாவில் பலமுறை இந்துத்துவ தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் உடனடியான இசுலாமிய தீவிரவாதம் என்கிற வண்ணம் பூசப்படுவதும். இந்தியாவிலேயே அதிசிறந்த!!! அத்வானி போன்ற இந்துத்துவ அரசியல்வாதிகள் இது பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் வேலையாகவோ, இந்திய முசுலீம் அமைப்புகளின் வேலையாகவோ இருக்கக்கூடும் என்பதாக எதாவதொரு பத்திரிக்கையில் கருத்து வெளியிடுவதால் சம்மந்தப்பட்ட நிகழ்விற்கான வழக்கின் போக்கை மாற்றும் வகையிலேயே அமைந்துவிடுகிறது. இதுபோன்ற கருத்து அத்வானியால் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கருத்துகூறப்பட்டு விசாரணையின் போக்கை மாற்றியது நினைவிருக்கலாம். இதேபோன்றே மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இசுலாமிய தீவிரவாதம்தான் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய பத்திரிக்கை பயங்கரவாதம் பின் தொடர்ந்த விசாரணையில் அது "இந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது" என்பதையும்  முக்கிய குற்றவாளியாக பெண் சாமியார் சாத்விபிரக்னயா கைது செய்யப்பட்டார் என்று உறுதிசெய்துக் கொண்ட பின்னரும் இச்செயலுக்காக இசுலாமியர்களிடம் மன்னிப்போ, தங்களது ஊடகங்களில் மறுப்போ வெளியிடவில்லை என்பதே இசுலாமியர்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் எது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இந்நிலை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் சம்மந்தமே இல்லாத அப்பாவிகளை சந்தேகத்தின் பேரில் நள்ளிரவில் கைது செய்வதும், அவர்களை விசாரணை என்கிற பெயரில் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும் நடந்தேரியது. இப்படியான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் ஊடகங்கள் தங்கள் இறையாண்மையினை இந்துவத்திற்கு சாதகமாக எழுதிவிடுவதால் சம்மந்தபட்ட வழக்குகளின் விசாரணையின் போக்கு மாறி கைதானவர் மற்றுமின்றி அவர்சார்ந்த குடும்பத்தாரும், அவர்தம் சமூகமும், அவர் நம்பிக்கை கொண்ட மத கோட்பாடுகளும் வெரும் வாய்களின் அவலாக மெல்லப்படும் அபாயகரமான பயங்கரவாதத்தினை வளர்ப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கே சார்ரும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இதேப்போல் அண்மையில் ஏதாவதொரு வழக்கில் தேடப்படும் முஸ்லீம் குற்றவாளி எங்காவது கைது செய்யப்பட்டால் அத்துடன் பழைய நிகழ்வுகளையும் தூது தட்டி இணைத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் சம்மந்தமில்லாமல் இதற்குமுன் இன்ன இன்ன தீவிரவாதிகள் இங்கேதான் கைது செய்யப்பட்டார்கள், இவர்களுக்கும் அவனுக்கும் தொடர்பா? இந்த ஊர் தீவிரவாதிகளின் கோட்டையா? என்றெல்லாம் புனைந்து ஒரு அப்பட்டமான திரைக்கதையாக எழுதி வெளியிட்டு தங்களின் வியாபாரத்தையும், இந்துத்துவ சிந்தனையினையும் பரப்பிக்கொள்ளுவதில் முனைந்து நிற்கின்றன. அதுவும் ஒரு பத்திரிக்கை வெளியிடும் பொய் செய்தியினை மீண்டும் திரித்து இன்னும் சில பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றனவே தவிர வேறொன்றும் இல்லை. இதே நிலையில் இந்தியாவில் பல இடங்களில் இந்துதீவிரவாதிகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், வன்முறை பேச்சுகள், வன்முறை தூண்டல்கள் அதை தொடர்ந்த கலவரங்கள் என எதுவும் பரவலாக வெளிக்கொண்டுவருவதில்லை இந்த ஊடகங்கள். இவற்றை வெளிக்கொண்டுவராமல் இருக்க இந்துத்துவ அரசியல்வாதிகளால் இவர்கள் "நன்றாக கவனிக்கபடுவது" மற்றுமின்றி, எதை எழுதவேண்டும் எப்போது எழுத வேண்டும் என்பது உள்பட பாடம் எடுப்பதும் உண்டாம்.

இதை எப்படி நம்மால் இவ்வளவு ஆணித்தரமாக உணர முடிகிறது என்பதை /நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நேர ஊடக தர்மங்கள் விலக்குகின்றன. தேர்தலின் போது எல்லா ஊடகங்களும் மோடி புராணம் பாடியதை நாம் அறிவோம். இதனால் பாமர மக்களின் மனபிரழ்வு நிகழ்திருப்பதையும் அதை தொடர்ந்த அரசியல் மாற்றத்தையும் நம்மால் உணர முடிகிறது. ஒரு ஊடகம் என்பது எந்நிலையிலும் தனது தர்மம் தவறாது நடத்தல் வேண்டும் அது தவறப்படுகிறது என்றால் அத்தகைய ஊடகம் சமூகத்திலிருந்து விளக்கப்பட வேண்டும் ஏனெனில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஊடகமும் சமூகத்திற்கான செய்தி  வழங்குதலுக்கு தகுதியற்றவை என்றே நாம் கூற இயலும்.

மேலும் பொருள் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்க குறிப்பிட்ட இசுலாமிய மக்களின் மீது மட்டும் வெருப்பை உமிழும்படி ஊடக தர்மம் செயல்படுவது அழகும் அல்ல தர்மமும் அல்ல என்பதனை ஊடவியலாளர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். மேலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக ஒருபோதும் உலகளவில் இஸ்லாம் மதமோ அதை பின்பற்றும் முசுலீம்களோ இருக்கப்போவதில்லை என்பதையும் தெள்ளத்தளிவாக ஊடகவியலாளர்கள் உணர்ந்து அப்படிபட்ட முசுலீம் சமூகத்தின் உணர்வுகளோ அல்லது இந்திய இறையாண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்கிற சமூக நல்லிணகத்திற்கு தங்கள் ஊடகம் வெளியிடும் தவறான செய்திகள் வழிவகுக்கக்கூடாது என்பதையும் உணர்ந்து, முசுலீம்கள் குறித்த ஒரு செய்தி கிடைக்கிறதெனில் அதன் உண்மை தன்மையினை அறியும்விதம் பல நிலைகளில் ஆய்வு செய்து செய்தியில் துளியேனும் கற்பனை கலக்காமல் வெளியிட வேண்டும் எனவும். தொடர்ந்து முசுலீம் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையே இருக்கும் நல்லுறவினையும் பேணவேண்டும் எனவும் வளியுறுத்து கூறிக்கொள்ளுவதில் கடமை பட்டிருக்கிறோம்.

http://www.pnotimes.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/ 
துபை.12.08.2014
(கட்டுரைக்கு தேவையான குறிப்புகள் வலைதளங்களில் எடுக்கப்பட்டவையே நம் கற்பனையல்ல)

No comments:

Post a Comment