Saturday, January 19, 2008

பொங்கல் உழவர் திருநாளாலா? தமிழர் திருநாளா?

அன்னைத் தமிழுக்கும் மண்ணின் விடுதலைக்கும் தன்னுயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் மொழிப்போர் ஈக்கியருக்கு உலகத் தமிழர்கள் கூடி வீர வணக்கம் கூறி தொடங்குவோம்.

தமிழர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள், எல்லா தமிழர்களும் தனித்தனியாக தாம் சார்ந்த மதங்களின் கோட்பாடுகளின் படி பெருநாள்கள் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் தமிழரென்று உறவு கூட்டி குரல் கொடுக்க ஒரே தமிழர் திருநாளென்று பொங்கல் திருநாளை சொல்லலாம்.

ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு மதப்பேய்கள் பிடித்ததாலும், மதத்திருடர்களை தலைமையேற்று பிரிந்ததாலும் இன்று தமிழர் திருநாள் என்பது மருவி, பொங்கல் திருநாள் என்பது உழவர் திருநாள் என்று சகத் தமிழர்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையே!

உழவர் என்பதென்ன தனி இனமா? நாமும் ஒரு காலத்தில் விவசாயத்தில் உழன்றவர்கள் தானே. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு உழுவதை நிறுத்தி வரப்பேறி கிராமம் விட்டு நகரத்தை உறுவாக்கியவர்கள் தானே, நாமும் உழவர் இனமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

உள் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் உழைப்பவர் எல்லோரும் உழுபவர் தானே. உழவர்கள் இன்றும் வயலை உழுகிறார்கள், நாம் வாழ்க்கையை உழுகிறோம். இன்னும் சொல்லப்போனால் உழவர்கள் உழுதலில் பொதுநலம் இருக்கிறது, நாம் தான் சுயநலவாதிகள்.
நம் உழைப்பென்பது நம் குடும்பத்திற்கானது என்று சுருங்கிவிடுகிறது. உழவர்கள் ஊருக்காக உழைப்பவர்கள் அதனால்தான் நமக்கு சோறு தந்தவர்களை கஞ்சிக்கான வரிசையில் நிற்கவைத்து நன்றிகடனை நிறைவேற்றி விட்டோம்.

''காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்'' என்ற நிலைமாறி இன்றைய சூழலில் உழுவர்களுக்கு உயிர் மிச்சப்படுமா! என்கிற கேள்வி எழுகிறதெனில் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சொந்த நாட்டிலேயே குளிர்பானம், ஊர்திகள், மென்பொருட்கள் தயாரிப்பது, நிலங்களை கட்டிடங்களுக்காக விற்பது வரையிலான அனைத்து தொழில்களுக்காகவும், வெளிநாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

இதையாவது உறுப்படியாக செய்தோமா! என்றால் அதுவுமில்லை, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 99 விழுக்காடு பேருக்கு கடன் தொல்லை, வட்டி தொல்லை, மன உலைச்சல், உடல் நல கேடு என்று ஏற்றத்தாழ்வின்றி நாம் விரும்பியோ விரும்பாமலோ வயதையும் வாழ்க்கையையும் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த பொங்கலுக்காவது நாம் உறவுக்கூட்டி பொங்கல் வைத்து தாய்மண் நனைய நனைய வழிய விடவேண்டுமென்ற ஆவலில் இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கையில் நாம் ஏன் இன்னும் நிரந்தரமாக தாய்நாட்டில் தங்குவதை தள்ளிப்போடுகிறோம் என விளங்க வில்லை. ஒருகால் நாம் இங்கு வருவதற்காக ஏற்பட்ட நிர்பந்தம்போல் தாய்நாடு திரும்பவும் ஏதாவது நிர்பந்தம் வேண்டுமோ!

தை என்பது வெரும் திருநாள் மட்டுமல்ல அதுதான் தமிழ் ஆண்டின் முதல்நாள். இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அப்படியெனில் சித்திரை இல்லையாவென கேள்விகள் எழலாம், இல்லையென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும், நாமும் நம் கடமைக்கு சில சொல்லலாம் என நினைக்கிறேன்.

தன் மதக்கோட்பாடுகளை திணிக்கவந்த ஆரியர்கள் அதை எதிர்த்த தமிழர்களை ஒதுக்குவதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் யோசித்து நம்மை நேரடியாக எதிர்க்க திராணியற்று முதலில் நம் பண்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் கைவைத்தனர். அதன் முதல்கட்டமாக மூடப்பழக்க வழக்கங்களை நம்மிடையே உருவாக்கி நம்மை மூளைச் சலவை செய்து இனவாரியாக ஒற்றுமையாக இருந்தவர்களை மத அடிப்படையிலும், மதங்களின் உட்பிரிவுகளை கொண்டும் பிளவுகளை உண்டாக்கி நம்மிடையே புழக்கத்தில் விட்டு நம்மை மத வாரியாக பிரிப்பதில் முழுமூச்சில் இறங்கி அதில் பெருமளவில் வெற்றியும் கண்டனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் கைவைத்த பல இடங்களில், தமிழ் மாதங்களின் பெயர்களை மாற்றுவதிலும் செய்தனர். எனவே சித்திரை தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்கிறதும் ஒன்று. நாம் அறிவுபூர்வமாக பார்த்தாலே தெரியும், நிலம் காய்ந்து கிடக்கும் வறட்சி மிகுந்திருக்கும் வெய்யில் காலமான சித்திரையில் எந்த விழாவேனும் கொண்டாட இயலுமா? (சித்திரை திருவிழா கொண்டாடவைத்ததும் பார்ப்பனிய மூளைதான் எவன் வறண்டு கிடந்தாலும் சுறண்டவேண்டியதை சுறண்ட வேண்டாமா என்ன) அல்லது நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வயல் காடுகள் எல்லாம் பசுமை பொங்கி நிற்கும் தை மாதத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோமா?

நெல் விற்று பயிறுகள் விற்று பணம் கையில் புரள போவதைதான் ''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்பார்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தை தான் ஆண்டின் முதல் மாதம் அதுவே கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் என்று. ஆனால் தை பொங்கல் திருநாள் என்பதை ஆங்கில மாதமான சனவரி 15 தேதிகளில்தான் கொண்டாட வேண்டுமென்று நிர்ணயம் ஏதுமில்லை. இப்படி செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆம் முதலில் ஆரியத்திடம் தோற்றுப்போன தமிழன் பின் ஆங்கில ஆதிக்கத்திடமும் தோற்றுப்போனான்.

தமிழ் மாதங்களை சரியாக கணக்கிட்டு தை முதல் நாள் எப்போது எந்த தேதியில் வருகிறதென்று தமிழறிஞர்கள் அறிவிக்க வேண்டும். அது ஆங்கிலத்தின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். இதனால் தமிழருக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது. நம் பண்பாட்டின் படி நம் மாதத்தில், நம் தினத்தில், நம் திருநாளை கொண்டாடுவதுதானே நமக்கு சிறப்பு. அதுதானே நம் இனத்தின் அடையாளமும் கூட.

சரி பொங்கல் திருநாளை யார் யார் கொண்டாடலாம்? என்று பார்த்தோமானால் இங்குதான் ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடலாம் என்றால் மற்ற மதங்களில் இருப்பவர்கள் ''தாங்கள் தமிழர் அல்லர்'' என்பதுப்போல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

ஏனெனில் மத அடிப்படையில் பார்த்தோமானால் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதுப்போல் தெரியலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லா மதங்களிலும், எல்லா மதங்களின் உட்பிரிவுகளிலும் அடைபட்டு கிடப்பதால் தமிழர் திருநாள் என்பது பொதுவானதாக இருந்த போதிலும் தமிழன் தான் சார்ந்த மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதால் இத்திருநாளை கொண்டாடாமல் பொங்கலை உழவர் திருநாள் என்று ஒதுக்கிவிட்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் தமிழர், தமிழினம் என்றாலும் உழவர் தொடங்கி மற்றும் சிலரை தவிர ஒரு பெரும் கூட்டம் தானாக ஒதுங்கிக்கொள்கிறது.

குறிப்பாக பொங்கல் தினத்தன்று பொங்கல், கரும்பு, இஞ்சி, இனிப்பு என வைத்து படைப்பதை சொல்லலாம். இதனாலேயே முசுலீம்கள் மற்றும் கிருத்துவ மதத்தவர்கள் தாங்களும் ஆதித்தமிழர்கள் என்பதைனை மறந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா மதத்திலும் படைத்தல் என்பது இருக்கிறது. ஒரு சில முறைகள் தான் வேறுபடுமே தவிர மற்றபடி எல்லோரும் உணவு பொருளை வைத்துதான் படைப்பார்கள். இது வரை எந்த கடவுளும் திண்றதில்லை, இவர்களும் கொடுத்ததில்லை. மேலும் இவர்களின் படைத்தல் என்பது மதரீதியானது, பொங்கல் திருநாள் என்பது தம் இனத்தை அடையாளப்படுத்துவது.

பொங்கல் திருநாளில் படைத்தல் என்கிற முறையும் கூட ஒரு நன்றி நவிழ்தல் தானே தவிர இதனால் அந்த மதத்திலிருந்து விலகிவிட்டதாக பொருளில்லை, இணைவைத்துவிட்டதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரி படைத்தல் என்பதை ஒதுக்கிவிட்டு பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதா என்ன?

எல்லா தமிழரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம், கரும்பு வாங்கலாம் அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் வைத்து ஏழைகளுக்கு வழங்கலாம். கறி வெட்டி கொடுத்தால் தான் திருநாளா! கரும்பு வெட்டி கொடுத்தாலும் திருநாள்தானே. இதனால் ஏழை பணக்காரன் என எல்லோரும் ஒரே நேரத்தில் பசியாரலாமே. அப்படியே திருநாளையும் கொண்டாடியது போலும் இருக்குமே.

இதுதானே உண்மையான மனிதாபிமானம், இதுதானே தமிழர் அடையாளம், இது தானே சமத்துவம், இதுதானே சகோதரத்துவம் இப்படியே போனால் எங்கே வரப்போகிறது மதச்சண்டைகள்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் திருநாளை பொதுவாக கொண்டாடினால் அதைவிட சிறப்பு தமிழருக்கு வேறன்ன இருக்கமுடியும்.

எனவே மத அடிப்படையிலான நமது வறட்டு பிடிவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றை குலவையெடுத்து பாடுவோம். அப்படியே பொங்கல் திருநாள் உழவர் திருநாள் மட்டுமல்ல அது தமிழர் திருநாள் என்று உலகின் அனைத்து தமிழரும் கொண்டாடுவோம். இத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

இனத்தால் நாம் தமிழர்கள்
இணைவோம் இன்று பொங்கல்

1 comment:

  1. இந்தப் பதிவு மறுமொழிகளற்று இருப்பது வருத்தமளிக்கிறது.

    ReplyDelete