Friday, July 11, 2008

தமிழ்ச் சிறகு

ஆறிலிருந்து தொடங்குமென்பார் வாழ்க்கை வேரிலிருந்தே தொடங்குதெங்கள் திராவிட தாய்கள் புகட்டிய தமிழுணர்வு.

திகு திகுவென எரியும் நெருப்பில் குளிரவும் செய்யும், கட்டி பனியினுள் வீரம் குத்தி உருகவைக்கவும் முடியும்: என்கிறதான இன உணர்வுமிக்கது எம் தமிழினம்.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியுமாம்’’ இதுவே எம் தமிழ் மரபிற்கு தாமதம், விதையிலேயே தெரிந்துவிடும் எம் செரிவுமிகுந்த தமிழ் மறத்தியரின் புலி வீரம். அகல அகல கிளை பரப்பி விழுது முலைகளால் வேருக்கு பாலூட்டும்: பின் குருதியாகி மேலேரும்; இலைக்கு இலை, கிளைக்கு கிளை தாவி நுனிவரை செல்லினும் மண்ணின் தொடர்பராத எம் தமிழினத்திற்கு எடுத்துக்காட்டாக தானே அடிப்பெருத்த ஆலமரங்கள்.

அத்தகையதொரு தமிழ்வேரினில் குளிர குளிர கவிதை விளைவிக்கும் புரட்சிக் கவிஞனின் புதுவை மண்ணில் புதுவகை மண்ணாய், விதையாய் நாளை விண் முட்ட கிளைபரப்பும் மரமாய் வெடித்து கிளம்பிய தமிழ்ச் செடிதான் மகள். கு. அ. தமிழ்மொழி.

கவிதைகள் எமக்கு எழுத்து மொழி மட்டுமன்று, பேச்சு மொழி மட்டுமன்று
இன மொழி என்பதின் இளைய எடுத்துக்காட்டுதான் இந்த தமிழ் மொழி. அப்பா புதுவை சீனு.தமிழ்நெஞ்சன், சித்தப்பா சீனு தமிழ்மணி என தமிழுணர்வு எரிமலைகளின் இலக்கியச் செடி இந்த தமிழ்மொழி. வயது சிறிதெனினும் வரம்புகளற்று விரிந்துக்கிடக்கிறது இவரது வானம்; அதில் சுருங்கி அடைப்பட்டுக்கிடக்கிறது இவரின் சிறிய ”சிறகுகளின் கீழ் வானம்’’ நம் தலைக்கு மேலே இலக்கியமாக…


உறிஞ்சப்பட்டது
நிலத்தடி நீர்
பாலையானது நானிலம் -என

அய்க்கூ பாடும் போது வியப்பிற்கு பதில் ஆர்வம் கூடுகிறது நமக்கு. ஆம் இன்னும் உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய குவிந்து கிடக்கிறது தமிழனிடத்தில் என்று…

பாசிசங்களை பந்தாடும் கருவிகளை பெற்றெடுப்பதே நாங்கள் தான் என; களத்தில் கால் உந்தி எதிரிகளின் முகத்தில் எத்துகிற தங்கைகளின் அணிவகுப்புகளாய் இவரது அய்க்கூ கவிதைகள்.

ஆயுத உற்பத்தியில்
மூன்றாம் இடம்
புத்தன் பிறந்த மண் -என்கிற

அய்க்கூவை புத்தன் படித்திருக்க வேண்டும்! இந்(திய)த மண்ணில் பிறந்ததற்காக போதி மரத்திலேயே தற்கொலை செய்துக் கொள்வான். இங்கே ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்து என்கிறது பாரதிய பாசிசங்கள்.

நிறைய பரிசுகள், நிறைவான பாராட்டுகள், அடக்க முடியாத ஆர்வத்தின் வெளிப்பாடாய் சிறுவயதிலேயே தமிழின சாலைப்போராடத்தில் சிறைவாசம் என்று படர்ந்து விரிகிறது தமிழ் தொண்டு.

இவரின் மொழி ஆர்வத்திற்கு வடிகாளாய் அன்றாட காலை வணக்க வேளையில் தமிழ்மொழியின் திருக்குறள் மற்றும் விளக்க உரையுடன் தொடங்குகிறது பள்ளிப்படங்கள்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஞாயிறு உதிக்கிறதோ இல்லையோ! தமிழ்மொழியின் அய்க்கூ வாங்கிய அதிர்வில் புதுவை தமிழ் ஆர்வலர்களின் அலைபேசி அலரும் அப்படி அலறியதில்

எதிப்பு
33 விழுக்காடிற்கு
சமவுரிமை 50 விழுக்காடு என

விடிய வைக்கிறது பெண்ணின விடுதலையை. அத்தனை சீக்கிரம் தருவார்களா என்ன! ஒதுக்கீடு..

ஆதி தமிழினத்தையே ‘’ஒதுக்கிவிடு’’ என்கிற பார்பனியமா தரவிடும்! பெண்ணிற்கு விடுதலையை. எமக்குதர இவன்கள் யார்? நாமே எடுத்துக்கொள்வோம் என புறபட்டதல்லவா எம் பெண்ணினம்; தமிழினம்.

களப்போராளி தங்கைகளின் வரிசையில் தமிழ்மொழி ஒரு கவிதை போராளி ஆம்.. இவர் பங்கிற்கு இவர் கவிதைகளால் சீறுகிறார். சீற சீற வெடித்து சிதறுகிறார்கள் எதிரிகள். சிதர சிதர விடிகிறது காலம் விடுதையாக

உலக பெண் கவிஞர்களில் தமிழ்மொழிதான் இளையவராக இருப்பார் என எண்ணுகிறேன். ஆயினும் கவிதைகளில் முதிர்ச்சி கொப்பளித்து நம்மை மூச்சு முட்டவைக்கிறது. தமிழ்மொழி போன்ற இளைய பெண் கவிஞர்கள் இன்னும் நிரைய வரவேண்டும் என்பதே நம் ஆர்வம், அதற்கு இரத்தின கம்பளமாய் புதுவையில் பெண்களால் இயக்கப்பட்டுவரும் ‘’இலக்கியம்’’ புத்தக விற்பனையகத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

வளரும் கவிஞர்கள் வரிசையில் கு.அ.தமிழ் மொழியும் சிறந்து விளங்க நாம் என்றும் தமிழ்த் தூவி வாழ்த்துவோம்.

தாய்மையுடன்

கவிமதி.