Saturday, August 23, 2008

துபாயில் 'முடி உதிர்வது முதல் மூளை உதிர்வதுவரை'

துபாயில் 'முடி உதிர்வது முதல் மூளை உதிர்வதுவரை' - கவிமதி

on 23-08-2008 14:37

Favoured : 13

Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை


பக்கம் 1 / 2
"எட்டுத்திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் கொணர்திங்கு சேர்ப்போம்" என்கிற அறிவுரைகேட்டு தங்கள் நாடுகளை துறந்து, தங்கள் குடும்பங்களை பிரிந்து உலகின் எட்டுதிக்கென்ன எழுபது திக்கிலும் சென்றுள்ள நாமெல்லாம் இதுவரை எவ்வளவு செல்வங்கள் சேர்த்தோம் என்று கணக்கு பார்ப்பதற்கு முன்னால் வெளிநாடுகள் என்கிற போதையால் நாம் இதுவரை எவ்வளவு இழந்தோம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை விரல் விடவாவது நமக்கு துணிவிருக்கிறதாவென்றால் அதே விரல்களுடன் சேர்ந்து கைகளும், உடலும் நடுநடுங்குகிறது என்பது நாம் நம் தலையிலடித்து ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை.

அதே வேலையில் வெளிநாடுகள் என்கிற பட்டியலில் மற்ற நாடுகளை தவிர்த்து அதிகம் மக்கள் படையெடுக்கும் நாடுகள் என்று நாம் சொல்வது வளைகுடா நாடுகள்தான். அதிலும் வளைகுடா நாடுகள் என்றதும் நம் அனைவருக்கும் பட்டென்று நினைவிற்கு வருவதும் புழக்கத்தில் இருப்பதும் ஒரே பெயர்தான் அது துபாய்.
தற்போதைய துபாயின் வளர்ச்சியென்பது உலகத்திலேயே தான் எல்லா விசயத்திலும் முதன்மைபெற வேண்டுமென்பதே. எனவே வழக்கம்போல் வளரவேண்டுமென்று களத்தில் இறங்குகிற நாடுகள் முதலில் மனிதாபிமானம் என்கிற சொல்லை தூர தூரமாக விலக்கிவைத்துவிடும். இதே நிலை துபாயிலும் நிகழ்ந்து வந்தது. எத்தனை நெருப்பாக தங்கள் பூமி கொதித்தாலும் தங்களின் கட்டுமான பணி எந்தவிதத்திலும் பாதித்து விடாமல் தொழிலாளர்களை வதைத்து வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது.
கடந்த பல ஆண்டுகளாக பாலைவனத்தில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு பகல் வேலையென்பது எத்தனை மரண விளையாட்டு என்பது நானும் அனுபவித்த ஒன்று. ஏனெனில் குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இந்த மூன்று மாதங்களில் துபாயின் வெய்யில் நேரடியாக நமது தலையில் இறங்குவதை அனுபவித்து வருகிறோம்.
இதை மிகத்தெளிவாக துபாய் வாழ் தொழிலாளிகளின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் "ஒரு குவளையில் தண்ணீரை பிடித்து அதில் ஒரு தேயிலை பையை (Tea bag) போட்டால் உடனடியாக தேனீர் ஆகிவிடும்" என்பது இங்கு மிக மிக சாதாரணமான வார்த்தை. எனவே பாலைவனத்து மண்தான் சூடாக இருக்குமென்று வளைகுடா நாடுகளுக்கு வெளியில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்க இங்கு முதலில் சூடாவது தண்ணீர்தான். ஏனெனில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நம் அறையின் குழாயில் வடியும்வரை கடந்துவரும் பாதை அனைத்தும் சூடு...சூடு...சூடு... எனவேதான் இங்கு வேலைக்கு வரும் பலருக்கு "முடிஉதிர்தல் முதல் மூளை உதிர்வதுவரை" சர்வசாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது.
இப்படி தொழிலாளர்களை பிழிந்தெடுத்து தங்கள் நாடுகளை உலகின் முதல் தரத்திற்க்கு நகர்த்திக் கொண்டிருக்கும் வேலையில், தொழிலாளர்களுக்கு வெயில் காலங்களில் ஓய்வெடுக்க ஏதாவது செய்தாக வேண்டுமென்று தோன்றியதோ! என்னவோ கடந்த ஆண்டு முதல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பகல் வேலைகளில் சுமார் 12 மணி முதல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று சட்டம் கொண்டுவந்தது துபாய் அரசு.
வழக்கம்போல் தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டமென்றால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன அதில் கொஞ்சம் மாற்றம் செய்துக்கொண்டால் யாருக்கு தெரியப்போகிறது என்று பல நிறுவனங்கள் ( பல புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுவது) சட்டம் இருக்கட்டும் நீங்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருங்கள் என்று சொல்லி அல்லது மிரட்டி வேலை வாங்கிவந்தன. தற்போது இச்சட்டம் மீரப்படுகிறதாவென கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணித்ததில் பல நிறுவனங்கள் பல்லிலித்தன. அப்படியும் இந்த இடைவேளையை ஈடுசெய்யவேண்டி பல 3 மணிக்குமேல் கூடுதல் நேரமாக இரவு 10, 12 மணிவரை வேலைசெய்து ஈடுசெய்கவென கட்டளை இடவும் தயங்கவில்லை.
அதே வேலையில் தொழிலாளர்களுக்காக!!! நல்லயிருந்தால்தானே நாளைக்கு வேலை நடக்கும் என்று... முழுமையான ஓய்வுதான் தரவேண்டுமென சட்டம் இருக்கிபிடிக்க அழுதுகொண்டே சம்மதித்த நிறுவனங்கள் அப்ப அப்ப சட்ட மீரல்களும் செய்துகொண்டுதானிருக்கின்றன.
சமீபத்தில் நம் செவிக்கு வந்ததும், அனுபவத்தில் கண்டதிலிருந்தும் சில...


மதிய வேலையில் முறைப்படிதொழிலாளர்களின் அறைக்கு கொண்டுவிட வேண்டுமென்றாலும் போகவர போக்குவரத்து நெரிசல்.. அவர்கள் இங்கேயே ஓய்வெடுக்கட்டும் என்கிற முதலைக் கண்ணீரில் ஒரு உள்குத்து என்னவெனில் காலையில் வருவதும் மாலை திருப்புவதும் மட்டுமிருந்தால் ஆகும் ஊர்தி எரிபொருள் விரயத்தைவிட மதியமும் போகவர ஒரு கூடுதல் நடை என்றால் எரிபொருள் அதிகமாக செலவாகும் என்கிறதென்பதுதான் அது. இதனால் தொழிலாளர்கள் அத்தனை வெயிளிலும் சாலை ஓரம், ஈச்சமர நிழல்!? என ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கென வேலைசெய்யும் இடங்களிலிலேயே அல்லது கட்டடத்திலிலேயே கூடாரமோ அல்லது ஒரு அரையிலோ குளிர்மியை(A/C) இயங்கவைத்து ஓய்வெடுக்க செய்யலாம் ஆனால் அதெல்லாம் நிறுவனங்களுக்கு தோன்றாது. சில இடங்களில் வெய்யில் மிகுதியால் தொழிலாளர்களுக்கு மயக்கம் வந்துவிடக்கூடாது! என்று காலையிலும் மாலையிலும் குலுக்கோஸ் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இன்னும் சில உள் கட்டிடங்களில் சத்தம் போடாமல் வேலை செய்துகொடுத்தால் கூடுதல் வேலைக்கான (ஓவர் டைம்) கூலி வழங்கப்படும் என்றும் ஆசைகாட்ட தவறவில்லை.
இத்தனை இடர்களிலும் தாங்கள் எப்படியேனும் தங்களுக்கு சோறுபோடும் முதலாளிகளை உலக தரத்தில் முதலாவதாக உயர்த்தவேண்டுமென்று வழக்கம்போல் வியர்வையை பாலைவனத்திற்கு வார்த்துவிட்டு தங்களின் குடுப்பத்தினர் ஒரு வேலையாவது சாப்பிடட்டும் என்று பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் மே தினங்களை நினைவாக மறக்காமல் கொண்டாடுவோம்.
தொழிலாளர்களுக்காக இச்சட்டம் இயற்றி நடைமுறை படுத்திக்கொண்டிருக்கும் துபாய் அரசை நாம் பாராட்டுவோம். இதிலிருந்து பார்த்தாவது மற்ற வளைகுடா நாடுகளும் பின்பற்ற வேண்டுமென்பதுதான் நம் ஆவல்.
தங்கள் பார்வைக்கு...