Wednesday, October 21, 2009

ஈசல் அல்ல எங்கள் திருமா

தமிழனை பிறந்ததிலிருந்து ஏமாற்றி வரும் திமுக சமீபத்தில் தன் கூட்டனி கட்சிகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு (ஈழத்திற்கு அல்ல)அனுப்பியது இப்போதைய சுடான ஏமாற்றுவேலை என்பதை அனைவரும் அறிந்தோம். இதில் காங்கிரசார்களை எவனும் கேள்விக்கேட்க மாட்டான் ஏனெனில் அவன்கள் அதற்கு தகுதியற்றவன்கள் என்பதை அறிந்தேவைத்திருக்கிறோம். அதேப்போல் கருணாநிதிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பதில் பிறந்த கனிமொழியையும் எவனும் கேள்விக்கேட்க மாட்டான் அவரும் அப்பா சொன்ன்ப்படி நடித்துவிட்டு வந்திடுவார் என தெரியும். எஞ்சியிருப்பது எங்கள் தலைவர் திருமா மட்டுமே.

திருமாவின் ஒவ்வொரு அசைவையும் கேள்விகேட்பதால் எங்களுக்கு பெருமைதான். இதுவே தமிழன் திருமாவளவன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. இருப்பினும் சமீபத்தில் அதாவது கருணாநிதி எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிருத்தி தன் சாணக்கிய திருட்டு விளையாட்டிற்காக இலங்கை இட்லர் இராசபக்க்ஷேவிடம் மன்றாடி அனுமதிபெற்று தன் சார்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து அதற்கு கூட்டணி கட்சிகளின் குழு என்கிற அடைமொழியை வழங்கி. அவர்களை தனியே அழைத்து அங்கே எப்படி விசுவாசமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்கிற கதை, வசனங்களையும் எழுதிக்கொடுத்து அனுப்பினார் என்பது வெட்ட வெளிச்சம். இதில் எவருக்கும் மாற்றுக்கருத்திலை என்பதையும் அறிவோம்.

அதிலும் குறிப்பாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இந்தக்குழுவில் சேர்த்தது கருணாநிதியின் ஒப்பற்ற சாணக்கிய கயவாளித்தனத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. கருணாநிதி எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாகவே நடந்தது எனலாம். ஏனெனில் குழுவின் முழுகட்டுப்பாட்டையும் தனது கையில் வைத்திருந்தாலும் தமிழனின் எல்லா கேள்விக்கணைகளும் திருமாவை நோக்கியே திரும்பிதால் கருணாநிதி உள்ளுக்குள் துள்ளிகுதித்து கைத்தட்டிக்கொண்டிருக்கலாம்.

சமீபத்தில் ராஜபக்சே நம் தொல்.திருமாளவனை முகத்துக்கு நேராகவே, இவர் பிரபாகரனின் நண்பர் இவர் அன்று பிரபாகரனோடு இருந்திருந்தால், தொலைந்திருப்பார் என்று கூறியிருக்கிறான். அது அவனின் நாகரீகம்,அவனிடம் நாம் இதற்குமேல் எதிர்ப்பார்க்கக்கூடாது. சரி அவன் அப்படிக்கூறியதற்கு இவர்கள் எதிர்ப்பார்த்தது என்ன? உடனே திருமா எழுந்து அவனின் சட்டையை பிடித்து பளார் பளார் என்று அறைந்திருக்கவேண்டும் அல்லது இப்போது இங்குதானே இருக்கிறேன் முடிந்தால் கையைவைத்துப்பார் என்று "பாபா" பாணியில் கத்தியை வீசியிருக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தன்னால் குழுவிற்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது, வந்தால் எதிர்காலத்தில் எந்த குழுக்களையும் அனுமதிக்க மாட்டான்,மேலும் குழுவின் தலைமைக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று அவன் சொன்னதை புன்னகையுடன் ஏற்று தன்னால் எந்தவித பாதிப்பும் குழுவிற்கு வந்துவிடக்கூடாது என்று சமயோஜிதமாக நடந்துக்கொண்டது இவன்களுக்கு பெரும் தவறாக பட்டுவிட்டது.

அப்படியே திருமாவளவன் ஏதாவது உணர்ச்சிவயப்பட்டு கூறியிருந்தால் அதனால் ராசபக்ஷே கோபமடைந்து குழுவை யாரையும் சந்திக்கவிடாமல் வெளியேற்றியிருந்தால் திருமா இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார், இல்லாவிடில் இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று அப்போதும் திருமாவை திட்டுபவன் இதே தமிழன் தான். திருமாவளவன் அந்த குழுவில் போகாமலேயே இருந்திருக்கலாம் என்பதே நேர்மையாளர்களின் கருத்து,கருணாநிதியின் வற்புறுத்தலுக்கிணங்கியே அவர் போயிருக்கலாம், இந்த குழுவால் முகாம் தமிழருக்கு எதுவும் நல்லது நடக்காது என்பதும் திருமாவுக்கு தெரியும்,ஆனால் முகாம் மக்களை சந்திக்க இந்த குழுவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார் எனபதை எவரும் உணரவில்லை, ஏனெனில் திருமாவை நோக்கி எவனும் கேள்விகேட்கலாம் திருமா என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரை மாதிரி. எனவேதான் தங்கள் அரிப்புகளை சில பத்திரிக்கைகள், இணைய தளத்திலும் கூட சிறுப்பிள்ளைத்தனமாக கேலி செய்தும்,கேலிப்படங்களை வெளியிட்டும் சொரிந்து மகிழ்வதை காண்கிறோம்.

திருமாவளவன் என்ன ராசபக்ஷே அரசுடன் மோத தரைப்படை, விமானப்படை, கப்பற்படை,காலாற்படையோடவா போனார்? அல்லது குறைந்த அளவு அவன் சட்டையை பிடித்து கேள்விகேட்பேன் என சபதம் ஏற்றுவிட்டுப் போனாரா? உண்மையான அக்கறையோடு போன ஒரேயொரு அரசியல்வாதி திருமா தான்.

எனக்கு ஒரு கேள்வி, அப்படியே திருமாவை நோக்கி ராசபக்க்ஷே கூறினான் என்றால் குழுத்தலைவன் என்கிற முறையில் பாலுதானே அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கவேண்டும். அவர் அப்படி தெரிவிக்காததை யாராவது கேள்விக்கேட்டானா? இல்லையே மாறாக இன்ப உல்லாச சுற்றுலா போனதுப்போல் ராசபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தி, பல் இளித்து, ராசபக்சேவை கட்டிப்பிடித்து, பரிசுப் பொருட்களை கொட்டுத்து, வாங்கி கொண்டார்களே. இத்தனை செயல்களிலும் திருமா தள்ளியே நின்றுக்கொண்டிருக்கிறாரே அதை எவனாவது எழுதினார்களா? குழுவில் வந்த ஒருவரை அவமரியாதை செய்தால் அது குழுவையே அவமரியாதை செய்தததாக தானே அர்த்தம் இதை எவனாவது கேட்டானா?

மேலும் குழுவில் வந்த பத்து பேரை பற்றி பயணத்திற்கு முன்பே தகவல்களை கேட்டு வாங்கியிருக்கிறான் ராசபக்சே. குறிப்பாக திருமாவை மட்டும் தீவிரமாக கண்காணிக்க தனது கூலிப்படைக்கு உத்தரவிட்டிருக்கிறான், இதுவே அவரின் பயண வெற்றிதானே. அதையும் மீறி அவர்கள் குறிப்பிட்ட முகாம்களில்லாமல் திருமாவே ஒரு சில முகாம்களின் பெயர்களைச் சொல்லி பார்க்கவேண்டும் என்றதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறதே, அதை எவனாவது எழுதினீர்களா? தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிலரிடம் பேசியதாகவும், முகாம் மக்கள் சொல்ல இயலா துயரத்தில் இருப்பதாக்வும் அறிந்து சொன்னாரே அதை எவனாவது எழுதினீர்களா?

திருமாவை ராசபக்ஷே அவமான படுத்தியதாக கூறி கூறி வியாபார ஊடகங்களும், தன்னல அரசியல்வாதிகளும், தொடர்ந்து அவரை அவமானப்படுத்துவதை பொருக்க இயலாது. ஏனெனில் கருணாநிதியை அவமான படுத்தினால் அது ஒரு கட்சிஎன்கிற எல்லைக்குள் அடங்கிவிடும் அவருக்கென்று எந்த ஒரு இனமும் கிடையாது,ஆனால் திருமா என்பவர் ஒரு பெரும் இனத்தலைவர் மற்றுமன்று ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக எந்த வேறுபாடும் இல்லாது,கூட்டணி கட்சிகளில் இருந்தாலும் தன் கருத்துகளை துணிந்து எதிர்ப் பதிவுசெய்பவர் உண்மையில் அவரை ராசபக்ஷே அப்படி சொல்லியத்தற்கு நமது பதிலடியாக நம் எதிர்ப்பை கண்டிப்பாக காட்டியிருக்கவேண்டும்.

அவன் திருமாவை நோக்கி அப்படி சொல்லவில்லை தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரையும் நோக்கியே சொல்லியிருக்கிறான் நீங்கள் அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள் நீங்கள் அனைவரும் களத்தில் நின்றிருந்தாலும் நான் அனைவரையும் கொண்று குவித்திருபேன் அப்படி செய்திருந்தால் இன்று எனக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்கிறதுதானே அந்த நிகழ்வில் ராசபக்ஷேவின் கிண்டல்! இதை எவனாவது பதிவு செய்தீர்களா?

உண்மையில் திருமாளவன் என்ற ஒற்றைத் தமிழனுக்கு எந்த அவமானமும் ராசபக்ஷேவால் ஏற்பட்டுவிடவில்லை, அவர் ஈசல் அல்ல இரும்பு, அது நம் அனைவருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று கருதாமல் இருப்பதுக்கூட இன ஒதுக்குதல் என்றே ஆகிறது. சாதி வெறியென்றே ஆகிறது. இதே கனிமொழிக்கு நேர்ந்திருந்தால் பாலுவை கருணாநிதி பிய்த்து எடுத்திருப்பார், திமுக தமிழனும் கோவணங்களை உறுவியதுப்போல் வானுக்கும், பூமிக்கும் குதித்திருப்பார்கள் அப்போதும் திருமாவின் தொண்டர்கள் ராசபக்ஷே கொடும்பாவி எரித்திருப்பார்கள், சன்,கலைஞர்,மெகா டீவிகள் ஆட்டம் பாட்டங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு கண்டன காட்சிகளை நடத்தியிருக்கும் "திருமா" என்பதால் அத்தனையையும் கண்டுக்கொள்ளாமல் சொகுசாக ஒதுங்கிகொண்டார்கள் அவ்வளவுதான்.

இதைவைத்துக்கொண்டே தமிழகம் ஏன் உலகம் முழுவதும் ராசபக்ஷே கொடும்பாவி எரிப்பு உள்பட முடிந்தவரை நம் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கலாமே.அப்படி எதையுமே செய்யாமல் திருமாவை மட்டும் குறிவைத்து கேள்விகளை எழுப்பி பிரச்னையினை திசைத்திருப்பிவிட்டால் போதுமா. இப்படி திசை திரும்புதலைதானே திமுக விரும்புகிறது, காங்கிரஸ் விரும்புகிறது அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா? சரி இருதியாக ஒன்று இலங்கை சென்று வந்த குழுவின் சார்பாக முழு அறிக்கை வெளிவந்துவிட்டதா? என கேட்போம்.இதுவரை திருமாவை தவிர யாரும் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கவில்லையே புரிகிறதா? இல்லை புரியவில்லை என கண்டுக்கொள்ளாமல் இருக்கலாமா?

திருமாவளனின் அரசியலை ஈழத்தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் உணரத்தவறி இருப்பது தமிழகத் தமிழன் தான். அவனும் விரைவில் உணர்வான் என்கிற நம்பிக்கையில்...

உங்கள் கவிமதி