Friday, April 16, 2010

புரட்சி சிறுத்தை அம்பேத்கர் அமைப்பின் நிகழ்வு

காலம் பல காயங்களை மாயமாக ஆர செய்திருக்கிறது. ஒருங்கிணைந்த மதசார்புடைய இந்திய கட்டமைவில் சிறுபான்மையினருக்கெதிராக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிகார ஒட்டுக்குமுறைகள், நாடு விடுதலை அடைந்துவிட்டதாக அதிகாரவர்க்கம் அறிவித்த காலம் முதல் இன்றுவரை குறையவில்லை. அதிலும் குறிப்பாக தலித்துகளுக்கான உரிமை போராட்டத்தில் மற்ற சாதியினரும், மதத்தினரும் ஒரு சில வேலை கண்டுக்கொள்ளாமல் விடுவதும் நடந்துக்கொண்டுதானிருக்கிறது.

இப்படிபட்ட மெளனமானது தலித்துகள் அல்லாது தங்கள் மீதும் வன்முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உண்டு என்பதனை உணர்ந்தும் மற்ற சிறுபான்மையினர் ஏனோ சில இடங்களில் நடைபெறும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை, அவமதித்தலை,அடக்குமுறைகளை எதிர்த்து ஒரு கலகக்குரல் கொடுக்காதது, பார்ப்பனியத்தை தன்னக்கத்தே ஊரல்போட்டுவிட்டு பார்ப்பானை விரட்டுகிறேன் என்பதை போன்ற போலி மிதவாதத்தையே காட்டுகிறது.

இச்சூழலில் தலித்துகளுக்காக தலித் அல்லாதவர்களும், அமைப்புசாரா இயக்கவாதிகளும் பல வடிவங்களில் போராடிக்கொண்டிருக்க தங்களின் மீதான சமூக ஒதுக்குதலுக்கு எதிராக தலித்துகள் ஒருங்கிணைந்து தொடர்போராட்டங்களை நடத்தியே ஆகவேண்டுமென்ற கட்டாய அரசியலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துசெல்லவும், தங்களை சீர்படுத்திக்கொள்ளவும், கடந்தகால நிகழ்வுகளை நினைவுக்கூர்ந்து, அச்செயல் மேலும் தொடராமல் இருக்க ஒரு அரசியல் சார் நிகழ்வுகளை நடைபெறச்செய்துக்கொண்டே இருந்தால் மட்டுமே நாம் ஒர் அளவாவது அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டே இருக்க இயலும் என்பதை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டதே அம்பேத்கர் சர்வதேச அமைப்பு (www.ambedkarmission.org)

இந்த அமைப்பின் ஒரு கிளையானது அய்க்கிய அரபு அமீரகம் அபுதாபியில் கடந்த பல ஆண்டுகளாக தீவிரமாக இயங்கிவருதையும், அவற்றின் நிகழ்வுகளையும் நாம் கடந்த ஆண்டுகளில் செய்தியாக வெளிட்டுவருகிறோம்.

இன்று 16-04-2010 அமீரகத்தின் ஒரு பகுதியான அஜ்மானில் புரட்சி சிறுத்தை அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வழக்கம்போல் பல மாநிலத்தை சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்து நடத்தபட்டாலும் கூடுதலாக பஞ்சாபிகள்தான் இதில் உறுப்பினர்களாகவும், ஆர்வலர்களாகவும் செயல்பட்டுவருகின்றனர்.

தலித் அரசியலில் தந்தை பெரியாரின் தொண்டும், அதை தொடர்ந்து தோழர். தொல்.திருமாவளனை தலைவராக கொண்டு செயல்படும் "விடுதலை சிறுத்தைகளின்" தொண்டும் அளப்பரிய இருப்பதை உணர்ந்த அமைப்பினர் கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் நம்மையும் நிகழ்வில் கலந்துக்கொள்ள பணித்திருந்தனர்.

அவர்களின் அழைப்பை ஏற்று துபாய் தாய்மண் வாசகர் வட்டம் ஒருங்கிணைக்க விடுதலைச் சிறுத்தைகள்,பெரியாரியல் தோழர்கள், தமிழ்த்தேசிய அமைப்பு, அபுதாபி சர்வதேச அம்பேத்கர் அமைப்பு சார்பாக தோழர்கள் சே.ரெ.பட்டணம் மணி, முத்தமிழ்வளவன், தாமரைசெல்வன், பாரதி,அசோகன், சங்கர்ராஜ், சதீஷ், கோபாலகிருஷ்ணன், இளங்கோவன், நண்பன், கிருஷ்ணக்குமார், சிவபெருமால், மற்றும் கவிமதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கனடாவிலிருந்து திருமதி.கமலேஷ் கலந்துக்கொண்டு தனது அழ்ந்த கருத்துக்கள் அடங்கிய தலித்துகலுக்கான அரசியலை முன்வைத்த விதம் அனைவரையும் கூர்ந்து கேட்க வைத்ததுடன், பல விவாதங்களை தலித்துகள் தங்களுக்குள்ளாகவே நிகழ்த்திக்கொள்ளும் விதமாகாவும் அமைந்தது. குறிப்பாக தலித் இடஒதுக்கீடு, பெண்களுக்காக 33விழுக்காடு இடஒதுக்கீட்டில் சிறுபான்மை,தலித்பெண்களுக்கான முறைகேடு, புத்தரையும் அம்பேத்கரையும் புரிந்துக்கொள்ளும் முறை, இந்திய மதசார்பு அரசியல் அமைவு, தலித்துகள்மீதான அடக்குமுறைகள் என பல தளங்களில் தனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

தொடந்து பஞ்சாபிகள் தங்களுக்கே உரிய முறையில் நிகழ்த்திய பண்பாட்டு நடனங்களும், அம்பேகர், புத்தர் குறித்த பாடல்களும், சிறப்பு சொற்பொழிவுகளும் என அம்பேத்கரின் பிறந்த நாளான இன்றைய நாள் ஒரு உணர்வுப்பூர்வமான நாளாக கழிந்தது.

1 comment:

  1. தொடந்து பஞ்சாபிகள் தங்களுக்கே உரிய முறையில் நிகழ்த்திய பண்பாட்டு நடனங்களும், அம்பேகர், புத்தர் குறித்த பாடல்களும், சிறப்பு சொற்பொழிவுகளும் என அம்பேத்கரின் பிறந்த நாளான இன்றைய நாள் ஒரு உணர்வுப்பூர்வமான நாளாக கழிந்தது.
    ////

    Makilchi yana seethi.. thx a lot

    ReplyDelete