Tuesday, September 21, 2010

இணையத்தமிழை இயல்புடன் கற்போம்...

ஊடகத்தில் தலைசிறந்த ஊடகமாக விளங்கிவரும் இணையத்தளம் நமது வாழ்வில் இன்றியமையாததாகிவிட்ட இக்காலச்சூழலில் நாம் பெருமை படவேண்டிய விடயம் என்னவெனில் இணையத்தளத்தில் தமிழின் ஆளுமைதான், ஆம் இன்றையச்சூழலில் தமிழில்தான் மிக அதிகமான வலைத்தளங்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் மற்றும் தனியார், அரசு சார்ந்த தளங்கள் என கிளைபரப்பி திசையெட்டும் தமிழ் வளர்ந்தோங்கி நிற்கிறது.

"மெல்லத் தமிழினி சாகும் அந்த மேன்மொழிகள் புவிமிசையோங்கும்" என்கிற பொய் தகவல்களை புறந்தள்ளி "வெல்லத்தமிழினி வாழும் இனிவரும் மொழிக்கெல்லாம் தலைமைதாங்கும் என்கிற உண்மை ஊடகத்தின் வாயிலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இயல்,இசை,நாடகத் தமிழைத்தொடர்ந்து இனி "ஊடகத்தமிழ்" தான் உலகை ஆளும் என்கிற நிலை நோக்கி தன்னியல்பாகவே தமிழ் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. இப்படி தமிழ் தன்னை வளர்த்துக்கொண்டு தமிழரை தேடும்தருவாயில் நாமோ "டமில்" நோக்கி பயனப் பட்டுக்கொண்டிருக்கலாமா?

ஆம் உறவுகளே ஊடகத்தமிழாக இங்கே நான் முன்மொழிவது இணையத்தமிழைதான். நம்மில் ஆங்கில தட்டச்சு தெரிந்தவர்கள் பலர் உண்டு, தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் சிலராவது உண்டு இருப்பினும் இணையத் தமிழுக்கென்று தட்டச்சு முறை தனியாக உண்டு. அந்த தட்டச்சு முறையினைதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். அதன் பெயர் ஈகலப்பை என்பதாகும்.இனி ஈக்கலப்பையை நாம் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.

முதலில் நாம் ஈகலப்பை என்ற தமிழ் தட்டச்சுக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதற்கு http://www.thamizha.com/ என்கிற சுட்டியில் சென்று இதில் வலபுறத்தில் Downloads பகுதியில் பல விதமான எழுத்துமுறைக்கான மென்பொருள்கள் தறவிறக்கம் செய்ய தயாராக இருக்கும் அதில் eKalapai-anjal என்னும் எளிதில் ஆங்கிலம் வழி தமிழ் தட்டச்சு செய்யும் முறையினை தறவிரக்கம் செய்து உங்களின் கணினியில் சேமிக்கவேண்டும்.

eKalapai-anjal என்கிற தமிழ் தட்டச்சு மென்பொருளானது நாம் எளிதாக தமிழில் எழுத உதவுவது மட்டுமல்லாமல், நாம் எழுதுவதை எந்த கணினியிலும் நம் நண்பர்கள் எளிதாக வாசிக்கும் வண்ணம் தெரியக்கூடியது என்பதால் இணைய உலகில் தமிழர் அனைவரும் இம்முறையினையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

ஈகலப்பையை தறவிறக்கம் செய்து உங்கள் கணியில் சேமித்தபின் அதை Run அல்லது open கொடுத்து ஈகலப்பையை உங்கள் கணினியில் Install செய்யவேண்டும். இப்போது ஈகலப்பை இன்ஸ்டால் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாக கணினியின் வலது ஓரத்தில் கீழே அதாவது நேரம்காட்டும் இடத்திற்கு பக்கத்தில் K என்கிற சிறிய பெட்டி தோன்றும். இப்போது ஈகலப்பை பயன்பாட்டுக்கு தயாராகிவிட்டது. இனி எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ஈகலப்பையை நம் கணினியில் Microsoft Office ல் Word,Excel,Power Point போன்றவற்றிலும் இணையத்தில் மின்னஞ்சல் பயன்பாட்டிற்காக நேரடியாகவும் பயன்படுத்த இலகுவானது.முதலில் MsWordல் பயன்படுத்தும் முறையினை பார்க்கலாம்.

MsWordல் ஒருபக்கத்தை திறந்துக்கொண்டு ஈகலப்பையினை பயன்படுத்தும் முறையாக விசைப்பலகையில் Alt 2 டை அழுத்தி ஈகலப்பையினை செயல்பாட்டுக்கு தயார் படுத்திக்கொள்ளவேண்டும். ஈகலப்பையின் பயன்பாடு தேவையில்லையெனில் Alt1னை அழுத்தினால் பழையப்படி சாதாரண நிலைக்கு திரும்பும். பயன்படுத்த இலகுவானதாக இருப்பதால் இது நமது கணியின் மற்ற பயன்பாட்டினை குறுக்கீடு செய்யாது.

இதே தமிழ் தட்டச்சினை மின்னஞ்சல் (Email) பெட்டியில் செய்ய வேண்டுமெனில் Alt 2 அழுத்தி நேரடியாகவே எழுதத்தொடங்கலாம்.

இனி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழாக
எப்படி மாறுகிறது என்பதையும், தமிழின் உச்சரிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்தில் எப்படி தட்டச்சு செய்யவேண்டும் என்பதையும் கீழே விபரமாக காண்போம்.

ஆங்கிலத்தில் எப்படி ஒரு சொல்லை உச்சரிக்கிறோமோ அதேப்போலவே தட்டச்சு செய்தால் அது தமிழில் தானாக மாறிக்கொள்ளும்.

காட்டாக:
ammaa - அம்மா
aadu - ஆடு
ilai - இலை
ii - ஈ
ural - உரல்
uuthal - ஊதல்
eli - எலி
eeNi - ஏணி
aivar - ஐவர்
oddakam - ஒட்டகம்
ooNaan - ஓணான்
oLavai - ஒளவை.

இதில் சில பெரிய எழுத்துகள் வருகையில் நாம் Shift ஐ அழுத்தி அந்த எழுத்தை எழுதலாம்.

இதில் ஒரு சில விதிவிலக்கான எழுத்துகளும் உண்டு அது.
"நான்" என்பதை "waan" என்று w வை பயன்படுத்திதான் எழுதவேண்டும். இல்லாமல் naan என "n" யை பயன்படுத்தினால் "னான்" என்றுதான் வரும்.
இதை சற்று கவனித்து எழுதினால் எந்த சிறப்பாக இருக்கும்.

தமிழில் நீங்கள் எழுத நினைக்கும் எந்த சொல்லையும் அதன் உச்சரிப்பிற்கு தகுந்தார்ப்போல் அப்படியே ஆங்கிலத்தில் அடித்தால் போதும் அது தானாகவே தமிழாக மாறிவிடும்.

இவ்வளவுதான் ஈகலப்பை. இது மிகசிறப்பாக செயல்படுவதால் இன்று உலகத்தமிழர் அனைவரும். இந்த unicode முறையினை அதாவது ஒருங்குறி முறையினைதான் பயன்படுத்துகிறார்கள். இதனால் இன்னொரு பயன் என்னவெனில் நீங்கள் ஈகலப்பை அடித்து பழகுவதால் உங்களுக்கு ஆங்கில தட்டச்சு முறையும் தானாக வேகம் கூடும் என்பது என் அனுபவம்.

அப்புறம் இனி நான் இங்கே விடைபெருகிறேன், நீங்கள் ஈகலப்பையை பயன்படுத்த தொடங்குங்கள்.

நன்றி:தமிழா.காம்

No comments:

Post a Comment