Saturday, October 30, 2010

என் தெருவழியே போறவரே...

1.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
கொடுத்ததுண்டா
எங்களுக்கு
ஒரு முழம் துணி
இல்லையெனில்
ஏன்? ஏற்றுகிறீர்கள்
விடுதலை நாளன்று
தேசியக் கொடிகளை.

2.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
கண்டதுண்டா
எங்கள் சிரிப்பில்
இறைவனை
இல்லையெனில்
ஏன்? நிற்கிறீர்கள்
பூ பழங்களுடன்
பூசைக்கான
வரிசையில்.

3.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
பேசியதுண்டா
பெரும் அங்காடிகளில்
பேரம்
இல்லையெனில்
ஏன்? பேசுகிறீர்கள்
என் கூடைக்கருகில்
இத்தனை பேரம்

4.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
போட்டதுண்டா
என் தட்டில் காசு
இல்லையெனில்
ஏன்? வருந்துகிறீர்கள்
பங்கு சந்தையில்
பரிபோய்விட்டதென்று.

5.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
ஊற்றியதுண்டா
ஒரு குவளை நீர்
எங்களுக்கு
இல்லையெனில்
ஏன்? அழுகிறீர்கள்
பருவமழை
பொய்த்தமைக்கு.

6.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
கேட்டதுண்டா
மாற்று உடை
உண்டாவென
எங்களுக்கு
இல்லையெனில்
ஏன்? ஏற்றுகிறீர்கள்
வீதிக்கு நூறு
கட்சிக்கொடிகளை.

7.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
கண்டதுண்டா
எங்கள் கால்களின்
வெடிப்புகளை
இல்லையெனில்
ஏன்? கேட்கிறீர்கள்
காலணிகளுக்கும்
தள்ளுபடி.

8.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
தந்ததுண்டா
ஒரு படி அரிசி
எங்களுக்கு
இல்லையெனில்
ஏன்? நடத்துகிறீர்கள்
ஆலயங்களில்
அன்னதானம்

9.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
குடித்ததுண்டா
எங்கள் வீட்டு
கஞ்சியை
இல்லையெனில்
ஏன்? கேட்கிறீர்கள்
காவிரியில் நீர்.

10.
என்
தெருவழியே
போறவரே
எப்போதேனும்
தடுத்ததுண்டா
நீங்கள் உயிருடன்
போவதை நாங்கள்
இல்லையெனில்
ஏன்? தடுத்தீர்கள்
நாங்கள் பிணமாக
போவதைக்கூட.

3 comments:

  1. சுளீரென்று கன்னத்தில் அரை வாங்கிய குழந்தைபோல கன்னத்துக்கு பதிலாய் நெஞ்சை பிடித்துக்கொண்டு அழுகிறது மனம், அருமையான கவிதை. வாழ்த்துக்கள் கவிமதி !

    ReplyDelete
  2. Javid raiz கருத்து உண்மை .. அப்படித்தான் இருந்தது எனக்கும்

    ReplyDelete