Saturday, November 13, 2010

"சுருக்" சிறுகதைகள்= கைமாத்து.

ஆய்ஷா வைத்த தேனீரை உறிஞ்சிக்கொண்டே அவளை பார்த்து புன்னகைத்தான்.

“ஏம்மா.. நீ குடிச்சியா”

“ம்... குடிச்சேன் வாப்பா”

“உம்மா என்ன பண்ணுறாம்மா”

“தோச சுடுறாங்க வாப்பா”

“சரி போய் சாப்பிடும்மா” ஆய்ஷா நகர்ந்தாள்.

அவளை பின்னால் ஒருமுறை பார்த்துவிட்டு தான் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை தொடர்ந்தான் பாருக்.

சற்றைக்கெல்லாம் கையில் தோசை தட்டுடன் வந்த மனைவி தன் அருகே கீழே உட்காருவதை ஓரக்கண்ணால் பார்த்தவனிடம் லேசாக பேச்சை தொடங்கினாள் ஆயிஷாவின் அம்மா.

“என்னங்க நம்ம ஆயிஷாவுக்கு கல்யாண வயசாயிடுச்சுல்ல காலாகாலத்துல நல்ல பையனா பாத்து கையில் புடிச்சிக்கொடுத்திட்டா ஒரு கடமை முடியுமுல்ல”

“ம் பாத்துட்டுதான் இருக்கேன் மேலத்தெரு சேக்குவாப்பா வீட்டு பையன் இன்னும் இரண்டுமாதத்தில் சவுதியிலிருந்து வரானாம் பேசி முடிக்கலாமான்னு பாக்கேன்”

ஒரு பதட்டத்துடன் அவனை பார்த்தவள் “என்ன அந்த பையனா? என்றாள்.

“ஏன் அவனுக்கென்ன”

“என்ன நீங்க அவன் அய்ந்தாம் வகுப்புப்போட படிப்ப முடிச்சிபுட்டு ஊர் சுத்தினதாலதானே அவன சவுதிக்கு புடிச்சி அனுப்பினாக.
நம்ம ஆயிஷா பொறியியல் படிச்சவ அவளப்போயி அவனுக்கு கட்டிவச்சா சரிவருமா?”

மனைவியை கிண்டலாக பார்த்தவன் “என்ன என்னை குத்திக்காட்டுறியா நீ படிச்சி என்னத்த புடுங்குன”

“இல்லங்க அப்ப எதுக்கு படிக்கவைச்சோம்னு...?

“படிக்கவைச்சிட்டா உடனே அதுக்குத்தகுந்த மாப்பிள்ளைதான் தேடனுமா என்ன? நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி அமைந்தா போதும். அவள படிக்கவைச்சது அவ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்குறத்துக்கும், கணவனுக்கு கடிதம் எழுதுறத்துகும் பயன்பட்டா போதுமானது”

“ஆமா இந்த காலத்துல யார் கடிதமெல்லாம் எழுதுற குழந்தைகள வளர்க்க படிப்பெல்லாம் ஒன்னும் தேவையில்ல. இவகளுக்கு ஓசியில நல்ல படிச்ச வேலைக்காரி வந்தாபோதும்” தனக்குள் பொங்கி எழுந்த வார்த்தைகளை தோசையோடு சேர்த்து விழுங்கிவள் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. கணவனுக்கு தெரியாமல் அதை முந்தானையில் துடைத்தாள்.

சில நாட்களில் ஆயிஷாவிற்கு திருமணம் நடந்தேறியது. குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக ஊரில் பேசிக்கொண்டார்கள்.
வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த கணவனிடம் குடையை கொடுத்துக்கொண்டே ஆயிஷா சொன்னாள்.

“என்னங்க நம்ம புள்ளைக்கு நல்ல கணவனா பாக்க சொல்லுங்க. நம்ம புள்ள அளவுக்கு இல்லேண்னாலும் ஒரளவு படிச்ச மாப்பிளையா பாக்கச்சொல்லுங்க”

மனைவியை கிண்டலாக பார்த்தவன் “என்ன என்னை குத்திக்காட்டுறியா நீ படிச்சி என்னத்த புடுங்குன”

“இல்லங்க அப்ப எதுக்கு படிக்கவைச்சோம்னு...?

“படிக்கவைச்சிட்டா உடனே அதுக்குத்தகுந்த மாப்பிள்ளைதான் தேடனுமா என்ன? நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி அமைந்தா போதும்.
அவள படிக்கவைச்சது அவ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுக்குறத்துக்கும், கணவனுக்கு கடிதம் எழுதுறத்துகும் பயன்பட்டா போதுமானது”.

சில நாட்களில் ஆயிஷாவின் மகளுக்கும் திருமணம் முடிந்தது. அவளும் மகிழ்ச்சியாக குழுந்தைகுட்டியுடன் வாழ்வதாக பேசிக்கொண்டார்கள்.

பின்பொருநாள் ஆயிஷாவின் மகள் கணவனிடம் லேசாக பேச்சையெடுத்தாள்.

என்னங்க நம்ம பொண்ணுக்கு நல்ல படிச்ச பையனா பாருங்க...

கதையின் முதல்வரியில் அவர்களின் உரையாடல் தொடங்கியது.

No comments:

Post a Comment