Sunday, November 14, 2010

தாய்மை நிறைந்த கவிதைகள்

நிலவு ததும்பும் நீரோடை/மணிமேகலை பிரசுரம் வெளியீடு.
பாசிலா ஆசாத்

தொன்ம மரபுகள் மாறாமல் வாழ்க்கையினை இயற்கையுடன் கட்டிப்போட்டு எக்கால சமுதாயத்திற்கும் வழங்கி தமிழின் நற்சுவை மாறாமல் பாதுகாக்கும் திறன் கவிதைகளுக்கு உண்டு. அதுப்போல தாய் மொழியின் மரபை கறந்து சுண்ட சுண்ட காய்ச்சி இலக்கியத் தேன் தடவும் கடமை கவிஞர்களுக்கும் உண்டு.

வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக அரசர்களின் துதிப்பாடிகளாய் திறிந்த புலவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக்கொண்டு தமிழை விற்பதும். இவர்தான் புலவர் அவர்தான் பாடவேண்டும் அல்லது இவர் பாடுவது தான் கவிதை என திருட்டு தீர்ப்புகள் எழுதுவதும். தொன்மத் தமிழில் நச்சுக்கலந்திடவுமே ‘நூல்’சிந்தனையாளர்கள் குலக்கல்வி முறையினை வலியுறுத்தி தோற்றனர்.

இலக்கணம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளைக் கொண்டு வடிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையினை பெரும்பாலும் பேசாமல் விட்டதாலோ என்னவோ மரபுக்கவிதைகள் நம்மை விட்டு தூரத்துப் புள்ளியாகிவிட்டன. இதோ இன்று மலர்கின்றன புதுக்கவிதைகள் மக்களின் இலக்கியம் மக்களுக்காவே மக்களால் பேசப்படுகிறது.ஆம் மரபுக்கள் உடைக்கும் காலமிது. தாயின் கருத்து தம்மக்கட்கு திணிக்கலாகாது. திணிப்பவர் முகத்திலேயே திணிப்புகளை உமிழும் திறன்மிகு புதியவர்கள் களமிறங்கினாலும் இலக்கியமென்பது இசுலாமியர்களை விட்டு விலகி நின்றிருந்தது ஒரு காலம .அதுவும் இசுலாமிய பெண்களுக்கு…!

கவிதை என்றாலே இவள் காதலைதான் எழுதுவாள் எனக்கூறி சாத்திவைத்த கதவுகள் உடைத்து தம் மக்கள் வாழ்ககை பதிவினை கவியாய் எழுதவந்தவர்தம் வரிசையில் இதோ தாய்மை நிறைந்த கவிதைகளை தருகிறார் பாசிலா ஆசாத்.

கெட்டா போய்விட்டது இசுலாம் அல்லது குழைந்துபோய்விட்டதமா பாசிலாவின் உறுதி. ஏவ்வடிவில் இருந்தாலென்ன அவர்தம் ஆற்றலுக்கேற்படி பெண்ணுக்கும் கருவிகளை வழங்கி களத்தில் இறக்குவதுதானே தமிழ் மரபு தமிழனின் மரபு இசுலாமின் எழுச்சி. இதோ பாசிலாக்களின் கருவிகள் கவிதைகள் வடிவிலாக..

இயற்கையின் மீதாகவும் வாழ்ககையின் மீதாகவும் பாசிலாவுக்கு நேசிப்புகள் இருக்குமளவிற்கு அவற்றை குறித்தான் வாசிப்புகள் குறைவாக இருப்பதாக கவிதைகள் சொல்லுகின்றன.தூரிதப்படுத்துவாரேயானால் இன்னும் மெருகோடு இலக்கிய வானில் சிறகு பரப்பலாம்.

பெண்னை வைத்துப் புட்டிவிட்டு அவள் கையில் திறவுகோலையும் தந்துவிட்டு ‘திறந்தால்’ என்ற சட்டத்தையும் திணித்துக்கொண்டிருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் பாசிலாவுக்கு பாதை போட்டு தந்த ஆசாத்துகளுக்கு (ஒரு ஓ போட்டேயாகவேண்டும்)நமது பாராட்டுகளை தந்தேயாகவேண்டும். அதே நேரத்தில் சிந்தனையும் செயல்பாடுகளும் நெறியாக்கமும் பாசிலாவினுடையது மட்டுமே பின் எதற்கு நூலில் பாசிலா ஆசாத் என்று பதிக்கணும். ஆணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பெண்கள் பலகோடி. இருப்பினும் எந்த ஆணும் தன் பெயருக்கு பின்னால் தன் துணைவியாளின் பெயரை போட்டுக்கொள்வதில்லையே இப்படியிருக்க பாசிலாக்கள் மட்டுமேன் ஆசாத்துகளுக்கு இலவச விளம்பரம் தரவேண்டும்.

எனதருமை ஆசாத்களுக்கு ஒர் வேண்டுகோள் இசுலாத்தில் பெண் பொத்திவைத்தும் போர்த்திவைத்தும் அடிமைபடுத்தப்படுகிறாள் என்ற மாற்றாரின் மக்கிப்போன சிந்தனைகளை கிழித்தெரிந்துவிட்டீர்கள். பட்டாம்பூச்சிகளை பறக்கவிட எண்ணிப்பின் ஏன் நூல் கட்டி பறக்கவிடணும். சிந்திப்பீர் சகோதரர்களே.

இறுதியாக ஒன்று சற்று உறுதியாகவும் கூட! எத்தனை கிளைபரப்பினும் ஆலமரம் விழுதுகளை மண்ணுக்கே அனுப்பும்.நாம் கற்ற கல்வி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதில் அய்யமில்லை. அதே வேளையில் தாய் மொழியில் பிற மொழி கலப்பென்பது நாம் பார்வையற்ற சமுதாயத்தை உறுவாக்குகிறோம் என்று பொருள்.

எதிர்கால சந்ததியினர் தனக்கென தாய்மொழியில்லாமல் தவிக்க விடுவது அவர்களை தாய்யில்லாமல் தவிக்க விடுவதைவிட கொடுமையாது என்பதை உணர்ந்து பாசிலா நிறைய பயின்றவர் எனினும் தன்னால் இயன்ற அளவிற்கு பிறமொழி கலப்பினை தவிர்ததற்கு பாராட்டுகள். மேலும் இயற்கையினை; நேசத்துடன் அழகுடன் மட்டுமன்றி அர்த்தத்துடனும் கவிதைகள் செய்து இலக்கிய வானில் பறக்க வாழ்த்துகள்.

தோழமையோடு

கவிமதி

No comments:

Post a Comment