Tuesday, December 04, 2012

ஜாதித் திமிரும் சுப.வீ. மீசை மயிரும்-மணிகண்டன்

ஜாதியை ஒழிக்க விடமாட்டோம். கட்டிப்பிடித்துக் காப்பாற்றுவோம். அது
எங்கள் பண்பாடு, ஆச்சா... போச்சா என்று கத்தியிருக்கிறார் பொங்கலூர்
மணிகண்டன்! எப்போ பார்த்தாலும் தப்புத் தப்பா செய்தியை எழுதுறதே பொழப்பு
மணிகண்டன் அவர்களுக்கு! கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடை செய்ய
வேண்டுமாம். கலப்புத் திருமணச் சட்டம்னு ஒண்ணு இருக்கா என்ன?

”தமிழன் - கன்னடன், தமிழன் - சிங்களன், தமிழன் - மலையாளி என்றெல்லாம்
பேசுகிறீர்களே! நாங்கள் ஜாதி பேசக் கூடாதா?” என்கிறார். காவிரி நீர்
உரிமையைத் தர மறுக்கும்போதுதான் தமிழன் - கன்னடன் பிரச்சினை எழுகிறது.
முல்லைப் பெரியாறுக்கு பிரச்சினை வரும்போது தான் தமிழன் - மலையாளி
பிரச்சினை வருகிறது. மனித உரிமை மறுக்கப்படும்போது தான் தமிழன் -
சிங்களன் பிரிவினை வந்தது. உலகில் எங்கும் பாதிக்கப்படும்போது,
அடையாளங்களுடன் திரள்வதை பிரிவினையாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், என்
ஜாதித் திமிர் பாதிக்கப்படுகிறது என்று கொழுப்பு வாதம் பேசுவதை உரிமைப்
பிரச்சினைகளோடு இணைத்துப் பார்க்க முடியுமா?

”சிங்களன் தமிழச்சியைக் கட்டிக் கொண்டால் சும்மா இருப்பீர்களா? நீங்கள்
மட்டும் தமிழன் - சிங்களன் என்றெல்லாம் பேசுவீர்கள். நாங்கள் ஜாதி பேசக்
கூடாதா?” என்று கேட்கிறார். சிங்களவர் - தமிழர் திருமண உறவு
கொள்ளக்கூடாது என்று எங்காவது பேசியிருக்கிறோமா? வல்லுறவு கொள்வதைக்
கண்டித்துத் தான் பேசியிருக்கிறோம் - குரல் கொடுக்கிறோம். புலிகளின்
அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி சிங்களர் என்பதும்,
தேசத்தின் குரல் ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் இணையர் ஆங்கிலேயர் என்பதும்
தெரியுமா இந்த அறிவிலிக்கு!

உலகில் எந்த இனத்தவரும் எந்த இனத்து மனிதர்களோடும் திருமணம் செய்து
கொள்வதைத் தடுக்க என்ன அவசியம்? இனிமேல் ஒருவரும் ஜாதி மாறி திருமணம்
செய்து கொள்ள விடமாட்டோம். இது எங்கள் சட்டம். மீறினால் ஏற்றுக் கொள்ள
மாட்டோம் என்கிறார் பொ.ம! உங்களிடம் யார் வந்து ஏற்றுக் கொள்ளச்
சொன்னார்?

படிப்பதால் தான் பெண்கள் காதல் வயப்படுகிறார்கள் - சொத்து இருப்பதால்
தான் காதலிக்கப்படுகிறார்கள் என்று பெண்களுக்கான சொத்துரிமையை நீக்கச்
சொல்லிப் பேசுகிற பிற்போக்கினும் கேடான பிற்போக்குக் கும்பலுக்கு மனித
இனத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை? தாலி அறுக்கச் சொல்லி நாங்கள்
போராட்டம் நடத்துகிறோம் என்று எந்த லூசு உங்களுக்குச் சொன்னது? தாலி
என்னும் அடிமைச்சின்னத்தை அகற்றிக் கொள்கிறோம் என்று அந்தப் பெண்களே
முன்வந்து அறுக்கும் போதும் அதை மேடையிலேயே தெளிவுபடுத்திய பின் தானே
அகற்றிக் கொள்கிறார்கள். இதை இப்போது மட்டுமல்ல... எப்போதுமே மக்களிடம்
நாங்கள் பேசுவோமே! எங்களுக்கென்ன தடை?

பெண்களின் சொத்துரிமையைத் தடுக்க வேண்டும். கல்வியைத் தடுக்க வேண்டும்
என்று நீங்களே உங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசிப் பாருங்களேன்? எதனால்
அடி விழுகிறது என்று அப்புறம் தெரியும்? கொங்கு வேளாளர் ஜாதிப் பெண்கள்,
படித்து நல்ல சம்பளத்தில் இருந்துகொண்டு தங்களுக்கு விருப்பமானவர்களைத்
திருமணம் செய்துகொள்வதால் தானே திடீரென உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறது.
இனி, போய்ப் பேசிப் பாருங்கள் - பெண்கள் படிக்கக்கூடாது என்று! உங்கள்
ஜாதிக் கட்டுமானம் உடைந்து நொறுங்குமிடம் அதுதான்! அதைத் தான் நாங்கள்
எதிர்பார்க்கிறோம்.

சுப.வீ.க்கு மிரட்டல் விடுகிற கோழைக் கும்பலே! சோற்றிலே விசம் வைத்துக்
கொல்லப்பார்த்த தன் சுயஜாதிக் கும்பலைத் கொள்கையால் வென்று காட்டிய
சுயமரியாதை வீரர் இராம.சுப்பையாவின் புதல்வரடா எங்கள் சுபவீ! இது கொள்கை
உரம் பாய்ந்த கட்டை... உங்கள் மிரட்டல் பேச்சுக்கெல்லாம் சுப.வீ.யின்
மீசை மயிர் கூட மடங்காது.

கொசுறுக் (உசுருக்) கேள்வி
இனிமேல் எங்களுக்கு அடிபட்டால், அறுவைசிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டால்
குருதிக் கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கவுண்டர் ரத்தம்,
வன்னியர் ரத்தம், உள்பட அவங்கவங்க ஜாதி ரத்தம் மட்டும் தான் கேட்போம்..
வேற ’ஈன’ ஜாதி ரத்தம் தேவையில்லை என்று குரு, ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து
பேதிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்கத் தயாரா? இல்லை ஒரே ஜாதி தானே என்று
A, B குரூப் ரத்தங்களைப் பற்றிக் கவலையில்லாமல் தங்கள் கும்பலுக்கு
ஏற்றுவார்களா?

No comments:

Post a Comment