Wednesday, January 28, 2015

தஸ்லிமா

புகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கிடையில் முளைத்த ஒரு வரலாற்று நெருஞ்சி...

பழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களின் கண்களை தோண்டும் காகித வேல்.சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் ஒரு இனப்புயல்.அச்சம்,மடம்,நாணம்,பயிற்பு என்ற குறுகிய சிறையுடைத்த எழுத்தாணி.

"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய
மக்களை அவமதிக்கிறதோ,
எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்"


என்பது தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்களின் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல்.
அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.கடந்த 500 ஆண்டுகாலம் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்ட இலக்கியத்தை கேட்டுக்கேட்டு ஆகா போட்டுக்கொண்டிருப்பவர்களை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்விக்கு தஸ்லீமாக்களின் இயக்கம் ஒரு போர்க்கருவி.

பூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது தஸ்லீமாக்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ தஸ்லிமாக்களின் பின்னால் தடிபிடித்து நிற்கிறேன். இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...

இனிமேல் அவர் பேசட்டும் நான் பொத்திக்கொண்டு ஒதுங்குகிறேன்.

--தோழமையோடு கவிமதி.

கிழக்கு பாகிஸ்தானின் மைகேன்சிங்கில் ஆகஸ்டு மாதம் 1962ல் பிறந்தார். 1971 க்கும் பின் அவர் பிறந்த இடம் பங்களாதேஷ் என தனி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அறிவியல் பாடத்தில் கல்வியைத் தொடர்ந்தாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம். அவர் வளர்ந்த சூழல் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாகும். தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். செஞ்சுதி (1978-1983) என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
தனது மருத்துவக் கல்லூரியின் இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 1984ல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர் எட்டு ஆண்டுகள் பொது மருத்துவமனையில் பணியாற்றினார்.

1986 ல் முதல் கவிதை நூல் வெளியானது. 1989 ல் வெளியான அவரது இரண்டாவது கவிதை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எழுதத் துவங்கினார். மதம், பாரம்பரியம், கட்டுபாடான பண்பாடு, என அனைத்து குறித்தும் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். தஸ்லீமாவின் எழுத்துகளில் உண்மையின் கடுமையும் கூர்மையும் ஆணாதிக்கத்தை கொஞ்சமும் தயங்காமல் தனது எழுத்துகளில் அம்பலப் படுத்திய தைரியமும் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரும்பினார்கள் பலர். வெறுத்தவர் சிலர்.

இதோ கோடி தஸ்லிமாக்களின் ஒற்றைக்குரல்...
------------------------------------------
எல்லை பிரக்ஞைக்கு திரும்பியது உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்
இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்த தலையணைகள் இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர் இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் பூ வேலைப்பாடு
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை

அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப்படுகிறாள்.
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையனைத்தும் தான்
உனது உலகம்.

மலிவாய் கிடைப்பன
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
மயிர்களில் பூச வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிசதிட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு
0
தஸ்லீமா நஸ்ரின்
0
தமிழில் : ஆனந்த செல்வி

தஸ்லீமாவின் தளம்: http://taslimanasrin.com/index2.html

No comments:

Post a Comment