Wednesday, January 28, 2015

இயற்கை நனைக்கும் கவிஞன்... மஸ்கட் பஷீரின் "பாலைவன பூக்கள்" கவிதைநூல் பார்வை

அழுத்தமே ஆதரமாகிபோன அவசர வாழ்க்கையில் அவரவர் தனித்த வாழ்வின் அழுத்த சூழல் பலரை அரபு நாடுகளுக்கு அள்ளிவீசியது. அவசரமாக சம்பாதித்து, அவரமாக சிலவு செய்து, அவரமாகவே சென்றுவிடும் நடைமுறைகளுக்கிடையில் அழுத்திக்கொண்டிருக்கும் வாழ்வினை அதன் போக்கில்விட்டு, நிகழ்கால நிதர்சனத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் இன்ப துன்பங்களை கவிதை செய்து அழுத்தத்தை குறைத்து வாழ்க்கையினை அழகாக்கிக்கொள்ள கவிஞர்களுக்கு மட்டுமே நேரம் கிடைக்கிறது. அத்தகையதொரு வாழ்க்கை நேசத்தின் கவிதை சமைப்பவராக மஸ்கட் பஷீர் தெரிகிறார்.
வெந்தோம், தின்றோம், சென்றோம் என்றில்லாமல் இயற்கையினையும், தான் சார்ந்த மனிதயினத்தின் அவலங்களையும் சிந்திக்க முடிகிறதென்றால் “வாழ்க்கையே நீ தரும் அழுத்தங்கள் புலம்பெயர் கவிஞர்களின் காலுக்கு தூசு” என்பதுபோல் அரபுநாடுகளில் வாழ்ந்தாலும் மறபு மாறாமல் தாயகம் நோக்கியே தங்களின் சிந்தனைகளை வைத்திருக்கும் கவிஞர்கள் இருக்கும் வரை “மெல்லத் தமிழ் இனி சாகும்” தருணங்களை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை. தாயக தமிழர்கள் கொன்றாலும் தமிழ்த்தூக்கி நிறுத்த நாமிருபோம் என்கின்றன பஷீரின் கவிதைகள்.

புலம்பெயர்ந்த தமிழன் ஒன்று கவலையில் மாண்டுபோவான் இல்லை கவிதையில் மீண்டுவாழ்வான் என்பதற்கிணங்க அரபுநாடுகள் உறுவாக்கிய கவிஞர்கள் ஏராளாம். இங்கே பொருள் கிடைக்கிறது வாழ்வின் இருளும் கிடைக்கிறது, பொருளை அனுப்பிவிட்டு இருளைவைத்து இலக்கியம் செய்ய எம்மால் மட்டுமே இயலும் என சமகால கவிஞர் பஷீர் அரபுநாட்டு கவிஞர்களின் வரிசையில் சேர்ந்துக் கொள்கிறார்.

தொகுப்பில் தொடக்க கவிதைகள் குறும்பா (ஹைக்கூ) வடிவில் சென்றாலும் போக போக கவிஞரின் கோபம் சமூக அளவங்களை நோக்கி நீள் கவிதைகளாக நீள்கின்றன.

தமிழகத்தில் மின்சாரத்தால்
மரணம் இல்லை
தாளார மின் தடை


தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இயற்கையாக வந்ததல்ல தமிழகம் முழுதும் கூடங்குளங்களை கொண்டுவர அரசு நடத்தும் அநாகரீக தடையிது. மின் தடையால் மரணங்கள் இல்லை என்று சொல்ல இயலாது ஏனெனில் கொலை,கொள்ளை பெருகி எப்போதும் அரசு கொடுமைக்காரனுக்கானது என்பதனை நிரூபித்தே வருகிறது.
தாய்மொழி மறுப்பில் தமிழனை விஞ்ச ஆளில்லை ஆனால் எல்லா மொழி காக்கைகளும் தமிழிலேயே உறவுகளை அழைக்கின்றன என்பதனை

தமிழைவிற்று
தடுமாறி ஆங்கிலம்பேசி
தற்பெருமை கொள்வதில்லை


என்று தமிழ் பெருமை சொல்கிறது காகம். ஆறறிவு என்று அலட்டிகொள்வதில் அவமானம் இல்லையோ நமக்கு, ஆம் பெரும் இன அழிப்பையே பொருமையாக வேடிக்கை பார்த்தவர்களாயிற்றே நாம், தமிழன் காக்கைகளிடம் கற்கவேண்டும் “காக்கை” குணம்.
இயற்கை வளங்களை அழிப்பதில் இந்தியா முதலிடத்தில் இருகிறதாம். இந்தியா என்றால் இயற்கை... இயற்கை என்றால் இந்தியா என்ற காலம் போய் இன்று இந்திய திருநாட்டில் காசுக்காக இயற்கைவளங்கள் விற்கப்படுகின்றன. காடுகள் வளர நம்மை அழிப்பதில்லை நாம் வளர காடு அழித்தோம். பூமியே பொருமைக்கு ஆதாரம் அதன் பொருமை எல்லையை கடந்ததால் பூமி தன்னை சரிபடுத்திக்கொள்ளவே நடுக்கத்தையும், மண் சரிவுகளையும், மழை வெள்ளத்தையும் துணைக்கு அழைக்கிறது நாம் தான் அதை “இயற்கை சீற்றம்” என மாற்றி பேசுகிறோம்.

வீட்டுக்கு ஒரு
மரம்வை
முடியாவிட்டால்
வெட்டும் கோடாரியை
சிறை வை..


என்கிறார் பஷீர். இப்படி இயற்கை விரோதியான மனிதனைதான் உத்ராகாண்டில் உலுக்கி எடுத்தது. இது இயற்கைத்தாய் நமக்கு அடித்திருக்கும் எச்சரிக்கை மணி. புரிந்தால் பூமியை நாம் ஆளலாம் புரியாததுப்போல் நடித்தால் பூமி நம்மை ஆளும். மண்தான் வெல்லும் என்பதுதானே இயற்கை மரபு.

புலம்பெர்யர்ந்த வாழ்க்கை தேடலில் பஷீர் புனைந்து புனைந்து கவிதை செய்திருப்பது அழகு. இலக்கியத்தின் அத்தனை மரபுகளையும் அறிந்துதான் இலக்கியம் படைக்கவேண்டும் என்கிற இலக்கிய திருடர்களுக்கு பல கவிதைகள் படைவிரட்டியாக அமைகின்றன. ஹைக்கூ தொடங்கி இலக்கியத்தின் எண்ண ஓட்டங்கள் விரிந்து எழுத்து ஓட்டங்கள் சுருங்கினாலும் இன்னமும் வசன கவிதைகளை வடிக்கும் கவிஞர்கள் வளமாகதான் இருக்கிறார்கள்.

அன்பர் பஷீரின் கவிதைகள் எண்ண ஓட்டத்தில் எழுத்து வேகமெடுத்தாலும் பரந்துகொண்டிருக்கும் வாழ்க்கை சூழலில் குறுங்கவிதைகளை படிக்கவே நேரம் இல்லாத வாசகனுக்கு நெடுங்கவிதைகள் கொஞ்சம் நெளியவைக்கலாம். எண்ணத்தை விரிவுபடுத்தும் பஷீர்கள் எழுத்தை சுருக்கி கருத்தை கவிதையாக்க வேண்டுமென்பது வாசகனாகவும், சமகால படைப்பாளியாகவும் என் கருத்து.

கவிதையையும், வாழ்க்கையையும் இயற்கையாக வாழத்தெரிந்த மஸ்கட் பஷீர் புலம்பெயர் கவிஞர்களில் ஒருவராகவும், தமிழிலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியாகவும் மிளிர தோழமையோடு வாழ்த்துகிறேன்.

கவிமதி
துபாயிலிருந்து...
10 ஆகஸ்ட் 2013

No comments:

Post a Comment