Monday, November 05, 2018

பரியேறும் பெருமாள்

ஆயிரம் கண்ணாடி ஓடுகளின் மேல் மல்லாக்க கிடத்தி தர தரவென்று இழுத்துச் செல்வதுபோல் இரணமிகுந்த “வலியினை” மீண்டும் என் முதுகில் தடவி பார்த்துக்கொண்டேன். என் தகப்பன் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு நடுத்தெருவில் ஓடுகையில். இந்திய கூட்டு மனசாட்சிக்கான மாட்சிமை தாங்கிய வலிகளை திணித்தே வளைந்த முதுகுகள் எங்களது என அந்த அப்பாவி தகப்பன் கையெடுத்து கும்பிட்டு ஓடும் காட்சி. 

கும்மிடுவது என்னெவோ அவனது கை தான் வெட்கி கூனி குறுகுவதோ இந்திய மதசார்புடைய மேட்டிமை மனிதர்களின் தலைகளும், சாதிய அடக்குமுறைகளுக்கெதிராக வாய்மூடி ஏட்டில் மட்டுமே கிடக்கும் சட்டங்களும் தான். அதில் ஒரு தலை என்னுடையதாகவும் இருக்கும் கையாலாகாத நிலைக்கு நானும் மெளன குற்றவாளிகாகவே நிற்கிறேன்.

“உன் கெளரவம் என்பது நான் உனக்கு போட்ட பிச்சை” என்கிற உரையாடலைவிட எதிர்வினை, எத்தனை அருவாக்கள் எடுத்து வீசினாலும், எத்தனை சட்டங்கள் போட்டு அடக்கினாலும் இயலாது.

சாதிய கெளரவம் என்பது தாழ்த்தப்பட்டு கிடப்பவரது அறவழி காக்கும் அமைதியால் மட்டுமே காக்கப்படுகிறதோடல்லாமல் மேல்சாதிய திமிரால் அடக்கப்பட்டு கிடக்கவில்லை. எங்கெல்லாம் சாது மிரல்கிறதோ அங்கெல்லாம் சாதியத்திமிர் மிரண்டு ஓடுகிறது என்பதனை வரலாறு நிரைய பதிவாகியிருக்கிறது.

ஒரு படத்தின் சில காட்சிகள் குறியீடாக வரலாம் முழுபடமே குறியீடாக வரமுடியுமா என்கிற கேள்வியை உடைத்தெரிந்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.  ”கருப்பி ஆணவக்கொலை” செய்யபடுகிறபோதும், இறுதிக்காட்சியில் ”ஒரு ஆணவநாய்” தற்கொலை செய்துக்கொள்ளுகிற போதும் இது வெறும் மூன்று மணிநேர சினிமா காட்சிகளின் குறியீடுகள் தான் என்று கடந்துவிட இயலாமல், சாதிய கொலைவெறியென்பது எப்படி நரம்பு மண்டலங்களில் புரையோடி கிடக்கிறது என்பதற்காக நாகரீக வளர்ச்சியின் அடையாளங்கள். ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே அது காதல் தான் அவர்கள் ஓடத்தான் போகிறார்கள் அதுவும் இருவேறு சாதிகள் இங்கே எப்படி நண்பர்களாக கூட இணைய இயலும் என்கிற மனதில் படிந்திருக்கும் அழுக்கு சுவர்களை தகர்த்தெரிவதிலே அப்படியொரு நுணுக்கத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர். 

சாதிய அழிவு என்பது எவன் கையில் அந்த கறை படிந்திருக்கிறதோ அதை அவன் அழித்துக் கொள்ளாதவரை தானே அழியாது அல்லது எதனாலும் அழிக்க முடியாது. கண்ணாடி குவளைக்கும் சிரட்டைக்கும் இடையேயான சாதிவெறியை சொல்வது கடந்தகால வலியெனில் ஒரே வகை கண்ணாடி குவளைகளில் சரிசமாக உட்கார்ந்து குடிக்கும் இருவேறு வகை தேனிரில் அப்பட்டமாக என்றும் இருக்கத்தான் செய்கிறது சாதிய வெறுப்புணர்வு என்பதை இதைவிட தெளிவாக எப்படி காட்ட இயலும்?.

பரியேறும் பெருமாள் என்பது வெறும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் இடைசாதியர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமுமல்ல, தீர்வுமல்ல. தலித்தல்லாதோர் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் அத்துணை சாதி, மத வெறியர்களுக்கும் பொதுவான பாடம். 

தன் சாதி பெண்களோடு பழகாத வரை தாழ்த்தப்பட்டவனை அரவணைப்பதாக காட்டிக்கொள்ளும் அய்யோக்கியர்கள் ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் மனதுக்குள் கைதட்டிக்கொள்வதை உணர தயங்கவில்லை நாம். தங்கள் சாதி, மதம் சார்ந்த விமர்சனங்கள் எழாதவரை மெளனம் காக்கும் இவன்களைவிட குலசாமிக்கென்று கொலை செய்பவன் நேர்மையான சாதிவெறியனாகவே தெரிகிறான். மற்றவெனெல்லாம்
மறைந்திருந்து நயவஞ்சக நாடகமாடும் நல்லவன்கள். அப்படிபட்ட நல்லவர்களால் தான் சொல்ல இயலும் “பரியேறும் பெருமாளில்” என்ன இருக்கிறது என்று. தன் சொந்த சாதிக்கெதிராக பேசாதவரை விமர்சகனை அறிவுசீவிகளாக அரவணைத்துக்கொள்வதில் வள்ளவர்கள் தான் இவ்வகையிலான சாதியை ஒழிக்க புறப்படுகிற நடுநிலை நாயகர்கள்.

”பரியேறும் பெருமாள்” தமிழ் சினிமாவின் மந்த புத்தியை கிளரி எதை சினிமாவாக்க வேண்டும் என்று ”தேவர்மகன்”களுக்கு கிடைத்திருக்கும் இந்நூற்றாண்டின் குட்டுகள். 

*கவிமதி*
துபாயிலிருந்து
==============================================
ஆயிரம் முட்டாள்களிடம் விவாதிப்பதை விட ஒரு புத்தகம் படிப்பது மேல்
----------------------------------------------------
www.kavimathy.blogspot.com
www.kavimathy.wordpress.com

No comments:

Post a Comment