Saturday, April 26, 2008

அறிவியலா? ஆன்மீகமா?

உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்” என்று எங்கோ படித்த ஒரு செய்தி இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர்.

எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாம் ஒரு சாரரருக்கு மட்டுமே உரியவகையில் உள்ளது, மத விடுதலையும், பெண் விடுதலையும் தான் உண்மையான மனித விடுதலை என்று மதங்களில் உள்ள அத்துனை திள்ளு முள்ளுகளையும் எடுத்துக்கூறி மதங்களின் தலையில் மாறி மாறி செருப்பால் அடித்த பெருமை எம் தந்தை பெரியாருக்கே சேரும். அவர் வாங்கிக்கொடுத்த கல்வியாலும், அறிவாலும்தான் இன்று நாம் ஒரு வகையிலாவது நம்மை அடிமைபடுத்த முயலும் சாதிகளை எதிர்கொள்ள துணிவு வருகிறது.

மனித இனத்திற்கான தேவைகளையும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அறிவியலையும் இதுவரை வந்த எந்த மதமும் கற்றுதரவில்லை. ஏன் ஒரு குண்டூசியைக்கூட இதுவரை எந்த ஆன்மீகவாதியும் கண்டுபிடித்ததில்லை. மாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்றவகையிலும் தான் வாழ்ந்த சூழலிற்கும் தகுந்தாற்போல் பல புரட்சிகளை உருவாக்கி ஒரு மதத்திலிருந்து வேறான்றிற்கு மாற்றிய பெருமையே உண்டு எனலாம்.
இருந்தும் மனிதன் தன் மதக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தன் உடல், பொருள், ஆவி, நேரம் என அத்தனையும் இந்த மனித சமூகத்திற்காக அர்ப்பணித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தால், நோகாமல் நொங்கு தின்பதுபோல் எல்லாம் என் மதத்தை படித்துதான் கண்டுபிடித்தான் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வதில் ஒன்றையொன்று சலைத்தவையில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் அதே விஞ்ஞானி சொல்லும் கருத்துக்களை ஏற்காமல் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டம் சூட்டி, ஊரைவிட்டு அடித்து விரட்டுவதும்,அவரின் கண்டுபிடிப்புகளை தீக்கிரையாக்குவதிலுமே குறியாக இருந்தவனெல்லாம்; பின்னால் என் மதத்தின் அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக்கொள்வதுதான்.

மனித இனத்திற்கு தன் கண்முன்னால் நடக்கும் அநியாயத்தை கண்டு அவற்றிக்கெதிரான சாட்டைகளை சுழற்றுவதும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவுச் செய்வதும்தான் எழுத்தாளர், அல்லது பேச்சாளர்களின் முக்கிய பணி. எழுத்தாளன் அல்லது பேச்சாளன் என்றானப்பிறகு எந்த சாதி அடையாளமோ, நடுநிலையோ இருக்கக்கூடாது.(நடுநிலையென்பது பெரும்பாலும் வாதி பிரதிவாதி இருவரும் மனம் கோணக்கூடாது என்பதாகவே அமைகிறது. ஒரே நிலையென்ற உண்மை நிலைதான் நன்று).

நான் கண்டவரையில் எந்த கூட்டத்திலும் குர்ஆன் தவறானது அதில் அந்த இடத்தில் அப்படியிருக்கிறது இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என கிருத்துவ பேச்சாளர்கள் சொல்வதில்லை. எங்காவது, விவாதங்கள் வந்தால் ஆதாரங்களுக்காக சொல்லியிருக்கக்கூடும். அப்படியும் தவறானது என்றதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக எங்கெல்லாம் முஸ்லீம்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் பைபிள் ஈவு இரக்கமின்றி கட்டுக்கதை, பொய்கதையென வார்த்தைகளாலேயே கிழித்தெரியப்படும். பேசும் அனைவரும் மார்க்கத்தை கரைத்து குடித்துவிட்டு அடுத்தவன் வாயிலும் ஊற்ற காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்கிற குர்ஆன் வாசகத்தை மட்டும் வாகாக மறந்துவிடுவார்கள் போலும். கிருத்துவ பேச்சாளர்கள் பைபிள்தான் சிறந்ததது அதை எப்படி பின்பற்ற வேண்டும் என மாறி மாறி விளக்கம் சொல்வார்களே ஒழிய குர்ஆனையோ மற்ற புனித நூல்களையோ தவறாக பேசியதை நான் பார்த்ததில்லை. இப்படி எழுதுவதால் உடனே கிருத்துவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான், இதற்காகவே வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றோ, என் நதிமூலம் தேடி அலைபவர்களும் இருக்கக்கூடும்.

இரண்டு கிருத்துவர்கள் மேடைபோட்டு பைபிளை மாறிமாறி விமர்சனம் செய்வதோ, ஒரு கிருத்துவ மத போதகர் சொல்லும் வசனங்களை மற்றொருவர் எப்போதும் விமர்சனம் செய்வதோ கிடையாது. கிருத்துவத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அதை குறித்து மேடைபோட்டோ, தொலைகாட்சியிலோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதில்லை என்பதை கண்கூடாக அறிவோம். (இந்துக்களும் அப்படியே) அதே நேரத்தில் முஸ்லீம் மத தலைவர்களோ ஒருவரை மற்றவர் குறைகூறாவிட்டால் அன்றைய பொழுது அவர் எதுவும் அமல் (நன்மை) செய்யவில்லை என்பது போல நடந்துகொள்வர். இந்த கூத்துகளை அரங்கேற்ற அன்றாடம் தனித்தனி முஸ்லீம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் என அத்தனை அறிவுசார்ந்த ஊடகங்களும் பயன்படுத்தபடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவர்கள் தான் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளும் உத்தம சீலர்கள். ஆனால்
நீங்கள் அந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனி எந்த தூதர்வந்து சொன்னாலும் உணரமாட்டார்கள். அதே விமர்சனத்தை மற்ற யாராவது சொன்னால் உடனே அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தை இவர்களின் சட்டை பைகளிலேயே வைத்துக்கொண்டு அலைவார்கள் போலும்.

அடுத்து இந்த மத நல்லிணக்கம் பற்றி பார்ப்போமா! இந்த மதநல்லிணக்கம் என்பதே ஒரு பெரிய அயோக்கியத்தனம் என்பது தான் உண்மை. மதங்களே வேண்டாம் நாமெல்லாம் மனிதர்களாக இருப்போம் என்று சொல்ல எந்த மதவாதிகளுக்கும் நெஞ்சில் மஞ்சா சோறு கிடையாது. எல்லாம் பதவியும் பணமும் படுத்துகிற பாடுதான் யாரைவிட்டது! இவர்களுக்கு எவனையாவது தனக்கு கீழே இழிவானவனாக வைத்திருக்கவும், தங்கள் மதத்தைவிட அடுத்தவன் மதம் குறைவானது என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கவும் எதாவது இருக்கவேண்டுமல்லவா அதனால் தான் அரசியல் அயோக்கியர்களுக்கு இந்தியதேசியம் என்பதுபோல், மதவாதிகளுக்கு மதநல்லிணக்கம் என்கிற காயடிக்கும் இயந்திரம் எப்போதும் தேவைபட்டுக்கொண்டே இருக்கும்.

ஆனால் நம்மையெல்லாம் வாய்பிளக்கவைக்கும் அளவிற்கு சமீபத்தில் சில நிகழ்வுகளில் சில முஸ்லீம் பிரச்சாரர்கள் (மத நல்லிணக்கமோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை) உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்கள் முன்புகூட முஸ்லீம் அறிஞர் ஒருவரின் இஸ்லாம் குறித்தான மாற்று மதத்தாரின் வினா விடை நிகழ்வினை குறுந்தகடில் காண நேர்ந்தது. அதில் மாற்றுமதத்தினர் கேட்கும் வினாக்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியிலிருந்தும் ஆதாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே முஸ்லீம் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில்; பைபிளையும் வாரிக்கொண்டிருந்தார். எனினும் சில விடைகளில் வழக்கம்போல் துணைக் கேள்விகள் எழுந்தாலும் நமக்கு அவரளவுக்கு தெரியாது என்கிறதாலோ என்னவோ சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாற்று மத சகோதரர்கள்!

அப்படியே ஒரு மாற்று மதத்தினர் இராமன் பற்றியும், பகவத்கீதை பற்றியும் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவருக்கு என்ன ஆனாதோ தெரியவில்லை. இராமனும் இறைத் தூதர்களில் ஒருவரே, அவருக்கும் வேத நூல் இறக்கப்பட்டிருக்காலம் அது பிறகு பைபிள் போல் பலரால் திருத்தப்பட்டிருக்கலாம் என தனது சப்பைக்கட்டுகளை சபையில் எடுத்துரைதார். கேட்டவரும் அதுதான் நம் இராமனை தூதுவர்களில் ஒருவர்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாரே என அமைதியாக உட்கார்ந்துவிட்டார். இராமன் என்பவன் குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒரு இறைத்தூதர் என்பதை இத்தனை பெரிய இஸ்லாமிய மத போதகரே சொல்லிவிட்டபடியால் இனி பா.ஜ.கவினருக்கு வேலை மிச்சம். இப்படிக் கூறாவிட்டால் இனி தனது கூட்டத்திற்கு மாற்று மதத்தினர் வராமல் போய்விடக்கூடுமோ அல்லது மத நல்லிணக்கணத்திற்கு மாசு பட்டுவிமோ என்கிற கவலைபோலும்.

இராமனும் இறைத்தூதர்தான், அல்லாவால் அனுப்பபட்ட நபிதான் என இந்து முன்னணியினர் சொல்லியிருந்தால் அதை ஆதரித்து லட்சத்து இருபத்து நாளாயிரம் நபிமார்களில் இராமனும் ஒருவன்தான் என முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா! இது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கிறது. இராமன் என்பவன் ஒரு நாவலின் கதை நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அது. அதை ஏற்று ராமன் நேரடி கடவுள் அல்ல என்று பரமஹம்சர் போன்ற புராணங்களை கரைத்துக் குடித்தவர்களே (அவர்களுக்குள் ஆட்சிபீடத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு) வாக்குமூலம் கொடுத்துக் கொண்டலையும் இந்த காலகட்டத்தில். இவரைப் போன்றவர்கள் உளர தொடங்கினால் எதிர்காலத்தில் இதைவைத்தே இந்துத்துவாவை வளர்க்க மாட்டார்களா.

இந்த மார்க்க அறிஞர் சொன்னால் சரியாகதானிருக்கும் என்று பிற முஸ்லீம் பேச்சாளர்களும் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. இதில் எல்லோருக்கும் உடன்பாடோ!
மேலும் அந்த மார்க்க அறிஞர் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சமயம் ‘வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு இப்படி பேச்சாளராகிவிட்டீர்களே’’ என்று ஒருவர் வினா கேட்க ஆம் நான் இப்போதும் வைத்தியம்தான் பார்த்துக் கொண்டலைகிறேன் இது இஸ்லாம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கான வைத்தியம் என்றார். அது அறிவிப்பூர்வமான பதிலா இல்லையாவென்பதை மக்கள் கவனத்திற்கு விட்டுவிடுவோம்.

ஆக்கப்பூர்வமாக பார்த்தோமானால் புது புது நோய்கள் பரவிவிட்ட இந்த காலகட்டதில் மருத்துவ துறையில் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கையில் (இவர்களும் மதவாதிகள் இல்லையென்பதை கருத்தில்கொள்க) இவரைப் போன்ற சிறந்த மருத்துவர் என்று பேரெடுத்தவர்கள் குறைந்த அளவில் அவர்களுக்கு ஆலோசனைகளாவது வழங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டு கிடைப்பவர்களை எல்லாம் பிடித்து முஸ்லீமாக்கினால் நாளடைவில் மதம் சார்ந்த பிரிவினைகள்தான் வளர்ந்துக் கொண்டே போகுமல்லவா! இதே முறையில் எல்லா மதவாதிகளும் தங்கள் மதங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டலைவதனால் தான் ஆங்காங்கே மத கலவரங்கள் வெடித்து மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். இப்போது இவர் பாணியில் தமிழகத்திலும் சில முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிரச்சாரத்தை கேட்டு மதம் மாறுகிறவர்களைவிட சக முஸ்லீம்களின் நடத்தைகளை பார்த்து மதம் மாறினால் தான் சிறப்பு என்பது நபித்தோழர்களின் கருத்து எங்கே இந்த மதவாதிகளில் யாராவது தங்கள் வாழ்க்கையினை இஸ்லாமிய முறைபடிதான் வாழ்கிறேன் என்று சொல்லமுடியுமா? இல்லையென்கிற பதில்தான் வருமெனில் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது முஸ்லீம்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டு பிறகு பிற மதத்தவரை திருத்தலாம்!இல்லையா.

மக்கள் விரும்புவது புதிய புதிய மதங்களையல்ல அமைதியை. எல்லா மதத்தவர்களும் அவசர அவசரமாக அவரவர் மதங்களுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்த்தால், அரசியல் கட்சிகள் தோன்றுவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? இதன் உள் நோக்கம் என்ன? என்கிற கேள்விகள் பல எழுகின்றன. மனிதயினத்தில் மாற்றம் என்பது மதங்களற்ற மனிதயினம்தான் அதில்தான் அமைதி இருக்கிறது.மதங்களை பரப்புவதை விட்டு அந்நேரத்தில் பத்து எழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை போதித்திருந்தால் இன்று பத்து மருத்துவர்கள் கிடைத்திருப்பார்களே. என்றும் மக்களுக்குதேவை ஆன்மீகமா? அறிவியலா? என்பதனை உணர்ந்து முடிவெடுக்கவேண்டியது மதவாதிகள்தான்.

3 comments:

  1. nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil paddathu
    waalththukkal

    anpudan
    rahini

    ReplyDelete
  2. nalla nalla aakkam ulla pakkam inruthaan en kanil paddathu
    waalththukkal

    anpudan
    rahini

    ReplyDelete
  3. அன்பின் நண்பர் கவி மதி அவர்களுக்கு தங்களின் ஆக்கம் பார்த்தேன், நீங்கள் ஒரு பெரியார் தாசன் என்பது நன்றாக புரிகிறது, அது தவிரவும் பொதுப் படையாக பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இந்து மதம், கிறிஸ்துவா மதம், இஸ்லாம் மதம், பவுத்த மதம் போன்றவற்றை படித்திருக்கலாம், அல்லது எழுந்தகமாக சில குறிப்புகளை ஆங்காங்கே படித்திருக்கலாம், அல்லது அடுத்தவர் சொன்னதை கேட்டிருக்கலாம், எப்படியோ நீங்கள் பெரியாரை நியாயப் படுத்த ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும், உங்கள் பார்வையில் அது நியாயமாகக் கூட
    இருக்கலாம், நீங்கள் சொல்வது போல அந்த இஸ்லாமிய மதப் பெரியாரின் வாதங்களில் பிழை இருப்பதாகவே கொள்ளுவோம், நீங்கள் சொன்னது போலவே மனிதம் நிறைந்த, மனிதத்தை நேசிக்கின்ற ஒரு மதம்தான் இன்றுகளில் தேவை,

    கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் கவி மதி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லுகின்ற கிருத்துவர்கள் பிதா,சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள்களை சிலரும் ஏசு கிறிஸ்துவின் தாய்யை கடவுளாகவும், இன்னும் சிலர் புனித பவுலை கடவுளாகவும், சிலர் அந்தோனியாரை கடவுளாகவும் கொள்கின்றனர், இதில் எவர் உண்மையான கடவுள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திரம் எங்கே போனது, இனி கடவுளுக்கான உருவம் வேறு சந்திகளிலும், பொந்துகளிலும் விரவிக்கிடக்கின்றன, காக்கையும் குருவியும் எச்சம் போடவா இந்தக்கடவுள் சிலைகள், இந்து மதம் பற்றி பேசவே தேவை இல்லை முப்பத்து முக்கோடி கடவுள்கள், இன்னும் சில மதங்கள் மனிதனை கடவுளாக கொள்ளும் அவலம், சாமியார்களும், பூசாரிகளும் கடவுளாக உருமாறிப் போய் விட்ட அவலம்.

    இந்த வகையில் இஸ்லாம் மட்டும்தாம் ஒரேகடவுள் என்றும் அவனது இறுதி தூதர் முஹம்மது என்றும் சொல்கின்றது, முஸ்லிம்களுக்கிடையில் அல்லாஹ் இரண்டு என்றும், முஹம்மது நபி இல்லை என்றும் எப்போதும் நாம் சண்டை
    பிடித்ததில்லை, ஆனால் நடைமுறை வாழ்கை இல சில கருத்துவேறுபாடுகள் முளைப்பதுண்டு மெய்யிலே இதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை, இஸ்லாத்தை பூரணமாக படித்திருந்தால் பெரயார் கூட இஸ்லாமிய வாழ்க்கையைத்தான் தேர்ந்து எடுத்திருப்பார்,

    நண்பரே ஒரு உண்மையை நீங்கள் நடுநிலைமையில் இருந்து பார்க்க வேண்டும் பெரியார் ஒரு இந்துவாக இருந்தவர், சாதியப் பேய் தலைவிரித்தாடிய அவலத்தை கண்டித்த பெரியார் அதை எதிர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது அவர் கடவுள் மறுப்புக் கொள்கையை தனது பிரச்சாரமாக மேற்கொண்டார், பெரியாரின் தத்துவங்கள் மிகச்சிறந்தவை அவர் சாதிய ஒழிப்பு பற்றியும்,பெண் விடுதலை பற்றியும் மிக நுண்ணிய கருத்துக்களை சொன்னவர், நீங்கள் பெரியாரை ஒரு நாத்திகராக கருதலாம், நான் அவரை ஒரு தத்துவ வாதியாக கருதுகிறேன், பெர்யரின் கொள்கை என்ன சமத்துவம், அதாவது ஏழை, பணக்காரன், பண்டிதன், பாமரன், அரசன், ஆண்டி இந்த வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பது தானே, இதைத்தானே இஸ்லாம் சொல்கிறது எல்லா மனிதர்களும் சம மானவர்களே அவர்கள் உயர்வது தாழ்வதும் அவரவர் செயட்பட்டினைப் பொறுத்தே. எங்களிடம் குல வேற்றுமை இல்லை சாதியப்பிரச்சினை இல்லை ஆனால் ஒன்று இஸ்லாமியப் பெயரிலே தங்களை முஸ்லிம் என்று அடையாளப் படுத்திக்கொள்ளும் அநேகர் இந்த இஸ்லாமிய வரையறைகளை மீறியவர்கலாகவும் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கு நல்ல உதாரணங்களாக நாம் நாளொன்றுக்கு ஐந்து நேரம் மஸ்ஜிதில் தொழுகின்ற தொழுகை, இங்கே மஸ்ஜிதுக்குள் அவனுக்கு நுழைய முடியாது, இவனுக்கு நுழைய முடியாது என்று யாருக்கும் சொல்லவோ, தடுக்கவோ முடியாது இது யாவரும் சமம் என்ற தத்துவம் சொல்லப்படுகின்றது, இதுமட்டுமல்ல நண்பரே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமான மதம், அல்-குர்-ஆனை முஸ்லிம்கள் மட்டும் தான் பாவிக்க வேண்டும் என்ற பிழையான கருது கோலும், பிரமையும் உருவாக்கப்பட்டு உள்ளது, இதற்கு சில முஸ்லிம் பிரகரிதிகளும் காரணம் ஆனால் நண்பரே இஸ்லாம் பொதுவான மதம், அல்-குர்ஆன் பொதுவான நூல் இஸ்லாத்தையும், குர்ஆனையும் யாருக்கும் படிக்கலாம், ஆராயலாம்.

    ஒரு வாதத்திக்காக நீங்களும் கொஞ்சம் இஸ்லாத்தையும், குர் ஆனையும் ஆராய்ந்து பாருங்களேன்,

    நண்பரே இஸ்லாத்தில் பலவந்தம் இல்லை,

    ReplyDelete